தி.மு.க.வில் ஒன்றியம், நகரங்களையும் பிரிக்க திட்டம்: 40 மாவட்ட செயலாளர்கள் எதிர்ப்பு

4 weeks ago 7

சென்னை,

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், தி.மு.க.வில் உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த மாவட்டங்களின் எண்ணிக்கையை உயர்த்த கட்சியின் தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார். அவரது ஆலோசனையின்படி, மாவட்டங்களை மறுசீரமைப்பு செய்யும் பணி நடைபெற்றது.

கடந்த பிப்ரவரி மாதம் வரை தி.மு.க.வில் 72 மாவட்ட செயலாளர்கள் இருந்த நிலையில், ஈரோடு மத்தியம், திருப்பூர் மேற்கு, திருப்பூர் தெற்கு, விழுப்புரம் மத்தியம் ஆகிய 4 மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன. தற்போது, தி.மு.க.வில் 76 மாவட்ட செயலாளர்கள் செயல்பட்டு வருகின்றனர்.இந்த நிலையில், மாவட்டங்களைப் போல், ஒன்றியம் மற்றும் நகரங்களையும் பிரிக்க தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ளது. இதற்கான யோசனையை பென் நிறுவனம் வழங்கியதாக தெரிகிறது.

அதன்படி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கடந்த சில நாட்களாக மாவட்ட செயலாளர்களை அழைத்து தனித்தனியாக பேசப்பட்டது. இந்த கூட்டத்தில், தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாநில நிர்வாகிகள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாவட்ட செயலாளர்களிடம் கருத்து கேட்டனர். அதாவது, 50 ஆயிரம் ஓட்டுகளுக்கு மேல் உள்ள நகரங்களை பிரிப்பது என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக அவர்களிடம் கருத்து தெரிவிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுவரை, 52 மாவட்ட செயலாளர்களை அழைத்து கருத்து கேட்டதில், சுமார் 40 பேர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனவே, தி.மு.க.வில் ஒன்றியங்கள், நகரங்கள் பிரிக்கப்படுமா? அல்லது தற்போதைய நிலையே தொடருமா? என்பதை கட்சித் தலைமைதான் முடிவு செய்து அறிவிக்கும் என்று கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

Read Entire Article