செங்கல்பட்டு, மே 6: செங்கல்பட்டு அருகே திடீரென சூறைக்காற்றுடன் நேற்று முன்தினம் மாலை கனமழை கொட்டியதால் கொள்முதல் நிலையத்தில் மூடி வைக்கப்பட்டிருந்த நெல் மழையில் நனைந்து சேதம் அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். செங்கல்பட்டு அடுத்த வில்லியம்பாக்கம் பகுதியில், கடந்த 15 நாட்களுக்கு மேலாக நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆத்தூர், வில்லியம்பாக்கம், பாலூர், தேவனூர், ரெட்டிபாளையம், கொங்கணாஞ்சேரி, கொளத்தாஞ்சேரி, சாஸ்திரம்பாக்கம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் விளையும் நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலமாக விவசாயிகள் தமிழக அரசுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் வில்லியம்பாக்கம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அறுவடை செய்த நெல்லை அப்பகுதியில் கொட்டி வைத்திருந்தனர். இந்நிலையில், நேற்றுமுன்தினம் மாலை திடீரென சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நெல் மீது போடப்பட்டிருந்த தார்பாய்கள் காற்றில் அடித்து செல்லப்பட்டதில் நெல் அனைத்தும் மழையில் நனைந்துள்ளது. அறுவடை முடிந்து விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த நெல் மழையில் நனைந்த சம்பவம் விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
The post திடீரென சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியதால் கொள்முதல் நிலையத்தில் நெல் சேதம்: விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.