பள்ளிப்பட்டு, மே 20: ஆந்திர மாநிலம் நகரி முதல் திண்டிவனம் வரை அகல ரயில் பாதை திட்டப்பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதற்காக பள்ளிப்பட்டு வட்டத்தில் விவசாயிகளிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டு ரயில் பாதை மற்றும் பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பாண்டறவேடு சுற்று வட்டார கிராம மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், பாசன வசதி பெறும் பாண்டறவேடு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியில் மற்றும் அங்குள்ள நந்தி மடுகு நீர்பிடிப்பு பகுதியில் மண் நிரப்பி ரயில் பாதைக்கு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பாசன வசதி பெறும் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டு, குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்றும், உடனடியாக நீர்பிடிப்பு பகுதியில் ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை மாற்றி செயல்படுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் சார்பில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இருப்பினும், தொடர்ந்து ஏரி மற்றும் மடுகு பகுதியில் மண் கொட்டி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், ஆத்திரமடைந்த விவசாயிகள் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகளுடன் இணைந்து நீர்ப்பிடிப்பு பகுதியில் ரயில் பாதை பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட நேற்று காலை சென்றனர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகளை திருத்தணி டிஎஸ்பி கந்தன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் தடுத்து நிறுத்தி 2 பெண்கள் உள்பட 17 பேரை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் பொதட்டூர்பேட்டை சமுதாயக் கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
The post திண்டிவனம்- நகரி ரயில் பாதை திட்டம் நீர் பிடிப்பு பகுதியை அடைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்: விவசாயிகள் கைதானதால் பரபரப்பு appeared first on Dinakaran.