திருநாங்கூர் கருட சேவை உற்சவம் 30-1-2025
1. உற்சவங்கள்
ஒவ்வொரு ஆலயங்களிலும் நடைபெறும் உற்சவங்கள் பல்வேறு வடிவங்களில் இருக்கும். ஆகம விதிகளால் நடைபெறும் உற்சவங்களும் உண்டு. பக்தர்களின் அன்பின் மிகுதியால் நடைபெறும் உற்சவங்களும் உண்டு. பொதுவாகவே பெருமாள் கோயில்களில் ஒவ்வொரு நாளும் திருவிழாதான். புறப்பாடுதான். இது தவிர ஒவ்வொரு பருவங்களிலும் உற்சவங்கள் உண்டு. அமாவாசை புறப்பாடு, பௌர்ணமி புறப்பாடு என்று விதவிதமான உற்சவங்கள் உண்டு. இது தவிர ஆண்டுதோறும் நடைபெறும் பவித்ரோத்சவம், அத்யயன உற்சவம் போன்ற சிறப்பு உற்சவங்களும் உண்டு. இது தவிர பிரம்மோற்சவம் என்று சொல்லக்கூடிய அதிக நாள்கள் நடைபெறும் உற்சவங்களும் உண்டு.
2. பிராகார வலம் முதல் திருவீதி வலம் வரை
ஆலய உற்சவங்களில் உற்சவமூர்த்திகள் வலம் வருவது உண்டு. இந்த வலம் வருவதிலும் பிரகாரவலம், மாடவீதி வலம், தேர்வீதி வலம் சில நேரங்களில் ஊரை விட்டு வெளி ஊர்களுக்கு புறப்பாடு என நடைபெறும். குறிப்பாக, மாசி மக தீர்த்தவாரி முதலிய நேரங்களில் சந்நதியை விட்டு பல கிலோமீட்டர்கள், பல ஊர்களின் வழியே பெருமாள் எழுந்தருள்வதும் உண்டு. செல்லும் போதும், வரும் போதும் பல ஊர்களில் மண்டகப்படியை ஏற்றுக் கொள்வதும் உண்டு. இந்த வீதி வலங்களில் பல வாகனங்களில் உற்சவமூர்த்திகள் எழுந்தருள்வார்கள். வைணவ சமயத்தில் பெருமாள் பிரம்மோற்சவ காலங்களிலும் சில குறிப்பிட்ட உற்சவ காலங்களிலும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி காட்சி தருவார்.
3. வாகன சேவை தத்துவம்
சேஷ வாகனம், கஜ வாகனம், அஸ்வ வாகனம், கற்பக விருட்ச வாகனம், அனுமன் வாகனம், சூரிய பிரபை, சந்திர பிரபை என வாகனங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தத்துவமும் கதையும் மரபும் உண்டு. மூலமூர்த்தி தரிசனம் போலவே, திருவீதி வலம் வரும் எம்பெருமான்களைத் தரிசிப்பது சிறப்பு. பெருமாள் எத்தனையோ வாகனங்களில் வீதி உலா வந்தாலும், கருட வாகனத்தின் மீது வலம் வந்து காட்சி தருவது என்பது மிகச் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளுவதை கருட சேவை என்பார்கள். எந்த திவ்ய தேசத்திலும் கருடசேவை என்றால் அன்றைக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுவார்கள். கருடசேவை பார்த்தால் பெரும் புண்ணியம் என்று கருதுவார்கள். வானத்தில் கருடனைப் பார்ப்பதே புண்ணியம் எனும்போது, கருடன் மீது பெருமாளை தரிசிப்பது பெரும் புண்ணியமல்லவா!
4. சிறப்பான கருட சேவைகள்
ஒவ்வொரு ஆலயங்களிலும் கருடசேவை உற்சவம் சிறப்பானதாக இருந்தாலும், சில குறிப்பிட்ட திருத்தலங்களில் கருடசேவை உற்சவம் ஆயிரக்கணக்கான பக்தர்களை பக்தியில் ஈர்க்கக் கடிய உற்சவமாக இருக்கும். கருட சேவை உற்சவங்களில் காஞ்சி வரதர் கருடசேவையும், புரட்டாசி திருமலை பிரம்மோற்சவத்தில் நடக்கும் கருடசேவையும், ஆழ்வார்திருநகரியில் நடைபெறும் நவதிருப்பதி கருட சேவையும், ஸ்ரீவில்லிபுத்தூர் கருடசேவையும் சிறப்பானது.
இந்த வரிசையில் கடந்த 130 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் கருட சேவை உற்சவம்தான் திருநாங்கூர் திருப்பதி 11 எம்பெருமான்கள் கருட சேவை உற்சவம். அன்றைக்கு லட்சக்கணக்கான மக்கள் கருட சேவையைக் காண்பதற்காக திருநாங்கூரில் கூடுவார்கள். இந்த கருட சேவையின் பின்னணியில் பல சுவையான செய்திகளை நாம் இத்தொகுப்பில் காணலாம்.
5. நவதிருப்பதியும் திருநாங்கூர் திருப்பதியும்
வைணவ திருத்தலங்கள் என்றால் 108 திருத்தலங்களையே ராமானுஜ வைணவ மரபில் பிரதானமாகச் சொல்வது வழக்கம். எந்தத் திருத்தலத்தை 12 ஆழ்வார்களில், யாராவது ஒருவராவது, குறைந்தபட்சம் ஒரு வரியாவது பாடியிருந்தால், அந்த ஈரத் தமிழ் சொற்களைப் பெற்ற திருத்தலமே வைணவத்தில் திவ்ய தேசமாகக் கருதப்படுகிறது. தமிழால் பாடப்படாத தலங்கள் எத்தனைப் பிரசித்தி பெற்று இருந்தாலும், புராண இதிகாச தலங்களாகக் கருதப்படுமே தவிர, திவ்யதேசக் கணக்கில் சேராது. இந்த 108 திருத்தலங்களிலும் சில அழகான செய்திகளைப் பார்க்கலாம். சில திவ்ய தேசங்கள் இரண்டு இடத்தில் இருக்கும்.
