திண்டிவனத்தில் இன்று அதிகாலை மயிலம் சார்பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: ஏராளமான சொத்து ஆவணங்கள் பறிமுதல்

4 days ago 4

மயிலம்: திண்டிவனத்தில் இன்று அதிகாலை மயிலம் சார்பதிவாளர் வெங்கடேஸ்வரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் ஏராளமான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. விழுப்புரம் மாவட்டம் மயிலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி அழகேசன், மாவட்ட ஆய்வுக்குழு தலைவர் ராணி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலிசார் நேற்று திடீர் சோதனை செய்தனர்.

இதில் கணக்கில் வராத ரூ.1.20 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நேற்று மாலை 6 மணியிலிருந்து இரவு 11 மணி வரை நடைபெற்ற சோதனையில், சார் பதிவாளர் வெங்கடேஸ்வரி, அலுவலக ஊழியர்கள் மற்றும் புரோக்கர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில் லஞ்சமாக ரூ.1.20 லட்சம் பெற்றது உறுதியானது. இதையடுத்து சார்பதிவாளர் வெங்கடேஸ்வரி, அலுவலக ஊழியர்கள் மற்றும் புரோக்கர்கள் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் திண்டிவனம் ஜெயபுரம் 3வது குறுக்கு தெருவில் உள்ள காம்ப்ளக்ஸில் 3வது தளத்தில் உள்ள மயிலம் சார் பதிவாளர் வெங்கடேஸ்வரியின் வீட்டில் கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் சுந்தர்ராஜன் தலைமையிலான குழுவினர் இன்று அதிகாலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஏராளமான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post திண்டிவனத்தில் இன்று அதிகாலை மயிலம் சார்பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: ஏராளமான சொத்து ஆவணங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article