தினமும் கிடைக்குது 300 கிலோ மகசூல்!

2 weeks ago 5

காஞ்சிபுரம் மாவட்டம் பிச்சிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பட்டுமுடையார்குப்பத்தில் எங்கு திரும்பினாலும் பசுமையான வயல்வெளிகள்தான். நெல் தொடங்கி கரும்பு, சோளம், மஞ்சள், காய்கறிப் பயிர்கள் என அனைத்து வகையான பயிர்களும் இங்கு சிறப்பான முறையில் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்த ஊரில் நான்காவது தலைமுறையாக விவசாயத்தில் அசத்தி வரும் சுரேஷ் தனித்துவமாக கவனம் ஈர்க்கிறார். தனக்கு சொந்தமான நிலம் மட்டுமின்றி கூடுதலாக சிலரின் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து அதில் 10க்கும் மேற்பட்ட காய்கறிப் பயிர்களைச் சாகுபடி செய்துவருகிறார். இதன்மூலம் தினமும் ஒரு கணிசமான லாபமும் பார்த்து வருகிறார். தனது காய்கறித் தோட்டத்தில் அறுவடைப் பணிகளில் மும்முரமாக இருந்த சுரேஷை ஒரு காலை வேளையில் சந்தித்தோம்.

“ அப்பாவோடு சிறுவயதில் வயலுக்கு வருவேன். அவருக்குத் துணையாக சில வேலைகளைப் பார்ப்பேன். தற்போது அவர் இல்லை. ஆனால் அவரிடம் கற்றுக்கொண்ட விவசாய நுணுக்கங்கள் எனக்குத் துணையாக இருக்கின்றன’’ என தனது தந்தையின் நினைவுகளோடு பேச ஆரம்பித்தார். “ என்னதான் விவசாயக் குடும்பமாக இருந்தாலும் அந்த காலத்திலேயே என்னை பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்க வைத்தார்கள். அப்பாவோட நிலம் விவசாயத்திற்கென்று ஐந்து ஏக்கர் இருந்தது. அதை நானும் எனது சகோதரர்களும் பிரித்துக்கொண்டு தற்போது அவரவர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம். எங்கள் பகுதியில் பெரும்பாலும் அனைவருக்கும் விவசாயம்தான் தொழில். 35 வருடங்களாக நான் விவசாயம் பார்க்கிறேன். எனது சொந்த நிலம் போக 30 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து அந்த நிலத்திலும் விவசாயம் செய்கிறேன். 25 ஏக்கரில் நெல். மீதமுள்ள 5 ஏக்கரில் காய்கறிப் பயிர்கள். இதுதான் தற்போது நான் செய்யும் விவசாயம். மிளகாய், நாட்டுக் கத்தரி, உஜாலா கத்தரி, வெண்டைக்காய், அவரை, காராமணி, புடலை, பீர்க்கன், சுரைக்காய், நீட்டு சுரைக்காய், பொதினா என தற்போது 10 வகையான காய்கறிகளைச் சாகுபடி செய்கிறேன்.

என்னுடைய சாகுபடி முறை எப்போதுமே பாரம்பரிய முறையாகத்தான் இருக்கும். அதாவது, என்னதான் விவசாயத்திற்கென்று பல வகையான இயந்திரங்கள் வந்தாலும் அதை பெரிதாக பயன்படுத்தாமல் பழங்கால முறைகளைக் கையாண்டு விவசாயம் செய்கிறேன். அதேபோல, முடிந்தளவு இயற்கையும் செயற்கையும் இணைந்த விவசாயமாக செய்கிறேன். முழுவதும் இயற்கை முறையில் விவசாயம் செய்தால் பெரிய அளவில் மகசூலும், வருமானமும் கிடைக்காது. அதேபோல, முழுவதும் செயற்கை முறையில் விவசாயம் செய்து, அதனை மக்களுக்கு விற்பனை செய்ய மனம் இடம் கொடுக்கவில்லை. அதனால் என்னென்ன அளவில் என்னென்ன விவசாயம் செய்ய முடியுமோ அதனை செய்துவருகிறேன்.