ஆனால், ஒரே திவ்ய தேசமாகக் கருதப்படும். உதாரணமாக, திருவாலி, திருநகரி இவை இரண்டும் தனித்தனியான கோயில்கள். 4 அல்லது 5 கிலோ மீட்டர் தூர வித்தியாசத்தில் இருக்கின்றன. ஆனால், இவை இரண்டும் சேர்ந்து ஒரே திருப்பதியாகவே கருதப்படுகிறது. அதைப் போலவே ஆழ்வார் திருநகரி அருகே திருத் தொலைவில்லி மங்கலம் என்ற திருப்பதி இரண்டு கோயில்கள். ஒரே திருப்பதியாகக் கருதப்படும். சில இடங்களில் அருகாமையில் உள்ள கோயில்கள் அனைத்தும் சேர்ந்து ஒரு தொகுப்பாகக் கருதுவார்கள். திருநெல்வேலியில் ஆழ்வார் திருநகரியைச் சுற்றி இருக்கக் கூடிய 9 திருத்தலங்களை ஒன்றாகச் சேர்ந்து “நவதிருப்பதி” என்று அழைப்பார்கள். அதைப் போலவே சீர்காழியில் திருநாங்கூர் என்கின்ற பகுதியைச் சுற்றி இருக்கக்கூடிய 11 திவ்ய தேசங்களை இணைத்து “திருநாங்கூர் திருப்பதி” என்பார்கள். இந்த பதினோரு தலங்களையும் இணைத்த கருடசேவைதான் திருநாங்கூர் கருட சேவை.
6. திருநாங்கூர் திருப்பதிகள் என்னென்ன?
I. திருநாங்கூருக்குள்ளேயே இருக்கும் கோயில்கள்
1. திருக்காவளம்பாடி
2. திருஅரிமேய விண்ணகரம்
3. திருவண்புருடோத்தமம்
4. திருச்செம்பொன் செய்கோயில்
5. திருமணிமாடக் கோயில்
6. திருவைகுந்த விண்ணகரம்
II. திருநாங்கூருக்கு வெளியே இருக்கும் கோயில்கள்
7. திருத்தேவனார்த் தொகை
8. திருத்தெற்றியம்பலம்
9. திருமணிக்கூடம்
10. திருவெள்ளக்குளம்
11. திருப்பார்த்தன் பள்ளி
7. அன்பின் அடிப்படையில் அமைந்த உற்சவம்
திருநாங்கூர் 11 எம்பெருமான் கருட சேவை உற்சவம் கடந்த 131 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டு 131வது ஆண்டு. நாம் ஏற்கனவே சொன்னது போல பிரம்மோற்சவத்தில் நடைபெறுகின்ற கருடசேவை, ஆகம விதிகளின் பிரகாரம் நடைபெறுகின்ற கருடசேவை. எந்தெந்த நாளில் என்னென்ன வாகனத்தில் பெருமாள் வீதி வலம் வரவேண்டும் என்றெல்லாம் ஆகமங்களின் சொல்லப்பட்டிருக்கின்றது. அந்த ஆகமங்களின் அடிப்படையில் கருடசேவை உற்சவம் நடைபெறும், ஆனால், திருநாங்கூர் கருட சேவை, பக்தர்களின் அன்பின் அடிப்படையில், பக்தியின் அடைப்படையில், திருமங்கை ஆழ்வாரின் பாசுரங்களின் அடைப்படையில் நடைபெறுகின்ற அற்புதமான உற்சவம்.
8. மூன்று பகுதிகளைக் கொண்ட உற்சவம்
ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை அன்று திருமங்கையாழ்வார், திருநகரி ஆஸ்தானத்தை விட்டுப் புறப்பட்டு, மஞ்சள் குளி உற்சவம் கண்டபின், திருநாங்கூர் மணிமாடக் கோயிலுக்கு எழுந்தருள்வார். அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூர் 11 எம்பெருமான்களின் மங்களாசாசனம், அதைத் தொடர்ந்து அன்றைய தினம் இரவு பிரம்மாண்டமான கருட சேவை உற்சவம் நடைபெறும். இந்த உற்சவம் 3 பகுதிகளைக் கொண்டது.
முதல் நாள் திருமங்கை ஆழ்வார் சில திருத்தலங்களைச் சென்று பாடி, மதியம் மஞ்சள் குளி உற்சவம் கண்டருள்வார், இது முதல் பகுதி. இரண்டாவது பகுதி, (தை அமாவாசைக்கு மறுநாள்) திருநாங்கூர் மணிமாடக் கோயிலில் 11 திருநாங்கூர் திவ்யதேச பெருமாளுக்கும் ஒரே இடத்திலும் மங்களாசாசனம் நடைபெறும். மூன்றாவது பகுதியாக அன்று இரவு சுமார் 11 மணி அளவில் 11 எம்பெருமானுக்கும் ஒரே இடத்தில் கருட சேவை நடைபெறும். அதற்கு அடுத்த நாள் இன்னும் சில திவ்ய தேசங்களை திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துவிட்டு தன்னுடைய ஆஸ்தானத்திற்கு எழுந்தருளி அங்கே வயலாளி மணவாளனை மங்களாசாசனம் செய்வார். இந்த உற்சவம் இப்பொழுது அகில இந்திய பிரசித்தி பெற்ற உற்சவமாக நடைபெற்று வருகின்றது.
