
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும். அதன்படி, நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
கோவிலில் பக்தர்கள் ராஜகோபுரம் வழியாகவும், அம்மணி அம்மன் கோபுரம் வழியாகவும் தரிசனத்திற்கு உள்ளே சென்றனர். பக்தர்களின் கூட்டமானது அம்மணி அம்மன் கோபுரம் நுழைவு வாயிலுக்கு வெளியே வடஒத்தவாடை தெருவிலும் நீண்டு காணப்பட்டது. கோவிலில் சாமி தரிசனம் செய்ய 4 மணி நேரத்திற்கு மேலானதாக பொது தரிசன வழியில் சென்ற பக்தர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கியது. இதனால் வழக்கத்தைவிட வெயில் அதிகமாக இருந்தது. கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
வெயிலின் தாக்கம் காரணமாக பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மோர் வழங்கப்பட்டது. மேலும் கோவிலில் பக்தர்கள் வரிசையில் நிற்கும் பகுதி மற்றும் கோவில் வளாகத்திற்குள் நடந்து செல்லும் பகுதிகளில் தேங்காய் நார் விரிப்புகள் விரிக்கப்பட்டு இருந்தன.
கோவில் பணியாளர்கள் மூலம் தேங்காய் நார் விரிப்புகளில் பக்தர்களுக்கு வெயிலின் தாக்கம் தெரியாமல் இருக்க தொடர்ந்து தண்ணீர் தெளிக்கப்பட்டது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் கடந்த சில நாட்களாக அனைத்து நாட்களிலும் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.