மும்பை: மேற்குவங்கத்தில் வன்முறை நடைபெறும் நிலையில், முர்ஷிதாபாத்தில் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை என்று பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் விவேக் அக்னிஹோத்ரி தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு அமல்படுத்தியுள்ள வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறை சம்பவத்தில் மூவர் கொல்லப்பட்டனர். 110க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
வன்முறையில் ஈடுபட்ட கும்பலைக் கலைக்கக் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த மோதல்களின் போது 15 போலீசாரும் காயமடைந்தனர். இதற்கிடையே பாஜக மூத்த தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து, வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய ஆயுதப் படைகளை அனுப்பி வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே ஒன்றிய உள்துறைச் செயலாளர் கோவிந்த் மோகன், மேற்கு வங்கத் தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநருடன் காணொளிக் காட்சி மூலம் மாநிலத்தின் சட்டம்- ஒழுங்கு நிலைமை குறித்து ஆய்வு செய்தார்.
அதேநேரம் ஒன்றிய உள்துறை அமைச்சகம், வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு கூடுதல் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களை அனுப்பி உள்ளது. இந்நிலையில் பாலிவுட் சினிமா தயாரிப்பாளர் அக்னிஹோத்ரி வெளியிட்ட பதிவில், ‘எங்களது புதிய படமான ‘தி டெல்லி ஃபைல்ஸ்’ படத்தின் கதை முர்ஷிதாபாத்தில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு படப்பிடிப்பு நடத்துவதற்கான சாத்திக்கூறுகள் இல்லை. ஷூட்டிங் நடத்துவதற்கு அரசோ, காவல்துறையோ எங்களுக்கு உதவவில்லை. அந்த பகுதி வேறு நாடு போல இருக்கிறது.
நாங்கள் மும்பையில் செட் அமைத்துப் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருந்தது. உண்மையில் இந்த சம்பவம் ஆபத்தானது’ என்று கூறியுள்ளார். இதற்கிடையே மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ெவளியிட்ட பதிவில், ‘மக்கள் அமைதி காக்க வேண்டும். மதத்தின் பெயரால் மதச்சார்பற்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்; மேற்கு வங்கத்தில் வக்பு சட்டம் அமல்படுத்த மாட்டோம்’ என்று தெரிவித்துள்ளார். இருந்தும் முர்ஷிதாபாத்தில் பதற்றம் நிலவி வருவதால் போலீசார் பலத்த பாதுகாப்பில் இருந்து வருகின்றனர்.
The post ‘தி டெல்லி பைல்ஸ்’ திரைப்படத்தின் சினிமா ஷூட்டிங்கை மேற்குவங்கத்தில் நடத்த முடியவில்லை: தயாரிப்பாளர் விவேக் அக்னிஹோத்ரி பதிவு appeared first on Dinakaran.