9. முதல் நாள் (புதன்கிழமை 29.1.2025)
இந்த ஆண்டு இந்த உற்சவம் 29.1.2025 புதன்கிழமை தொடங்கி 31.1.2025 வெள்ளிக் கிழமையோடு பூர்த்தி அடைகிறது. 29ஆம் தேதி புதன்கிழமை, அதிகாலை ஒரு மணி அளவில் உத்திராட நட்சத்திரம் கூடிய சுபவேளையில் திருமங்கையாழ்வார் தம்முடைய ஆஸ்தானத்தை விட்டுப் புறப்படுவார்.
தன்னுடைய அவதாரத்தலமாகிய திருக்குறையலூர், தான் தினமும் 1000 அடியவர்களுக்கு ததியாராதனம் நடத்திய திருமங்கை மடம், திருக்காவளம்பாடி, திருமணிக்கூடம், திருப்பார்த்தன்பள்ளி எனும் இந்த ஐந்து திவ்யதேசம் சென்று எம்பெருமானுக்கு மங்களாசாசனம் செய்து பகல் 12 மணி அளவில் மஞ்சள் குளி மண்டபம் எனும் மண்டபத்திற்கு வருவார். இது காவிரியின் கிளை ஆறான மண்ணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது அங்கு இருந்தபடியே திருமங்கை யாழ்வார் திருநறையூர் நம்பியையும், ஸ்ரீரங்கம் அழகிய மணவாளனையும் மங்களாசாசனம் செய்வார். திருமங்கை ஆழ்வாருக்கு சிறப்புத் திருமஞ்சனம் (மஞ்சள் குளியல்) நடைபெறும்.
10. இரண்டாம் நாள் (வியாழக்கிழமை 30.1.2025)
புதன்கிழமை மாலை 6 மணிக்கு ஆரம்பித்து திருநாங்கூரில் இருக்கக் கூடிய மணிமாடக் கோயில், திருவண்பருடாத்தமம், திருவைகுந்த விண்ணகரம், செம்பொன் செய்கோயில், திருத்தெற்றியம்பலம், திருஅரி மேய விண்ணகரம் எனும் ஆறு தலங்களுக்கு எழுந்தருளி அங்குள்ள பெருமாள்களை தமிழால் பாடி இரவு மணிமாடக் கோயிலில் எழுந்தருள, அங்கே காலை நாலரை மணிக்கு அர்த்தஜாம பூஜை நடைபெறும். 30.1.2025 வியாழக்கிழமை காலை திருப்பாவை சாற்று முறை முடிந்து, பகல் 12 மணிக்கு 11 திவ்ய தேசத்து எம்பெருமான்களும் மணிமாட கோயிலில் முன்பக்கத்தில், ஆழ்வாரின் அருந்தமிழ் கேட்கக் காத்திருப்பார்கள். 11 திவ்ய தேசத்து மூர்த்திகளையும் ஒரே இடத்தில் தரிசனம் செய்யும் வாய்ப்பு வேறு நாளில் கிடைக்காது. திருமங்கை ஆழ்வார் முத்துடைத்தாம பந்தலுக்கு எழுந்தருளுவார்.
11. எப்படி நடக்கும் தெரியுமா?
பிற்பகல் 2.00 மணிக்கு மங்களாசாசனம் நிகழ்ச்சி தொடங்கும். ஒவ்வொரு திவ்ய தேசத்து எம்பெருமான்களும் ஆழ்வாருக்கு எதிரே வந்து நிற்பார்கள். ஆழ்வார் பெருமாளை கை கூப்பியபடி வலம் வருவார். அந்த பெருமாளுக்குரிய பாசுரங்கள் பாடப்படும். மங்களாசாசனம் முடிந்தவுடன் ஆரத்தி எடுக்கப்படும். பெருமாள் ஆழ்வாருக்கு தனது மாலை, பரிவட்டம், சடாரி மரியாதைகள் வழங்குவார். பின் அந்த பெருமாள் மேளதாளத்தோடு மண்டபத்திற்குள் சென்றுவிடுவார். உடனே அடுத்த பெருமாள் வந்து நிற்பார். திருமங்கையாழ்வாரின் பாசுரங்கள் பாடப்படும். பெருமாள் அவருக்கு மாலை பரிவட்டம் மரியாதைகள் செய்து சடாரி வழங்குவார்.
இப்படி 11 பெருமாள்களும் ஒவ்வொருவராக வந்து ஆழ்வாரின் அருந்தமிழ் கேட்டு, தங்களது தீர்த்த பரிவட்டங்களை ஆழ்வாருக்கு பகுமானமாக அளித்து, மணிமாடக் கோயிலில், அவரவர்களுக்கு அமைக்கப்பட்ட பகுதிகளுக்குச் சேர்வார்கள். மங்களாசாசனம் முடிந்தவுடன் திருமங்கை ஆழ்வாரும் உள்ளே செல்வார். மாலை 11 திவ்ய தேசத்து எம்பெருமான்களுக்கும் திருமங்கை ஆழ்வாருக்கும் ஏககால திருமஞ்சனம் நடைபெறும். பிறகு பெருமாள்களை கருட வாகனத்தின் மீது வைத்து அலங்காரம் நடைபெறும்.
ஒவ்வொரு பெருமாளும் ஒவ்வொரு விதமாக இருப்பார். மாலைகள், ஆபரண பீதாம்பர அலங்காரங்கள் வித்தியாசமாக இருக்கும். அத்தனை எம்பெருமான்களும் கருட வாகனத்தின் மீது ஒரே இடத்தில் காட்சி தருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒவ்வொரு பெருமாளாக தரிசனம் செய்து கொண்டு வருவார்கள். இது கிட்டத்தட்ட இரவு 11 மணி வரைக்கும் நடைபெறும்.
