திசையன்விளை : திசையன்விளை அருகே தந்தை புற்றுநோயால் இறந்த நிலையில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு மகள் பிளஸ் 2 தேர்வு எழுதிய சம்பவம் உருக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள வடலிவிலை பகுதியை சேர்ந்தவர் அய்யாதுரை (55). விவசாயியான இவருக்கு பானுமதி என்ற மனைவியும், 3 மகன்கள் மற்றும் மதுமிதா (17) என்ற ஒரு மகள் உள்ளனர். மதுமிதா இட்டமொழியில் உள்ள ஏ.பி ஜோசப் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கேன்சர் நோயால் அவதிப்பட்டு வந்த அய்யாதுரை அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அய்யாதுரை திடீரென உயிரிழந்தார். பிளஸ் 2 பொதுதேர்வு நடந்து வரும் நிலையில் நேற்று நடந்த கணக்கு தேர்வுக்காக மதுமிதா தயாராகிக்கொண்டிருந்தார். திடீரென தந்தை இறந்ததால் பெரும் துயரத்தில் இருந்த மதுமிதா, தேர்வை தவற விடக்கூடாது என்பதற்காக நேற்று காலை இறந்த தந்தையின் உடலை வணங்கிவிட்டு தேர்வு எழுத சென்றார். தேர்வு முடிந்து மதுமிதா வந்த பிறகு அய்யதுரையின் இறுதி சடங்கு நடந்தது. தந்தையின் உடலை வணங்கி விட்டு மகள் தேர்வு எழுத சென்ற சம்பவம் திசையன்விளையில் உருக்கத்தை ஏற்படுத்தியது.
The post திசையன்விளை அருகே புற்றுநோயால் இறந்த தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு பிளஸ் 2 தேர்வு எழுதிய மகள் appeared first on Dinakaran.