தினமும் கண்ணை கவனி!

4 weeks ago 7

நன்றி குங்குமம் டாக்டர்

சென்ற நூற்றாண்டை எலெக்ட்ரிகல் யுகம் என்று சொன்னால் இந்த நூற்றாண்டை எலட்ரானிக்ஸ் யுகம் என்று சொல்லலாம். எலெட்ரானிக்ஸ் துறையில் ஏற்பட்ட புரட்சி நம் நவீன வாழ்வையே அதிரடியாக மாற்றி அமைத்துள்ளது. இன்று கைகளில் செல்போன் இல்லாதவர்களே இல்லை. டி.வி., கணிப்பொறி, லேப்டாப், டேப்லெட் என விதவிதமான வடிவங்களிலான எலெக்ட்ரானிக்ஸ் ஒளிர்திரைகளைப் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். பின்னிரவு இரண்டு மூன்று மணி வரை கொட்ட கொட்ட விழித்தபடி வாட்ஸப் அரட்டையிலும் யூடியூப் வீடியோவிலும் மூழ்கியிருக்கிறோம். இரவு தாமதமாக தூங்கி, காலையில் தாமதமாக எழுந்து என இந்த எலெக்ட்ரானிக்ஸ் யுகத்தில் நம் வாழ்க்கைமுறையே தலைகீழாக மாறிப்போய் உள்ளது. கணிப்பொறியில் வேலைசெய்பவர்கள் சராசரியாக ஒரு நாளின் பாதிக்கு மேற்பட்ட நேரத்தை கணிப்பொறி திரையை வெறிப்பதிலேயே செலவழிக்கிறார்கள்.

இப்படி ஓயாது கண்களுக்கு வேலை கொடுத்துக்கொண்டே இருப்பது நல்லதா என்றால் நல்லது இல்லை என்கிறார்கள் கண் மருத்துவர்கள். ஒரு நாளின் பெரும்பான்மையான நேரம் எலெக்ட்ரானிக் ஒளிர்திரைகளையே நோக்கிக்கொண்டிருப்பதால் கண்கள் பாதிக்கப்பட வாய்ப்புகள் நிறைய உள்ளன. இதை, கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் (Computer Vision Syndrome – CVS) என்கிறார்கள்.

கண்கள் ஏன் பாதிக்கின்றன?

நம் கண்கள் லட்சக்கணக்கான வருடங்களாக இயற்கையான ஒளியைப் பார்த்துப் பார்த்து பரிணாமம் அடைந்தவை. அது போன்ற ஒளிக்கும் காட்சிகளுக்கும் மட்டுமே இயல்பாகப் பழக்கப்பட்டவை. பொதுவாக, அதிக ஒளி உமிழும் காட்சிகளைப் பார்க்கும்போது நம் கண்கள் கூசும். மேலும், எந்த ஒரு பொருளைக் கூர்ந்து நோக்கும்போதும் நம் கண்ணின் மணிகள் விரிவடையும். கேமரா லென்ஸ் ஒன்று ஜூம் ஆவதைப் போன்றதுதான் இது. இப்படி ஜூம் ஆகும் கண்கள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும். டி.வி., கம்ப்யூட்டர் திரைகளைப் பார்க்கும்போது வெகுநேரம் கண்கள் ஜூம் ஆன நிலையிலேயே இருக்க நேர்கிறது. இதனால், கண்ணின் சுருங்கிவிரியும் தன்மை பாதிக்கப்படுகிறது.

மேலும், சராசரியாக நமது இமைகள் ஒரு நிமிடத்துக்கு 15-20 முறை சிமிட்டும் இயல்பு உடையவை. கண் சிமிட்டுதல் ஒரு அனிச்சை செயல்பாடு. கண்ணில் உள்ள ஈரப்பதம் சீராக இருப்பதற்காகவும் கண்களைக் காப்பதற்காகவும் இயற்கை செய்திருக்கும் அழகான ஏற்பாடு கண் சிமிட்டல். கம்ப்யூட்டர் திரைகளை அதிக நேரம் நோக்கும்போது இமைகளைச் சிமிட்டுவது பாதிக்கப்படுகிறது. இதனாலும் கண்களுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

என்னென்ன பாதிப்புகள்?

கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது என்றாலும் கண் நரம்புகள் பாதிக்கப்படுவதால் பார்வைக்குறைபாடு, கண்களில் நீர்வடிதல், அரிப்பு, எரிச்சல் உட்பட பல்வேறு பாதிப்புகள் இதனால் ஏற்படுகின்றன. மேலும், பின் இரவுகளில் எல்லா விளக்குகளையும் அணைத்துவிட்டு மொபைல் திரை, டி.வி பார்ப்பது கண்களைப் பாதிக்கும். நள்ளிரவின் ஆழ்ந்த இருளில் நாம் உறங்கும்போது மெலட்டோனின் எனும் ஹார்மோன் சுரக்கிறது. நம் மூளையை உற்சாகமாக வைத்துக்கொள்ளவும், உடலின் வளர்சிதை மாற்றச் செயல்பாடுகளை சீராகப் பராமரிக்கவும் மிகவும் அவசியமான ஹார்மோன் இது.

வண்டியை ஓவராயில் செய்வது போல மூளையையும் அதன்மூலம் ஒட்டுமொத்த உடலையும் ஓவராயில் செய்து பசி, தூக்கம், ஜீரணம் போன்ற அடிப்படையான செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன் இது. பின்னிரவுகளில் செல்போன், டி.வி, கம்ப்யூட்டர் பார்ப்பதால் இந்த மெலட்டோனின் சுரப்பு பாதிக்கப்படுகிறது. இதனால் தேவையில்லாத உடல், மனநலப் பிரச்னைகள் உருவாகின்றன.

சரி, இவ்வளவு பிரச்னை ஏற்படும் என்பதற்காக கணிப்பொறி, டி.வி., மொபைல் என எதையும் பயன்படுத்தாமல் இருக்க முடியுமா? நிச்சயம் முடியாது. நாம் ஒன்றும் கற்காலத்தில் வாழவில்லை. ஆனால், இந்தப் பொருட்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும். கண்களை பாதுகாக்கப்பதற்கான எளிய ட்ரிக்ஸ் என்னென்ன என்று தெரிந்துகொண்டால் சி.வி.எஸ் பாதிப்பில் இருந்து முழுமையாகத் தப்பலாம்.

லைட் ப்ளீஸ்

கணிப்பொறியைப் பயன்படுத்தும் அறையில் போதுமான வெளிச்சம் இருக்க வேண்டியது அவசியம். இருட்டான, வெளிச்சமற்ற அறையிலோ அதிக வெளிச்சம் நிறைந்த அறையிலோ கணிப்பொறியைப் பயன்படுத்த வேண்டாம். மேலும், கம்ப்யூட்டர் திரைக்குப் பக்கவாட்டில் இருந்து வெளிச்சம் வரும்படியாக இருப்பது நல்லது. தலைக்கு நேர் மேலே இருந்து வெளிச்சம் விழும்படியாக அமர்வதை இயன்றவரை தவிர்ப்பது கண்களுக்கு நல்லது. அளவான வெளிச்சம் உள்ள ஃப்ளோரோசன்ட், எல்.இ.டி பல்புகளைப் பயன்படுத்தலாம்.

கிளார் வேண்டாம்

கம்ப்யூட்டர் திரையில் கிளார் விழுவதைத் தவிர்க்க வேண்டியது மிகவும் முக்கியம். கம்ப்யூட்டர் திரைக்குப் பின்னால் ஜன்னல், கதவு, மின்சார விளக்கு இருந்தால், அதன் வெளிச்சம் காரணமாகத் திரையில் கிளார் அடிக்கும். இப்படி, கிளார் விழும் மானிட்டரைத் தொடர்ந்து பார்ப்பதால் கண்கள் பாதிக்கப்படுகின்றன. கண்ணாடி அணியும் பழக்கம் உள்ளவர்களுக்கும் கிளார் பிரச்னை ஏற்படக்கூடும். ​`ஆன்டிரிஃப்ளெக்டிவ்​’​ கண்ணாடிகள் கிளாரைத் தடுக்கும் இயல்புடையவை என்பதால் அவற்றைப் பயன்படுத்தலாம்.

