தி.மு.க. அரசின் நிர்வாகக் குளறுபடிகளால் அநியாயமாக உயிரிழந்த மாணவன் - நயினார் நாகேந்திரன் கண்டனம்

2 hours ago 2

தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் பகுதியில் இயங்கி வரும் CMS அரசு உதவிபெறும் மாணவர் விடுதியில் ஆய்வு மேற்கொள்ள அரசு அதிகாரிகள் வருவதாகக் கூறியிருந்த நிலையில், பணியாளர் பற்றாக்குறையால் அங்கு தங்கியிருந்த குழந்தைகளை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடுத்தியுள்ளது விடுதி நிர்வாகம். அவ்வாறு விடுதியின் கிணற்றையும் கிணற்றின் சுற்றுப்புறங்களையும் சுத்தம் செய்கையில் செல்வன் சேர்மதுரை எனும் விடுதி மாணவன் தவறி கிணற்றில் விழுந்து பரிதாபமாக இறந்துள்ளார்.

ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள இத்தகவலறிந்து மிகுந்த அதிர்ச்சியும் மன வேதனையும் அடைந்தேன். உயிரிழந்த அச்சிறுவனின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பள்ளிக் குழந்தைகளை சம்பளமில்லா தூய்மைப் பணியாளர்களாக பாவிக்கும் தி.மு.க. அரசின் குரூர மனப்போக்கிற்கு இன்னும் எத்தனை அப்பாவி குழந்தைகள் பலியாகப் போகிறார்களோ தெரியவில்லை. தரமற்ற சத்துணவு, இடிந்து விழும் கட்டடங்கள், ஆசிரியர்கள் பற்றாக்குறை, அடிப்படை வசதிகள் இல்லாமை என அரசுப் பள்ளிகளும் அரசு மாணவர் விடுதிகளும் நிலைகுலைந்து கிடக்கையில், விடுதிகளின் பெயரை மாற்றினால் அங்கு தங்கியிருக்கும் பிள்ளைகளின் நலன் மேம்பட்டுவிடுமா?

எனவே, தி.மு.க. அரசின் நிர்வாகக் குளறுபடிகளால் அநியாயமாக உயிரிழந்த மாணவனின் குடும்பத்தாருக்கு ரூ.10 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டுமென முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article