திண்டிவனம்: திண்டிவனத்தில் இன்று சமூக முன்ேனற்ற சங்க நிர்வாகிகளுடன் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்திலும் கலந்துகொள்ளாமல் செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் புறக்கணித்தார். பாமக புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாசுக்கும், தலைவரான அன்புமணிக்கும் வெடித்த மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் மாமல்லபுரம் வன்னிய இளைஞர் மாநாடு முடிந்தவுடன் தனது பலத்தை கட்சியினருக்கு நிரூபிக்கும் வகையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் கட்சியின் பல்வேறு அணி நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார்.
மாவட்ட செயலாளர், மகளிர், இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் பிசுபிசுத்த நிலையில், வன்னியர் சங்க ஆலோசனை கூட்டம் ராமதாசுக்கு கைகொடுத்தது. அதை தொடர்ந்து நடைபெற்ற சமூக நீதிப் பேரவை வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் ஆதரவும் அதிகளவில் கிடைத்ததால் ராமதாஸ் உற்சாகம் அடைந்தார். ராமதாஸ் நடத்திய எந்த கூட்டத்திலும் செயல் தலைவர் அன்புமணி கலந்துகொள்ளாமல் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்.
இதற்கிடையே பாமக முன்னாள் மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோரிடம் நேற்று முன்தினம் ராமதாஸ் கலந்துரையாடினார். அன்புமணியுடன் மோதல் இல்லை என்று ராமதாஸ் கூறிவந்தாலும், ரகசியமாக திடீரென நடத்திய இக்கூட்டத்தால் பாமக நிர்வாகிகள் கலக்கத்தில் இருந்தனர். இந்த நிலையில் இன்று (25ம் தேதி) காலை 10 மணியளவில் பாமகவின் சமூக முன்னேற்ற சங்கம் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடக்கும் என்று ஏற்கனவே செய்தியாளர் சந்திப்பில் ராமதாஸ் கூறியிருந்தார்.
இதை தொடர்ந்து சமூக முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் சிவப்பிரகாசம் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார். இதுவரை நடந்த அனைத்து அணி நிர்வாகிகள் கூட்டமும் தைலாபுரம் தோட்டத்தில் தான் நடந்தது. தற்போது இந்த கூட்டம் திண்டிவனம் தனியார் திருமண மண்டபத்துக்கு மாற்றப்பட்டது. சமூக முன்னேற்ற சங்கத்தில் உள்ள உறுப்பினர்களில் பெரும்பாலானோர் அரசு ஊழியர்கள் என்பதால் அவர்களின் பணி பாதுகாப்பு கருதி இந்த கூட்டத்தை தைலாபுரம் தோட்டத்திலிருந்து தனியார் மண்டபத்துக்கு மாற்றிவிட்டார்கள். உள் அரங்க கூட்டமாக இது நடந்தது.
இன்று முன்னாள் வன்னியர் சங்க தலைவர் குருவின் நினைவு நாள் என்பதால் மண்டபத்தில் அவரது உருவ படத்திற்கு ராமதாஸ் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய பிறகு கூட்டம் துவங்கியது. கூட்டத்தில் கவுரவ தலைவர் ஜி.கே. மணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், மாவட்ட செயலாளர் ஜெயராஜ் மற்றும் சமூக முன்னேற்ற சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
சமூக முன்னேற்ற சங்க மாநில தலைவர் சிவப்பிரகாசம் முன்னிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சங்கத்தின் வருங்கால செயல் திட்டங்கள் மற்றும் கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம், பதவி உயர்வு மற்றும் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களுக்கு பாராட்டு விழாக்கள், மற்றும் சமீபத்தில் அரசு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் குறித்தும் கூட்டத்தில் கலந்து ஆலோசிக்கபட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்த கூட்டத்திலும் பாமக செயல் தலைவர் அன்புமணி கலந்துகொள்ளாமல் புறக்கணித்தார். நாளை (26ம் தேதி) பாமக தொழிற்சங்கத்தினருடனான ஆலோசனை கூட்டமும் திண்டிவனம் தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ளது. பாமக நிறுவனர் ராமதாசின் தொடர் நடவடிக்கைகளால் அக்கட்சியில் பரபரப்பான சூழல் தொடர்ந்து நிலவி வருகிறது.
The post திண்டிவனத்தில் சமூக முன்னேற்ற சங்க நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை: அன்புமணி புறக்கணிப்பு தொடர்கிறது appeared first on Dinakaran.