நெல்லை,
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அதிமுகவின் 53வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைப்ற்ற இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், இசக்கி சுப்பையா, நத்தம் விஸ்வநாதன், கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியின்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது; "மக்கள் அடிப்படையில் துவங்கப்பட்ட கட்சி அதிமுக. பிரிந்த இயக்கத்தை ஒன்றிணைத்த பெருமை முன்னாள் முதலமைச்சர் செயலலிதாவை சேரும். துவக்க விழா என்பது சாதாரணம் அல்ல. அதிமுகவை வீழ்த்த எத்தனையோ அவதராங்களை எடுத்தார் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. இவை அனைத்தையும் வீழ்த்தியவர்கள் முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா.
அதிமுக 2ஆக பிரிந்து விட்டது என கூறி கொண்டு இருக்கிறார்கள். அதிமுக ஒன்றாக தான் இருக்கிறது. வேண்டுமென்றே திட்டமிட்டு கட்சியை பிளவுபடுத்த திமுக போடும் நாடகம் இது. கருணாநிதி மற்றும் அமைச்சர்கள் குடும்பத்தினர் மட்டுமே திமுகவில் பதவிக்கு வர முடியும். அதிமுகவில் மட்டுமே சாதாரண தொண்டனும் உயர்ந்த பதவிக்கு வர முடியும். விசுவாசமாக இருப்பவர்களுக்கும், உழைப்பவர்களுக்கும் பதவி கொடுக்கும் ஒரே கட்சி அதிமுக. ஜனநாயக முறைப்படி செயல்படும் கட்சி அதிமுக. அதிக உறுப்பினர்கள் கொண்ட கட்சி அதிமுக.
தமிழ்நாட்டில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்ட கட்சி அதிமுக. அதிமுகவிற்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது. திமுக தான் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து வருகிறது. கூட்டணி கட்சிகளை தாங்கி நிற்கின்றது திமுக. அதிமுக சொந்த காலில் நிற்கிறது. சொந்த காலில் நிற்கின்றவர்களுக்கு தான் பலம் அதிகம். திமுக கூட்டணியில் பிரச்னை வந்துவிட்டது. திமுகவிற்கு மக்களிடத்தில் செல்வாக்கு சரிந்துவிட்டது. அதனால் தான் கூட்டணி கட்சியினர் மக்கள் பிரச்னைகளை பற்றி பேச ஆரம்பித்து விட்டனர்.
திமுக ஆட்சியில் கடன் மட்டும் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. எந்த திட்டமும் கொண்டுவரவில்லை. திமுக ஆட்சிக்கு வரும்முன் நீட் ரத்து என சொன்னார்கள். இதுவரை நீட் ரத்துகான ரகசியத்தை உதயநிதி வெளிவிடவில்லை"
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.