எல்.சி.டி/எல்.இ.டி மானிட்டருக்கு மாறுங்கள்

பழைய மாடலான சி.ஆர்.டி (கேத்தோட் ரே ட்யூப்) மானிட்டர்களில் ஆன்டிரிஃப்ளெக்டிவ் கோட்டிங் இருக்காது. இதனால் சிலருக்குக் கண்கள் பாதிக்கப்படலாம். எனவே, எல்.சி.டி/ எல்.இ.டி மானிட்டர்களைப் பயன்படுத்துவது நல்லது. ரெசல்யூஷன் அதிகம் உள்ள மானிட்டர்கள் கண்களுக்கு ஏற்றவை. ரெசல்யூஷன் என்பது `டாட்பிட்ச்’ எனப்படும் ஒளிப்புள்ளிகளின் எண்ணிக்கையால் தீர்மானிக்கப்படுகிறது. பொதுவாக, குறைவான ஒளிப்புள்ளிகள் துல்லியமான உருவங்களை உருவாக்குகின்றன. டிஸ்ப்ளேவில் 0.28 மில்லி மீட்டருக்குக் குறைவான ஒளிப்புள்ளிகள் இருப்பது கண்களுக்கு நல்லது.

கான்டாக்ட் லென்ஸ் கவனம்

கான்டாக்ட் லென்ஸ் உபயோகிப்பவர்களுக்கு சி.வி.எஸ் பிரச்னை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக, தொடர்ந்து கம்ப்யூட்டரைப் பார்க்கும்போது கண் எரிச்சல் போன்ற பிரச்னையால் பாதிக்கப்பட நான்கு மடங்கு வாய்ப்பு அதிகம் என்கிறார்கள். சாதாரண கான்டாக்ட் லென்ஸ்களைவிட சிலிக்கான் ஹைட்ரோஜெல் கான்டாக்ட் லென்ஸ்கள் பயன்படுத்துவது ஓரளவு நல்ல பலனைத் தரும்.

கான்டாக்ட் லென்ஸை சுத்தமான சொல்யூஷனில் சுத்திகரித்துப் பயன்படுத்துவதும் அவசியம்.

டிஸ்ப்ளே செட்டிங்ஸை மாற்றுங்க

டிஸ்ப்ளே செட்டிங்ஸை சீராக்குவது ஓரளவுக்கு நல்ல பலனைத் தரும். பொதுவாக, மானிட்டரின் பிரைட்னெஸ் எனப்படும் வெளிச்சம் உங்களைச் சுற்றி உள்ள சூழலின் வெளிச்சம் எவ்வளவு உள்ளதோ அதே அளவு இருப்பது நல்லது. கண்களை உறுத்தாத, கண்களைச் சுருக்கிப் பார்க்கச் செய்யாத இயல்பான வெளிச்சமே நல்லது. மானிட்டரில் தெரியும் எழுத்துகளின் ‘​டெக்ஸ்ட் சைஸ்​‘​ எப்போதும் கான்ட்ராஸ்ட்டுக்கு இயல்பாக இருக்க வேண்டும். நீளமான டாக்குமென்ட் ஃபைல்களில் வேலை செய்யும்போதும் படிக்கும்போதும் வெள்ளைப் பின்புறத்தில் கறுப்பு எழுத்துக்களாக இருப்பது நல்லது.​ தொடர்ச்சியாகப் படிக்கும்போது எழுத்துக்களை பெரிய அளவில் வைத்து படித்துவிட்டு, பிறகு நார்மலான அளவுக்கு மாற்றிக்கொள்ளலாம்.​

`கலர் டெம்ப்பரேச்சர்’ என்று ஓர் ஆப்ஷன் உள்ளது. இது, கணிப்பொறித் திரையில் இருந்து வெளிப்படும் ஒளிக்கற்றைகளின் அளவைக் குறிக்கும். நீல வண்ண வெளிச்சம் என்பது குறைந்த அலை நீளம் உடையது. எனவே, கண்களை அதிகம் சிரமப்படுத்தும். சிவப்பு, ஆரஞ்சு போன்றவற்றின் அலை நீளம் அதிகம் என்பதால், அவை ஓரளவு குறைவாகவே கண்களைப் பாதிக்கும். கலர் டெம்ப்பரேச்சரைக் குறைப்பதன் மூலம், நீள அலைக்கற்றைகளைக் குறைத்து, கண்களைப் பாதுகாப்பதும் ஒரு நல்ல வழிமுறை.