12. வீதி கொள்ளாத வரிசையில் வியப்பான கருடசேவை
திருநாங்கூர் திருவிழாக் கோலமாக இருக்கும். அத்தனை வீதிகளில் ஜனத்திரள் அலைகளாக இருக்கும். வாகனங்கள் எல்லாம் 2 கிலோ மீட்டருக்கு முன்னாலேயே நிறுத்தப்பட்டிருக்கும். திருநாங்கூரில் உள்ளே வருவதும் வெளியில் செல்வதும்கூட கொஞ்சம் கடினமான விஷயமாக இருக்கும். எல்லா இடங்களிலும் பிரசாத விநியோகம் நடந்துகொண்டிருக்கும். சொற்பொழிவுகள் நடந்து கொண்டிருக்கும்.
கலை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும். இரவு 11 மணிக்கு ஸ்ரீ மணவாள மாமுனிகள் முதலில் புறப்பட, தொடர்ந்து அன்ன வாகனத்தில் திருமங்கை ஆழ்வார் குமுதவல்லி நாச்சியாரோடு புறப்பட, அடுத்தடுத்து மணிமாடக் கோயிலில் இருந்து 11 திவ்ய தேசத்து எம்பெருமான்களும் ஒருவர் பின் ஒருவராக திருவீதிக்கு எழுந்தருளி அற்புதக் காட்சியைத் தருவார்கள், இந்த காட்சியானது, பரமபதத்தில்கூட காண முடியாத காட்சி. நள்ளிரவில் பகல் போல் வர்ண விளக்குகள் ஜாலம் செய்ய, வாத்திய இசை முழங்க, வாண வேடிக்கைகளும் மத்தாப்புகளும் வர்ணஜாலம் நிகழ்த்த, கருடசேவை நிகழ்ச்சி தொடங்கும். விடியவிடிய நடக்கும். விடியல் காலை 5 மணிக்கு நிறைவு பெறும்.
13. மூன்றாம் நாள் (31.1.2025)
அதற்கு அடுத்த நாள் 31.1.2025 வெள்ளிக் கிழமை, காலை 5 மணிக்கு திருவந்திக்காப்பு நடந்து அர்த்தஜாமம் நடைபெறும். காலை 9 மணிக்கு காலசந்தி முடிந்து திருமஞ்சனமாகி திருப்பாவை சாற்றுமுறை முடிந்து மணிமாடக் கோயிலிலிருந்து ஒரு மணிக்கு மேல் திருநகரிக்கு ஆழ்வார் புறப்படுவார். திருவெள்ளக்குளம், திருத்தேவனார் தொகை, திருவாலி ஆகிய திவ்ய தேசங்களுக்கு எழுந்தருளி மங்களாசாசனம் செய்வார்.
14. திருவெள்ளக்குளம்
திருமங்கை ஆழ்வாருக்கு திருவெள்ளக்குளம் திவ்யதேசம் மீது தனி ஈடுபாடு. அவரை ஆழ்வாராக மாற்றிய குமுதவல்லி நாச்சியார் அவதரித்த தலம் அல்லவா! அண்ணன் கோயில் என்ற பிரசித்தி பெற்ற கோயில். தென் திருப்பதி என்று கூறுவார்கள். திருமலைக்கு செய்ய வேண்டிய பிரார்த்தனையை சிலர் இங்கேயே செலுத்துகிறார்கள். திருப்பதி பெருமாளைப் போலவே ஸ்ரீனிவாசன் என்கிற பெயரோடு மூலவரும், அலர்மேல் மங்கை நாச்சியார் என்ற பெயரோடு தாயாரும் காட்சி தருகின்றார்கள். அண்ணன் பெருமாள் என்றும் ஒரு பெயர் உண்டு. நின்ற கோலத்தில் காட்சி தருகின்றார்.
15. அண்ணா அடியேன் இடரைக் களையாயே
கோயிலுக்கு எதிரே உள்ள தீர்த்தத்திற்கு திருவெள்ளக்குளம் என்று பெயர். சூரிய வம்சத்தில் சுவேதன் என்ற அரசகுமரனுக்கு ஆயுள் தோஷம் உண்டாயிற்று. தன்னுடைய ஆயுளை நீட்டிக்க இங்கு வந்தான். திருவெள்ளக்குளத்தில் நீராடி அதன் கரையில் வில்வ மரத்தடியில் பெருமாளை நினைத்து தவம் செய்தான். பகவான் பிரசன்னமாகி தீர்க்காயுளை வரமாகக் கொடுக்கின்றார். இங்குள்ள பெருமாளை, அண்ணா என்று அழைக்கிறார் ஆழ்வார்.
“கண்ணார் கடல்போல் திருமேனி கரியாய்
நண்ணார் முனை வென்றி கொள்வார் மன்னும் நாங்கூர்த்
திண்ணார் மதிள்சூழ் திருவெள்ளக்குளத்துள்
அண்ணா அடியேன் இடரைக் களையாயே’’
தன்னுடைய துன்பங்களை தீர்க்குமாறு திருமங்கையாழ்வார் உருக்கமாகப் பத்து பாசுரங்களால் பாடுகின்றார்.
