கோபால்பட்டி: டுக்கல் அருகே உள்ள நல்லமநாயக்கன்பட்டியில் புனித வனத்து அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. முன்னதாக மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. பின்னர் மாடுபிடி வீரர்கள், உரிமையாளர்கள், விழா கமிட்டியினர் உறுதிமொழி ஏற்றனர். இதனையடுத்து காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. முதலாவதாக ஊர் வழக்கப்படி கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து வாடிவாசல் வழியாக ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக காளைகள் களம் இறக்கப்பட்டன.
இதில் திண்டுக்கல், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 700 காளைகள் வாடிவாசல் வழியாக சீறி பாய்ந்தன. 400 மாடுபிடி வீரர்கள் களம் கண்டனர். வாடிவாசலில் இருந்து பாய்ந்து வெளியேறிய காளைகளை, மாடுபிடி வீரர்கள் தீரத்துடன் அடக்கினர். போட்டியில் மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாத காளைகளுக்கும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் தங்கம், வெள்ளிக்காசுகள், கட்டில், பீரோ, வேட்டி, துண்டுகள் உள்ளிட்ட பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன.
The post திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டு: 700 காளைகள், 400 வீரர்கள் மல்லுக்கட்டு appeared first on Dinakaran.