திண்டுக்கல், மார்ச் 6: திண்டுக்கல் அருகே தீபாவளிச் சீட்டு நடத்தி ரூ.35 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக மதுரையை சேர்ந்த தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர். திண்டுக்கல் அருகேயுள்ள சீலப்பாடியை சேர்ந்தவர் கண்ணன் மனைவி கவிதா (42). இவர், மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பகுதியை சேர்ந்த தங்கப்பாண்டி, அவரது மனைவி விஜயகுமாரி ஆகியோர் கடந்த சில ஆண்டுகளாக திண்டுக்கல் அருகே முள்ளிப்பாடியில் வசித்து வந்தனர். அப்போது இருவரும் தீபாவளி சீட்டு நடத்தினர். அதில், ஏராளமானோர் சேர்ந்து பணம் கட்டினர். நானும் கடந்த 2023ம் ஆண்டு தீபாவளி சீட்டு மற்றும் மாதாந்திர சேமிப்பு சீட்டில் சேர்ந்து பணம் செலுத்தி வந்தேன். கணவன், மனைவியும் எனது வீட்டுக்கு வந்து பணம் பெற்று சென்றனர். மொத்தம் ரூ.38 ஆயிரத்து 300ஐ செலுத்தினேன். ஆனால், முதிர்வு காலம் முடிந்தும் சீட்டு பணத்தை திரும்ப தராமல் காலம் தாழ்த்தி வந்தனர்.
இதற்கிடையே தங்கப்பாண்டியின் வீட்டுக்கு சென்ற போது வீட்டின் முன்பு சுமார் 100 பேர் திரண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் தீபாவளி சீட்டில் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் என்பதும், அந்த தம்பதி வீட்டை காலி செய்துவிட்டு சென்று விட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். எஸ்பி பிரதீப், இதுகுறித்து விசாரணை நடத்தும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து டிஎஸ்பி குமரேசன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, எஸ்ஐ கார்த்திகேயன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தங்கப்பாண்டி, விஜயகுமாரி ஆகியோர் முள்ளிப்பாடி பகுதியில் தங்கி இருந்து நந்தவனப்பட்டி, செட்டிநாயக்கன்பட்டி, தாமரைப்பாடி, நந்தனார்புரம் ஆகிய கிராமங்களில் தீபாவளிச் சீட்டு, மாதாந்திர சேமிப்பு சீட்டு நடத்தி ரூ.35 லட்சம் வரை மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தங்கப்பாண்டி, விஜயகுமாரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர்.
The post திண்டுக்கல் அருகே தீபாவளி சீட்டு நடத்தி ரூ.35 லட்சம் மோசடி appeared first on Dinakaran.