16. எட்டெழுத்து மந்திரத்தின் பொருள்
திருமங்கையாழ்வார் பல திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்து கொண்டு வருகின்றார். “நாடினேன் நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்’’ என்று எட்டெழுத்து மந்திரத்தைப் பாடினாயே, அதன் அர்த்தம் என்ன?’’ என்று திருக்கண்ணபுரத்திலே, பெருமாள் திருமங்கை யாழ்வாரிடம் கேட்க, திருமங்கையாழ்வார் “அதற்கு ஆயிரம் பொருள் சொல்லலாம். ஆனாலும் எட்டெழுத்து மந்திரத்தின் நிறைவான பொருள், எம்பெருமான் அடியார்களுக்கு தொண்டு செய்வதே’’ என்று சொல்கின்றார். திருமங்கையாழ்வார் திருவெள்ளக்குளம் வருகின்ற பொழுது வைணவத்திற்கும், வைணவ அடியார்களுக்கும், தொண்டு செய்பவர்களை, கலியன் ஒலிமாலை என்ற பெயரில் விருது வழங்கி பாராட்டும் நிகழ்ச்சி பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது.
17. கலியன் ஒலி மாலை
31.1.2025 திருவெள்ளக்குளம் எனும் அண்ணன்பெருமாள் கோயிலில் வைணவத்திற்கு பல்வேறு வகையில் தொண்டாற்றிக் கொண்டிருக்கும் அடியார்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெறும். 90 வயதுப் பெரியவர் ஸ்ரீ கல்யாணராமன் ஸ்வாமிகள் இதை நடத்துகின்றார். திருச்சித்ரகூடம் ஸ்ரீ.உ.வே.ரங்காச்சாரியார் ஸ்வாமி (வயது 91), காரைக்கால் ஸ்ரீ அரங்கநாதாச்சாரியார் ஸ்வாமி (வயது 94) முதலிய பெரியோர்கள் இதை முன்னின்று நடத்துகிறார்கள்.
திருமங்கை ஆழ்வார் திருவெள்ளக்குளம் வரும் வரை இந்த நிகழ்வு திவ்யநாம சங்கீர்த்தனத்தோடு நடைபெறும். அன்று இரவே தம்முடைய ஆஸ்தான மாகிய திருநகரிக்கு எழுந்தருளுவார். அங்கே வயலாலி மணவாளன் காத்திருக்க, ஸ்ரீ திருமங்கையாழ்வார் மங்களாசா சனம் நடைபெறும். திருவாலியில் ஆழ்வார் போகும்பொழுது அங்கே ஒரு கருடசேவை உண்டு. அதைப் போலவே திருநகரிக்கு இரவு 12 மணிக்கு ஆழ்வார் சென்று சேரும் பொழுது ஸ்ரீ வயலாலி மணவாளன் கருடசேவை நடைபெறும்.
18. அவதாரம், ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள்
வைணவ சம்பிரதாயத்தில் பகவான் மூன்று விதத்தில் உலக மக்களைக் காப்பதற்காக முயற்சிகள் எடுத்தார் என்று சுவையாகச் சொல்வார்கள். முதலில் சாத்திரங்களைத் தந்தார். அந்த சாஸ்திரங்கள் பயன்படாத நிலையில் போது, தானே அவதாரங்கள் (தசாவதாரம்) செய்தார். அந்த அவதாரங்களும் சரியான அளவில் இந்த மக்களைத் திருத்துவதற்கு முடியாத பொழுது, ஆழ்வார்களை அவதரிக்கச் செய்து, சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவன் என்று வேத அர்த்தங்களை எல்லாம் அருந்தமிழில் வழங்கினார். அப்படி பன்னிரண்டு ஆழ்வார்களும் வழங்கிய தமிழ்ப் பாசுரங்கள்தான் நாலாயிர திவ்யப் பிரபந்தம். ஆழ்வார்களுக்குப் பிறகு ஆழ்வார்கள் அருளிய அருந்தமிழை, அர்த்தங்களோடு மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கும், வைணவத் தத்துவங்களை பரப்புவதற்கும் வைணவ வழிக்குரவர், அதாவது ஆச்சாரிய பரம்பரை வந்தது.
19. இரண்டு திருநகரிகள்
இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது ஆழ்வார்கள் அவதாரம். ஆழ்வார்கள் பன்னிருவர். இந்த ஆழ்வார்களை ஆதி அந்தமாகச் சொல்லுகின்ற பொழுது நம்மாழ்வாரை ஆதியாகவும், கடைசியாக அவதரித்த திருமங்கை ஆழ்வாரை அந்தமாகவும் வைத்துச் சொல்லும் (பராங்குச பரகால யதிவராதிகள்) மரபு உண்டு. இந்த இரண்டு ஆழ்வார்களையும் சொல்லிவிட்டால், இடையில் உள்ள மற்ற ஆழ்வார்களைச் சொல்லியது போல ஆகிவிடும்.
இதில் வியப்பு என்னவென்று சொன்னால், ஆதி ஆழ்வார் என்று சொல்லப்படுகின்ற நம்மாழ்வார் அவதரித்ததும் திருநகரி. கடைசி ஆழ்வார் என்று சொல்லப்படுகின்ற திருமங்கையாழ்வார் அவதாரம் செய்து இன்றைக்கும் காட்சி தருவதும் திருநகரி. நம்மாழ்வார் அவதார திருநகரி “ஆழ்வார் திருநகரி” என்று அழைக்கப்படுகின்றது திருமங்கையாழ்வார் திருநகரி “திருவாலி திருநகரி” என்று அழைக்கப்படுகின்றது. ஆழ்வார் நவ திருப்பதியில் இதே அமைப்பிலான உற்சவம் நவதிருப்பதி கருடசேவை உற்சவம் என்று நடைபெறுகின்றது. அது வைகாசி மாதத்தில் நடைபெறும். அந்த நவதிருப்பதி கருடசேவையின் அமைப்பை பார்த்து 131 ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்படுத்தப்பட்ட உற்சவம்தான் திருநாங்கூர் 11 கருடசேவை உற்சவம்.
