சென்னை: திண்டிவனம் சிப்காட் உணவுப் பூங்காவில் ரூ.400 கோடியில் டாபர் நிறுவன தொழிற்சாலைக்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம். சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது. 1.36 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமையும் டாபர் தொழிற்சாலையில் தேன், டாபர் ரெட், ரோஸ் வாட்டர் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. . ரூ.400 கோடியில் அமையும் டாபர் நிறுவன தொழிற்சாலை மூலம் 250 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்
தொழிற்சாலை கட்டுமான பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி கோரி டாபர் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. டாபர் நிறுவனத்தின் விண்ணப்பத்தை பரிசீலனை செய்து சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியது.
இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டை, 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் இலக்கை விரைவில் அடைவதற்காக தமிழ்நாடு அரசின் தொழில் துறை பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, அதிக அளவிலான முதலீடுகள் மேற்கொள்ளப்படக்கூடிய உயர் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்களையும், பெருமளவிலான வேலைவாய்ப்புகளை அளிக்கக்கூடிய தொழில்களையும் ஈர்த்திட பல்வேறு முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனம், திண்டிவனம், சிப்காட் உணவுப் பூங்காவில் 400 கோடி ரூபாய் முதலீட்டில் 250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி ஆலையை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழ்நாடு அரசிற்கும் டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்டது.
வீட்டு பராமரிப்பு, தனிப்பட்ட பராமரிப்பு மற்றும் பழச்சாறுப் பொருட்கள் போன்ற பொருட்களை உற்பத்தி செய்து வரும் டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனமானது, தென்னிந்தியாவிலேயே முதன் முறையாக, தமிழ்நாட்டில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், சிப்காட் உணவுப் பூங்காவில் 400 கோடி ரூபாய் முதலீட்டில் 250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி ஆலையை நிறுவுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் கையெழுத்தாகி இருந்தது.
டாபர் ரெட் பேஸ்ட், மெஸ்வாக் மற்றும் பபூல் பற்பசைகள், டாபர் தேன், வாடிகா, ஆம்லா மற்றும் பாதாம் எண்ணெய்கள், சியாவன்ப்ராஷ், ஓடோமோஸ், ஹோனிடஸ் இருமல் சிரப், குலாபரி ரோஸ் வாட்டர் உட்பட பல பொருட்கள் டாபர் நிறுவனம் தொடங்கவுள்ள இந்த தொழிற்சாலை மூலம் தயாரிக்கப்பட உள்ளன.
The post திண்டிவனம் சிப்காட் உணவுப் பூங்காவில் டாபர் நிறுவன தொழிற்சாலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி appeared first on Dinakaran.