அதேபோல, அடுத்த வருடம் எனது நிலத்தில் என்ன விவசாயம் செய்ய வேண்டும் என இந்த வருடமே திட்டமிடுவேன். அதற்கு தகுந்தபடி நிலத்தைத் தயார் செய்வேன். உதாரணத்திற்கு இந்த வருடம் கத்தரி விதைத்திருக்கிற நிலத்தில் போன வருடமே தக்கப்பூண்டு விதைத்து அதை அதே இடத்தில் மடக்கி உழுதேன். பின் அந்த இடத்தில் கத்தரி விதைத்து அறுவடை செய்து வருகிறேன். பெரும்பாலும் எனது நிலத்தில் இருக்கிற அனைத்துக் காய்கறிகளுக்கும் அடி உரமாக தக்கைப்பூண்டு மற்றும் தொழுஉரம்தான் கொடுக்கிறேன். அப்போதுதான் செடியின் வீரியம் நல்ல முறையில் இருக்கும். பச்சை மிளகாய் 20 சென்ட், கத்தரி அரை ஏக்கர், நாட்டுக்கத்தரி 2 சென்ட், கொத்தவரை 20 சென்ட், காராமணி 20 சென்ட், பந்தல் காய்கறிகள் அரை ஏக்கர் என பிரித்துப் பிரித்து பயிரிட்டு இருக்கிறேன். இன்னும் சில பயிர்களையும் சாகுபடி செய்து அறுவடை செய்து வருகிறேன்.

காலையில் 5.30 மணிக்கு எனது விவசாய வேலைகள் தொடங்கும். காய்கறிகளை அறுவடை செய்து, வண்டியில் ஏற்றி அனுப்புவதற்குள் மதியம் 1 மணி ஆகிவிடும். பிறகு, மாலை நேரங்களில் தோட்டத்தில் களை எடுப்பது, மருந்து தெளிப்பது என வேலைகள் செய்வேன். என்னுடைய தினசரி விவசாயப் பணி இதுதான். எனக்குத் துணையாக எனது தோட்டத்திற்கு நான்கு நபர்கள் தினமும் பணிக்கு வருவார்கள். நாங்கள் அனைவரும் சேர்ந்துதான் இவ்வளவு வேலையையும் செய்வோம். கத்தரியைப் பொருத்தவரை நட்டு 45வது நாட்களில் இருந்து பலன் கொடுக்கத் தொடங்கிவிடும். அதேபோல், மிளகாயும் 2 மாதம் கழித்து காய்க்கத் தொடங்கிவிடும். தற்போது எனது தோட்டத்தில் அனைத்துக் காய்கறிகளும் அறுவடை செய்யப்படுகிறது. எனது தோட்டத்தில் சாதாரண நாட்களில் மொத்தம் 300 கிலோ காய்கறிகள் வரை அறுவடை செய்வோம். நல்ல விளைச்சல் வரும் நாட்களில் 500 கிலோவிற்கு மேலும் தினசரி மகசூல் கிடைக்கும். கத்தரியில் மட்டுமே ஒரு நாளைக்கு 300 கிலோ வரை அறுவடை செய்திருக்கிறேன். அந்தளவிற்கு எனது தோட்டத்தில் காய்கறியில் நல்ல மகசூல் கிடைக்கிறது. காய்கறிகள் போக மீதமுள்ள இடத்தில் வருடத்திற்கு ஒரு போகம் மட்டும் நெல் பயிரிடுவேன். அதிலுமே பாதி அளவுக்கு பாரம்பரிய நெல் பயிரிடுவேன். எனது விவசாயத்தில் இதுவரை நஷ்டம் வந்ததில்லை. அதற்கு காரணம் நான் உழவு செய்வது தொடங்கி, விளைச்சலை விற்பனை செய்வது வரை அனைத்தையும் தெளிவாக திட்டமிடுவதுதான்’’ என தெளிவாக பேசுகிறார்.
தொடர்புக்கு:
சுரேஷ்: 94451 17453

 இந்த வயலில் சாகுபடி செய்யப்படும் காய்கறிகளுக்கான விதைகள் வெளியில் எங்கும் வாங்கப்படுவதில்லை. கடந்த வருடம் கிடைத்த காய்கறிகளில் இருந்து தரமான விதைகளை சேகரித்து நாற்று உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு தோட்டத்தில் விளைந்த தரமான விதைகளில் இருந்து நாற்று உற்பத்தி செய்யப்பட்டு நடவு செய்யப்படுவதால் இந்த வயலில் பெரியளவுக்கு நோய்த்தாக்கம் இருப்பதில்லை என்கிறார்கள்.

 தோட்டத்தில் இருந்து தினமும் அறுவடை செய்யப்படும் காய்கறிகள் பேருந்து மூலமாக சென்னை வானகரம் காய்கறி மார்க்கெட்டுக்கு அனுப்பப்படுகிறது. தொடர்ந்து ஆறு வருடங்களாக ஒரே வியாபாரியிடம் காய்கறிகளை விற்பனை செய்வதால் சரியான விலைக்கு தனது காய்கறிகளை விற்க முடிகிறது. அறுவடை செய்யப்பட்டு அதே நாளில் வியாபாரிகளின் கைக்கு காய்கறிகள் செல்வதால் மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது என்கிறார் இந்த விவசாயி.

The post தினமும் கிடைக்குது 300 கிலோ மகசூல்! appeared first on Dinakaran.

Read Entire Article