20. அரங்கனிடம் கேட்ட வரம்
“திருநாங்கூர் கருட சேவை உற்சவம்” உலகப் பிரசித்தி பெற்ற உற்சவமாக திகழ்கிறது. இதனுடைய ஆரம்பகால உற்சவம் கருடசேவை உற்சவம் அல்ல. இந்த உற்சவத்திற்கு பூர்வாங்க உற்சவம் திருமங்கை ஆழ்வாருக்கு நடைபெறும் மஞ்சள் குளி உற்சவம். மஞ்சள் குளி உற்சவத்தின் பின்னணியைப் பார்ப்போம். திருமங்கையாழ்வார் கடைசி ஆழ்வார். அவர் பற்பல திவ்ய தேசங்களுக்குச் சென்று பெருமாளைப் பாடிப் பரவியதோடு பல திருத்தலங்களில் தொண்டுகளையும் செய்திருக்கிறார். அவர் அதிகமாக தொண்டு செய்த இடம் திருவரங்கம். திருவரங்கத்தில் தசாவதார சந்நதியில் இருந்து கொண்டு திருப்பணிகள் செய்து வந்த காலம்.
ஒரு கார்த்திகை மாதம், திருக்கார்த்திகை தினத்தன்று, தமது ஆறாவது பிரபந்தமான திருநெடுந் தாண்டகத்தை (திருப்பாவையை போல இதுவும் முப்பது பாசுரங்கள்) தேவகானத்தில் அபிநயத்தோடு பாடினார் அவர் பாடிய அற்புதமான இசையில் மயங்கிய அரங்கன், “என்ன வரம் வேண்டும்?’’ என்று கேட்க, திருமங்கை ஆழ்வார், “நம்மாழ்வாரின் திருவாய்மொழி உற்சவத்தை மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசியில் இருந்து நடத்த வேண்டும், அதை பெருமாள் திருச்செவி ஆற்ற வேண்டும்’’ என்று கேட்க “அப்படியே’’ என்று வரமளித்தார் பெருமாள்.
21. அரங்கன் தந்த உற்சவம்
ஆழ்வார்திருநகரியில் இருந்து நம்மாழ்வார் விக்கிரகத்தை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வந்தார் திருமங்கை ஆழ்வார். இந்த உற்சவம் முடிந்து திரும்ப நம்மாழ்வாரை திருநெல்வேலிக்கு அருகில் ஆழ்வார் திருநகரிக்குக் கொண்டு போய் ஆஸ்தானத்தில்சேர்த்து வந்தார்கள். இப்படி ஒரு அற்புதமான உற்சவத்தை நடத்திய திருமங்கை ஆழ்வாருக்கு என்ன பரிசு கொடுப்பது என்று திருவரங்கப் பெருமாள் யோசித்தார். திருவரங்கநாதனுக்கு பல்வேறு உற்சவங்கள் உண்டு.
அதில் ஒரு உற்சவம் தை மாதத்தில் காவிரியில் நடக்கக்கூடிய மஞ்சள் குளி உற்சவம். பெருமாளுக்கு மஞ்சள் குளியல் என்று சொல்லப்படும் மஞ்சள் நீரால் அபிஷேகத்தைச் செய்வார்கள். ஒருநாள் பெருமாளுக்கு திருமங்கையாழ்வார் மீது அன்பு அதிகமாகி, அர்ச்சகர்களின் மூலமாக ஆவேசித்து, தனக்கு தரப்படும் உற்சவம் திருமங்கையாழ்வாருக்கும் தரப்பட வேண்டும் என்று நியமிக்க, பெருமாள் எதிரிலேயே, பெருமாளுக்கு, எப்படி மஞ்சள் குளி திருமஞ்சனம் நடக்குமோ, அப்படியே திருமங்கையாழ்வாருக்கும் நடக்கும் படியாக அரங்கனே நியமித்தார்.
22. காவிரியிலிருந்து மணிகர்ணிகைக்கு மாறியது
திருமங்கை மன்னன் இப்பூவுலகில் வாழ்ந்திருந்த காலம் வரை திருவரங்க காவிரியில் நடைபெற்று வந்தது. ஆழ்வார் காலத்திற்கு பிறகு நம்மாழ்வாருக்கு மதுரகவிபோல், திருமங்கை ஆழ்வாருக்கு அவரது தங்கையின் கணவரால், ஆழ்வார் அர்ச்சாரூபியால் எழுந்தருளிய பிறகு திருநாங்கூரில் காவிரியின் கிளை நதியான மணி கர்ணிகையை காவிரியாக பாவித்து திருநாங்கூர் திவ்யதேசங்களை மங்களாசாசனம் செய்து நடத்தி வந்தார். இப்படித்தான் திருமங்கை யாழ்வார் மஞ்சள் குளி உற்சவம் திருநாங்கூர் திவ்யதேசத்திற்கு வந்தது. கிட்டத்தட்ட 1000 வருடங்களாக இந்த உற்சவம் மட்டுமே தை அமாவாசையை ஒட்டி நடைபெற்ற உற்சவம். பிறகு எப்படி கருடசேவை உற்சவமானது?