கண்களுக்கான பயிற்சிகள்

தினமும் காலையில் எழுந்ததும் உடற்பயிற்சி செய்வதைப் போலவே கண்களுக்கும் பயிற்சி தர வேண்டும். ஒரு விரிப்பில் மண்டியிட்டு அமர்ந்துகொண்டோ, நின்றபடியோ இதைச் செய்யலாம். இரண்டு கைகளையும் கோத்துக்கொண்டு கட்டைவிரல்களை மட்டும் தம்ஸ் அப் செய்வது போல நிமிர்த்த வேண்டும். பிறகு, கைகளை மார்பில் இருந்து ஒரு அடி தூரத்துக்கு முன்புறம் நீட்டி கையை கிளாக்வைஸாக வட்டமாகச் சுற்ற வேண்டும்.

சுற்றும்போது தலையை அசைக்காமல் கண்களைச் சுழற்றி கட்டைவிரல் நகங்களைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். இப்படி ஐந்து முறை சுற்றிவிட்டு, ஆன்ட்டி கிளாக்வைஸாக மீண்டும் ஐந்து முறை சுற்ற வேண்டும். பிறகு, மேலும், கீழுமாகவும் பக்கவாட்டிலும் அரைவட்ட வடிவில் கைகளைச் சுற்றி, கண்களைச் சுழற்றிப் பார்க்க வேண்டும். பிறகு பத்து விநாடிகள் கண்களை மூடி ஓய்வெடுக்க வேண்டும். இதை கண் யோகா என்பார்கள்.

தொடர்ந்து உலர்வான கண்களோடு கணிப்பொறியை வெறிப்பது,​ கண்களுக்கும் நரம்புகளுக்கும் சோர்வைத் தரும். இதைப் போக்க 20:20:20 என்று ஓர் எளிய பயிற்சி உள்ளது. அதாவது கணிப்பொறியில் வேலை செய்யும்போது 20 நிமிடங்களுக்கு ஒருமுறை 20 அடி தொலைவில் உள்ள ஒரு பொருளை (அது பச்சை வண்ணத்தில் இருப்பது நல்லது) 20 விநாடிகள் இமைக்காமல் பார்க்க வேண்டும். இப்படிச் செய்வதால் தூரப்பார்வை, கிட்டப்பார்வை தொந்தரவுகள் ஏற்படாது.​ கம்ப்யூட்டர் அருகில், இண்டோர் செடிகளை வளர்ப்பதன் மூலம், செடியின் பச்சை நிறம் கண்களுக்கு சற்று ஓய்வைத் தரும்.​

கண் சிமிட்டும் நேரம்

கண்களைச் சிமிட்டுவது கண்களை உலர்வின்றி ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. தொடர்ந்து வெகுநேரம் கணிப்பொறியைப் பயன்படுத்தும்போது கண் சிமிட்டுவது பாதிக்கப்படுகிறது. சில சிமிட்டல்கள் முழுமையற்றதாக அரைச் சிமிட்டல்களாகிவிடுகின்றன. இதனால், கண்களில் உள்ள நீர் வேகமாக ஆவியாகிவிடுகிறது. ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை சில விநாடிகள் கண்களைத் தொடர்ந்து சிமிட்டிக்கொண்டே இருக்க வேண்டும். பிறகு சில விநாடிகள் கண்களை மூடி அமர்ந்துவிட்டு மீண்டும் பணியைத் தொடரலாம். இந்தப் பயிற்சி மூலம் இமைகளின் செயல்பாடு முடங்காமல் இருக்கும். இதனால், கண்களில் போதுமான ஈரப்பதம் தக்கவைக்கப்படும். கண் நரம்புகள் காக்கப்படும்.

