
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே நத்தமாடிப்பட்டியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி மாத திருவிழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் திண்டுக்கல், மதுரை, திருச்சி, அலங்காநல்லூர், சத்திரபட்டி, மேலூர், அவனியாபுரம், நத்தம், சிவகங்கை, சிங்கம்புணரி மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 700 காளைகள் பங்கேற்றன. 250 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர்.
காளைகளின் திமிலை பிடித்து அடக்குவதற்காக மாடுபிடி வீரர்களும் உற்சாகத்துடன் பாய்ந்து சென்றனர். அதில் சில காளைகள் மாடுபிடி வீரர்களிடம் சிக்கி அடங்கியது. சில காளைகள், மைதானத்தில் சுற்றி வளைத்த வீரர்களை எதிர்த்து நின்றதோடு, அவர்களை கொம்புகளால் குத்தி தூக்கி பறக்கவிட்டும், கால்களால் உதைத்தும் பந்தாடின.
பரபரப்பாக நடந்த இந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர், மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள், காளைகளின் உரிமையாளர்கள் என மொத்தம் 38 பேர் காயமடைந்தனர்.
ஜல்லிக்கட்டில் சிறப்பாய்ந்த காளைகளை சிறப்பான முறையில் அடக்கிய வீரர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கு போக்குக்காட்டி ஓடிச்சென்று வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், டைனிங் டேபிள், பொங்கல் பானை, வெள்ளிக்காசு, வயர்கட்டில், எவர் சில்வர் பாத்திரங்கள், குக்கர் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை நத்தமாடிப்பட்டி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.