23. பக்தியால் வந்த உற்சவம்
ஆழ்வார் காலம் தொட்டு நடைபெற்று வந்த உற்சவத்திற்கு அங்கமாக சித்ரகூடம் விஞ்சிமூர் ஸ்ரீநிவாசாச்சார் ஸ்வாமி (சாமி அய்யங்கார்) ஆழ்வார் திருநகரியில் பராங்குசருக்கு (நம்மாழ்வாருக்கு) நடைபெறும் நவதிருப்பதி கருடசேவை போன்று பரகாலருக்கும் (திருமங்கை ஆழ்வார்) செய்ய விரும்பினார். அங்கு நடைபெறுவது போல பகலில் மங்களாசாசனமும் இரவில் கருடசேவை போன்று, திருநாங்கூரிலும் 11 கருடசேவை உற்சவம் செய்ய தீர்மானித்தார். ஸ்ரீமான்கொப்பியம் திருநாராயணப் பிள்ளை, எடமணல் விஜயராகவலுநாயுடு, வில்லியனூர் வைத்தியனாத ஐயர் போன்ற மகான்களின் முயற்சியாலும் உறுதுணையோடும். 1894ஆம் ஆண்டு விஜயவருடம் தை அமாவாசையன்று ஆரம்பிக்கப்பட்டது.
24. மஞ்சள் குளி உற்சவம்
29.1.2025 புதன்கிழமை பகல் ஒரு மணிக்கு ஆழ்வாருக்கு மஞ்சள்குளி திருமஞ்சனம் நடைபெறும். பக்தர்கள் அனைவரும் பக்தி பரவசத்துடன் இடுப்பளவு நீரில் ஆழ்வாரின் பெரிய திருமொழியில் இருந்து ஆழ்வாருக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்த ஆச்சாரியரான திருநறையூர் நம்பியையும், திருவரங்கத்து அழகிய மணவாளனையும் மங்களாசாசனம் செய்கின்றார். அந்த தலங்களுக்கு ஆழ்வார் பாடிய பாசுரங்களை சேவிப்பார்கள்.
திருவரங்கம், நாச்சியார் கோவில் (திருநறையூர்) திவ்ய தேசங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மாலை மற்றும் பீதாம்பரங்களினால் பரிவட்டம் கட்டபெற்று ஆழ்வாருக்கு மரியாதை செய்யப்படும். பின் மஞ்சள் குளியல் மண்டபத்தில் எழுந்தருளும் ஆழ்வாருக்கு சஹஸ்ரதாரா மஞ்சள் குளி என்னும் திருமஞ்சனம் நடைபெறுகின்றது. சஹஸ்ரதாரை தட்டில் ஆழ்வார் வழிபட்ட சிந்தனைக்கு இனியான் என்னும் பெருமாளின் திருமூர்த்தத்திற்கு செய்யப்படும் மஞ்சள் நீர் முதலில் பெருமாளுக்கு திருமஞ்சனம் ஆகி, பின் ஆழ்வாருக்கும் திருமஞ்சனம் ஆகும். அதற்குப்பிறகு திருப்பாவை சாற்றுமுறை ஆகி, ததிஆராதனம் நடைபெறும் மஞ்சள் குளி மண்டபத்தில் மாலை 5 மணி வரை தரிசனம் செய்யலாம்.
25. திருநாங்கூர் திவ்ய தேசப் பெருமை
கருட சேவை உற்சவம் இத்தனைச் சிறப்பாக நடைபெறுகின்ற திருநாங்கூரின் பெருமை அளவிட முடியாது. ஒரே திவ்யதேசம் போல அருகருகே இருக்கக்கூடிய 11 திவ்ய தேசங்களின் தொகுப்புதான் திருநாங்கூர் திவ்ய தேசங்கள். “ஈர் இருபதாம் சோழம்’’ என்கிற சோழ நாட்டுத் திவ்ய தேசங்கள் 40ல் முதன்மையானவை. திருவரங்கத்தைப் போன்று உபய காவேரி மத்ய தேசமாக அமைந்துள்ளவை. தெற்கே காவேரி; வடக்கே மண்ணியாறு. (மணி கர்ணிகை) “நாங்கை நாலாயிரம்’’ என்றபடி நாலாயிரம் குடிகள் வாழ்ந்ததால், அவரவர்களுக்கு ஏற்றபடி பதினொரு இடங்களில் எம்பெருமான் கோயில் கொண்டான். மேலும், இந்த திவ்யதேசங்கள் புராணப் பழமையும் பெருமையும் கொண்டவை. மதங்காதாச்ரமம், பலாசவனம், நாகபுரி என்று சிறப்பாகப் புராணங்களில் பேசப்பட்டுள்ளன.
26. எல்லா திவ்ய தேசத்து பெருமாள்களும் ஒரே ஊரில்
திருநாங்கூர் திவ்ய தேசத்தை முழுமையாக சேவித்துவிட்டால் 108 திருத்தலங்களையும் முழுமையாக சேவித்தது போல் ஆகும். இந்த திருநாங்கூர் திவ்ய தேசத்தில் பரமபத நாதன் இருக்கின்றார். வைகுந்த நாதன் இருக்கின்றார். ராமன் இருக்கின்றார். கண்ணனும் இருக்கின்றார். மற்ற திவ்ய தேசங்கள் அத்தனைக்குமான பிரதிநிதித்துவம் திருநாங்கூர் திவ்ய தேசத்தில் இருக்கின்றது. கோயில், விண்ணகரம். அம்பலம், மணிக்கூடம், குளம், பள்ளி என்ற ஆறு வகையான சிறப்புகளை உடையவை இத்திவ்யதேசங்கள்.
27. திவ்ய தேசங்களின் சிறப்புகள் – 1
(1) மணிமாடக் கோயில் – இது மணி மாடங்களை உடைய கோயில்கள் பலவகை திருநாவுக்கரசர் பதிகங்களில் பெருதிருக்கோயில், சிறுதிருக்கோயில், கரக்கோயில், ஞாழற்கோயில், (சோலை நடுவே உள்ளவை) இளங்கோயில் என்று விவரித்துள்ளார். ஆனால், மணிமாடக் கோயில் என்று பாடியுள்ளது திருமங்கை யாழ்வாரே ஆவர்.