உலர்ந்த கண் பிரச்னை இருப்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசித்து, ‘செயற்கை கண்ணீர்த் துளிகளை’ விட்டுக்கொள்ளலாம். கண் சிவப்பை நீக்குவதற்காகத் தரப்படும் கண் சொட்டு மருந்துடன் இதனைக் குழப்பிக்கொள்ள வேண்டாம். கண் சொட்டு மருந்துகளில் கண் சிவப்பை நீக்குவதற்காக ரத்தநாளங்களைச் சுருக்கும் வேதிப்பொருட்கள் இருக்கும். இவை, கண் உலர்தலையோ அரிப்பையோ போக்கும் என்று சொல்வதற்கு இல்லை.

ரெஸ்டு மஸ்டு

எந்த வேலைக்கும் ஓய்வு மிகவும் அவசியம். கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம், கழுத்துவலி, தோள்பட்டை வலி போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்க்க, தொடர்ந்து கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதற்கு இடையே போதுமான ஓய்வு கொடுங்கள். நாள் முழுதும் அமர்ந்து வேலை செய்துகொண்டிராமல், குறைந்தது இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை எழுந்து ஒரு நடைவிடுங்கள்.

கை, கால், கழுத்தை ஸ்ட்ரெச் செய்யுங்கள், கண்களுக்கான பயிற்சிகள் செய்யுங்கள். பின்னிரவில் மொபைல் போன், டி.வி, கணிப்பொறியைப் பார்க்காதீர்கள். குறைந்தபட்சம் உறங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பு எலெக்ட்ரானிக்ஸ் ஒளிர்திரைகளைப் பார்க்காமல் இருப்பது நல்லது. இதனால், உறக்கத்தில் மெலட்டோனின் சுரப்பு மேம்படும்.

கண்களுக்கு ஏற்ற வேலைச் சூழல்

காகிதத்தைப் பார்த்து டைப் செய்யும்போது, கணிப்பொறித் திரையையும் காகிதத்தையும் மாறிப் மாறி பார்ப்பதால் கண்கள் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இதைத் தவிர்க்க புத்தகத்தையோ தாளையோ மானிட்டரின் அருகில் ஒரு ஸ்டாண்டு வைத்து அதில் பொருத்திக்கொள்ளலாம். ஆனால் அந்தத் தாளின் மீது போதுமான வெளிச்சம் இருப்பதும் முக்கியம். கணிப்பொறித் திரை கண் மட்டத்திலிருந்து 40 டிகிரி சாய் கோணத்தில் இருப்பது நல்லது. மேலும், கண்களுக்கும் கணிப்பொறி திரைக்கும் இடையே அரை மீட்டர் இடைவெளியாவது இருப்பது நன்று. எர்கோனாமிக் நாற்காலியில் அமர்ந்து பணிபுரிவது உடலின் போஸ்ச்சரைப் பாதுகாக்கும். கழுத்துவலி, கைவலி, முதுகுவலி, இடுப்புவலி என உடல் வலிகளில் இருந்து காக்கும்.

கண் பரிசோதனை அவசியம்

நமக்கு முன்பு வாழ்ந்த எந்தத் தலைமுறையைவிடவும் கண்களை அதிகம் பயன்படுத்துபவர்களாக நாம் இருக்கிறோம். (அதாவது சினிமா திரை, எலெக்ட்ரானிக் திரை போன்ற செயற்கை வெளிச்சங்களை பார்ப்பது) எனவே, கண்ணாடி அணிபவர்கள் மட்டும் அல்லாமல் எல்லோருமே வருடத்துக்கு ஒருமுறை கண் மருத்துவரைச் சந்தித்து கண்களைப் பரிசோதிப்பது நல்லது. அப்போது, கம்ப்யூட்டரை நீங்கள் பயன்படுத்தும் விதம், எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறீர்கள் போன்ற தகவல்களை அவரிடம் தெரிவித்து வேண்டிய ஆலோசனைகள் பெறலாம்.

தொகுப்பு: இளங்கோ கிருஷ்ணன்

The post தினமும் கண்ணை கவனி! appeared first on Dinakaran.

Read Entire Article