சென்னை,
லியோவுக்குப் பிறகு விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் 'தி கோட்'. வெங்கட் பிரபு இயக்கிய இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.இந்தப் படத்தில் விஜய்யுடன் சிநேகா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், மோகன், பிரபு தேவா, ப்ரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தி கோட் படம் உலகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 5-ந் தேதி வெளியானது.
இப்படத்தில் விஜய் அப்பா மற்றும் மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். இதில் மகன் கதாபாத்திரத்தில் வரும் விஜய்யின் வயதை குறைத்து காட்டுவதற்காக டீஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், திரிஷா, சிவகார்த்திகேயன் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்துள்ளனர். இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது.
இந்த திரைப்படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தில் பலர் சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம், முதல் நாளிலேயே உலகம் முழுவதும் 126 கோடி ரூபாய் வசூலித்தது. இந்த நிலையில் 'தி கோட்' திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ. 455 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.