(2) செம்பொன் செய்கோயில் – விஷ்ணுக்ரஹம் விண்+நகரம் = பரமபதம் போன்றது நாங்கை நன் செம்பொன்னால் கட்டப்பட்டது.
(3) விண்ணகரம் – வைகுந்த விண்ணகரம். பரமபதம் போன்றது. அரிமேய விண்ணகரம். ஹரி வந்து மேவி இருக்கும் விண் நகரம்.
(4) திருத்தெற்றியம்பலம் – மேட்டிடமாக அமைந்தது அம்பலம் – நகரமகா சபைகள் கூடுவதற்கு தெற்றியம்பலம் பயன்பட்டதாகக் கல்வெட்டு செய்தி.
(5) வண் புருடோத்தமம் – என்ற பெயரில் உள்ள திவ்யதேசம் இது ஒன்றே தன்னை வணங்கியவர்களே ரட்சிப்பதில் வண்மை உள்ளவன் எழுந்தருளியிருக்குமிடம்.
28. திவ்ய தேசங்களின் சிறப்புகள் – 2
(6) திருமணிக்கூடம் – மணிமாடம் போன்று மணிக்கூடங்கள் உடையது.
(7) திருத்தேவனார் தொகை தேவர்கள் கூட்டமாயிருந்த இடம்.
(8) திருக்காவளம்பாடி – முல்லை நிலத்தில் தோன்றிய ஊர்களைப் பாடி என்று வழங்குவர். காவளம்பாடி என்றால் அழகிய பொழில்களால் சூழப்பட்டது.
(9) திருவெள்ளக்குளம் – மருதநிலத்தில் குளக்கரையில் அமைந்தது. இதே போல நவதிருப்பதிகளில் ஒன்று பெருங்குளம் என்று வழங்கப்படுகிறது.
29. ஐந்து நிலைகளும் நாங்கூரில் காணலாம்
இறைவனுக்கு ஐந்து நிலைகள் உண்டு. இதைத் தெரிவிக்கும் பாசுரம் இது.
“விண் மீதிருப்பாய், மலைமேல் நிற்பாய், கடற்சேர்ப்பாய்
மண்மீதுழழ்வாய், இவற்றுளெங்கும் மறைந்துறைவாய்
என் மீதியன்ற புறவண்டத்தாய் எனதாவி
உன் மீதாடி உருக்காட்டாதே ஒளிப்பாயோ?’’
1. விண்மீதிருப்பாய் – பரத்துவம் (பரமபதம்)
2. மலைமேல் நிற்பாய் – விபவம்
(அவதார புருஷனாக இறங்கி வந்தது)
3. கடல் சேர்ப்பாய் – வ்யூகம்
(திருப்பாற்கடலில் 5 வ்யூகமாக பிரித்து)
4. மண்மீதுழழ்வாய் – அர்ச்சை (த்வ்யதேசங்களிலும் பிற தலங்களிலு முள்ள அர்ச்சா மூர்த்திகள்)
5. என் மீதியன்ற புறவண்டத்தாய்- அந்தர்யாமியாய் கலந்தது.
30. ஆழ்வாரின் மனோரதம்தான் திருநாங்கூர் கருடசேவை
திருநாங்கூர் திருப்பதிகளில், பரத்வ நிலையை வைகுந்த விண்ண கரத்திலும், வ்யூஹ நிலையைப் பள்ளி கொண்ட பெருமானிடத்தும், விபவ நிலையை வண்புருடோத்தமத்து சக்ரவர்த் தித்திருமகனிடமும் காவளம்பாடியில் கண்ணனிடமும் காணலாம். அர்ச்சை நிலையில் திருவரங்கம் பெரிய கோயிலை செம்பொன் அரங்கனிடமும் திருமலையை திருவெள்ளக்குளத்திலும் காஞ்சிபுரம் வரதராஜரை திருமணிக் கூடத்திலும், பதரிநாராயணனை மணிமாடக் கோயிலும் ஒருங்கே சேவிக்கலாம்.
இதன் காரணமாகவே, மற்ற திவ்ய தேசங்களில் சித்ரகூடம் சென்று சேர்மின்களே. “திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே” “காழிச் சீராம விண்ணகரே சேர்மினீரே’’ என்று பிறருக்குப் பரோபதேசம் செய்த திருமங்கை ஆழ்வார், திருநாங்கூர் திருப்பதிகளில் “மணிமாடக் கோயில் வணங்கு என் மனனே”, “வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே” “அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே” என்று தன் மனதை வணங்கச் சொல்லுகின்றார்.
திருமங்கையாழ்வார் திருநாங்கூர் திருப்பதி எம்பெருமான்களை தினந்தோறும் மானசீகமாக மங்களாசாசனம் செய்வதாகவே சம்பிரதாயம். அர்ச்சாவதாரத்திலும் திருமங்கையாழ்வார் திருநாங்கூர் திவ்யதேச எம்பெரு மான்களை மங்களாசாசனம் செய்வதை அனைவரும் கண்டுகளிக்கும் படி ஆண்டு தோறும் நடக்கிறது இந்த உற்சவம். தை அமாவாசை உற்சவத்தை மறக்க வேண்டாம். இந்த ஆண்டு வாருங்கள் திருநாங்கூருக்கு. கண்குளிரக் காணுங்கள் கருடசேவை உற்சவத்தை, கண் பெற்ற பயனைப் பெறுங்கள்.
தொகுப்பு: எஸ். கோகுலாச்சாரி
The post திக்கெட்டும் புகழ் மணக்கும் திருநாங்கூர் கருடசேவை appeared first on Dinakaran.