திட்ட மதிப்பீடு ரூ.25 லட்சம்... சென்னை மயிலாப்பூர் கோவில் குளம் விரைவில் சீரமைப்பு

2 months ago 8

சென்னை மயிலாப்பூர் கோவில் சித்ரகுளத்தை சீரமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த சித்ரகுளம் முழுவதும் தற்போது மாசடைந்து காணப்படுகிறது. இந்த குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகள், பாட்டில்கள், குப்பைகள் வீசப்பட்டு பாசிபடிந்து கிடக்கிறது.

எனவே, மயிலாப்பூர் கோவில் சித்ரகுளத்தை ரூ.25 லட்சம் செலவில் புனரமைத்து தூய்மையாக மாற்ற சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான டெண்டர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த சீரமைப்பு பணியின்போது மயிலாப்பூர் கோவில் குளத்தில் படிந்து உள்ள சேறு அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது. கோவில் குளத்தில் பொதுமக்கள் குப்பைகள் கொட்டுவதை தடுக்க குளத்தை சுற்றிலும் வேலி அமைக்கப்படுகிறது.

கிரானைட் கல் மூலம் கட்டப்பட்ட பக்கவாட்டு சுவர்களை கொண்ட 30 அடி ஆழமுள்ள இந்த குளத்தில் மழைநீர் வெளியேறும் பாதைகளும் சீரமைக்கப்பட உள்ளன. கோவிலுக்கு வரும் பக்தர்கள், கோவில் குளத்தில் குப்பைகளை வீசி எறிவதை கண்காணித்து அபராதம் விதிப்பதற்காக சி.சி.டி.வி. கேமராக்களை அமைக்கவும் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

மேலும் சித்ரகுளத்தின் வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட உள்ளன. இந்த பகுதியை ஆக்கிரமித்து பலர் கடைகளை அமைத்து உள்ளனர். அந்த கடைகள் அனைத்தும் அகற்றப்பட உள்ளன.

கோவில் குளம் ஆழப்படுத்தப்பட்டு, வடிகால்களும் சுத்தம் செய்யப்பட உள்ளன. இந்த பணிகள் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளன.

இந்த குளத்தை சரியாக பராமரித்து நீரை சேமித்தால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து சுமார் 5 கி.மீ. சுற்றளவில் உள்ள பகுதிகளுக்கு நன்மை பயக்கும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

Read Entire Article