பிரயாக்ராஜ்:
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மெகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. கடந்த 13-ம் தேதி தொடங்கிய கும்பமேளா அடுத்த மாதம் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. கும்பமேளாவில் பங்கேற்பதற்காக இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் சாரை சாரையாக வந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுகின்றனர். இதுவரை 9 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடி உள்ளனர். பக்தர்களின் வசதிக்காக பிரயாக்ராஜ் முழுவதும் அடிப்படை வசதிகளுடன் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், கும்பமேளாவிற்கு வரும் பக்தர்களுக்கு அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) மற்றும் அதானி குழுமம் இணைந்து உணவு வழங்குகின்றன. இதற்காக அதிநவீன மெகா சமையல் கூடத்தை இஸ்கான் திறந்துள்ளது.
இந்த சமையல் கூடமானது சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பாரம்பரிய முறையில் சமையல் செய்யும் வகையில் பிரமாண்டமான சேலம் அடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் உள்ள சிறப்பு சிம்னிகள், அடுப்பில் இருந்து புகை வெளியே வருவதை கட்டுப்படுத்துகின்றன. பிரமாண்டமான பாத்திரங்களை நகர்த்துவதற்காக தண்டவாளம் போன்ற ஸ்லைடர் சிஸ்டம், மற்றும் கிரேன்கள் உள்ளன.
இந்த சமையல் கூடத்தில் தினமும் ஒரு லட்சம் பக்தர்களுக்கு வழங்கும் வகையில் உணவு தயாரிக்கப்படுகிறது. கும்பமேளா நடைபெறும் 20 இடங்களில் உணவு விநியோகம் செய்யப்படுகிறது. கும்பமேளா நிறைவடையும் வரை இந்த மகா பிரசாத சேவை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி இஸ்கான் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "பக்தர்களுக்கு சேவை செய்வதும் அவர்களின் புனித யாத்திரை அனுபவத்தை மேம்படுத்துவதுமே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். மிகுந்த கவனத்துடனும் பக்தியுடனும் இங்கு தயாரிக்கப்படும் உணவுகள், கும்பமேளா பகுதியில் முக்கியமான 20 இடங்களில் பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன" என்றார்.