
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே செரப்பனஞ்சேரி பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளம்பெண் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டுக்கு நாவலூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் லிப்ட் தருவதாக கூறி மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு இளம்பெண்ணை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், கூச்சலிட்டபடி அந்த நபரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். இது குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட ஒரகடம் பண்ருட்டி ஏலக்காய் மங்கலம் பகுதியை சேர்ந்த காண்டீபன் (வயது 34) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.