தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை விரைந்து வெளியேற்ற அதிக திறன் கொண்ட 900 மோட்டார் பம்புகள் தயார்: அடிப்படை வசதிகளுடன் 169 நிவாரண முகாம்கள்: கொசுப்புழுக்களை கட்டுப்படுத்தும் பணி தீவிரம்: மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

1 month ago 4

சென்னை: சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை விரைந்து வெளியேற்ற அதிக திறன் கொண்ட 900 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு, சென்னையில் மாநகராட்சி சார்பில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சென்னையில் உள்ள ஓட்டேரி நல்லான் கால்வாய், பக்கிங்காம் கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய், அரும்பாக்கம் கால்வாய், ஒக்கியம் மதகு போன்ற நீர்நிலைகள் தூர்வாரும் பணிகள் முடிந்திருக்கின்றன. அம்பத்தூர், போரூர், நாராயணபுரம், கீழ்க்கட்டளை ஏரிகளின் நீர்வரத்துக்கால்வாய் தூர் வாரப்பட்டுள்ளது. இவற்றில் இருந்து 1500க்கும் மேற்பட்ட லாரிகளில் ஆகாயத்தாமரைகள், குப்பைகள், கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

மேலும், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 792 கி.மீ. நீளத்திற்கு மழைநீர் கால்வாய்களை தூர்வாரும் பணி முடிக்கப்பட்டுள்ளது. 1152 கி.மீ. நீளத்திற்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. 53.42 கி.மீ. நீளத்தில் உள்ள 33 கால்வாய்களில் 12 இயந்திரங்கள் மூலம் ஆகாயத்தாமரை மற்றும் கசடு மண் அகற்றப்படுகிறது. 73,180 கசடு அகற்றும் தொட்டிகள் தூர்வாரப்பட்டுள்ளது. 2021 முதல் 2024 வரை 784.96 கி.மீ. நீளத்திற்கு புதியதாக மழைநீர் வடிகால்கள் கட்டப்பட்டுள்ளது. மேலும், 350 கி.மீ. நீளத்திற்கு கொசஸ்தலையாறு, கோவளம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னையில் வடகிழக்கு பருவழை முடியும் வரை அவசர பணிகள் தவிர சாலை வெட்டு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் 2 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதையொட்டி, தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை மீட்க படகுகள், மழைநீரை விரைந்து வெளியேற்ற ராட்சத மோட்டார்கள், சிறப்பு முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்றிட பல்வேறு திறன் கொண்ட 990 மோட்டார் பம்புகள், அடிப்படை வசதிகளுடன் 162 நிவாரண மையங்கள், விழுந்த மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்ற 280 மரம் அறுக்கும் இயந்திரங்கள், சிந்தாதிரிப்பேட்டை மற்றும் கோபாலபுரத்தில், மணிக்கு 1,500 நபர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் தயார் செய்யும் பொது சமையல் கூடங்கள் தயார் நிலையில் உள்ளன.

ஒவ்வொரு வார்டுகளிலும் புயல் மற்றும் மழைநீர் அகற்றும் அவசரப் பணிகளுக்கு 5 நபர்கள் தற்காலிகமாக பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்கள். பொதுமக்களிடமிருந்து மழை தொடர்பான புகார்களை பெற்று உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில், ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் 24×7 இயங்கி வருகிறது.

15 மண்டலங்களுக்கும் ஐஏஎஸ் அலுவலர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு, கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாநகராட்சியின் 16 சுரங்கப்பாதைகள் மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் 6 சுரங்கப்பாதைகள் ஆகியவற்றில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற, மோட்டார் பம்புகள் மற்றும் ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் உள்ளன. இந்த சுரங்கப்பாதைகள் சிசிடிவி காட்சி மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சியில் உள்ள 300 சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் மழைக்காலத்திற்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன. மழைக்காலங்களில் கூடுதலாக மருத்துவ முகாம்கள் நடத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொசுக்களால் பரவும் நோய்த்தடுப்பு பணிக்காக நிரந்தர மற்றும் தற்காலிக பணியாளர்கள் என 3,368 களப்பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கொசுக்களை கட்டுப்படுத்தும் பணிக்காக 319 மருந்து தெளிப்பான்கள், 54 பவர் ஸ்ப்ரேயர்கள், பேட்டரி மூலம் இயங்கும் 156 ஸ்ப்ரேயர்கள், 324 புகைப்பரப்பும் இயந்திரங்கள், வாகனங்களில் பொருத்தப்பட்ட 64 புகைப்பரப்பும் இயந்திரங்கள், 6 ட்ரோன் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும், அரசு மற்றும் மாநகராட்சி கட்டிடங்கள், பள்ளிகள், பூங்காக்கள், அரசு கட்டிடங்கள், புதிய கட்டுமான பணிகள் மற்றும் வீடுதோரும் ஆய்வு செய்யப்பட்டு கொசு உற்பத்தியாகக்கூடிய தண்ணீர் தேங்கும் இடங்கள், டயர்கள் மற்றும் உபயோகமற்ற பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. கொசுப்புழுக்களை கட்டுப்படுத்த டெமிபாஸ் என்ற மருந்தும், நீர் வழிப்பாதைகளில் கொசுப்புழுக்கொல்லி எண்ணெயும் தெளிக்கப்பட்டு வருகின்றன.

வளர்ந்த கொசுக்களை கட்டுப்படுத்த கையினால் எடுத்து செல்லும் மற்றும் வாகனங்களில் எடுத்து செல்லும் புகைப்புரப்பும் இயந்திரங்கள் மூலம் கொசுக்கொல்லி மருந்துகள் பரப்பட்டு வருகின்றன. பொதுமக்களிடையேயும், மாணவர்களிடையும் கொசுகளை பற்றியும், கொசுக்களால் ஏற்படும் நோய்களை பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கொசு ஒழிப்பு பணிகளை தீவிரபடுத்தும் பொருட்டு ரூ.67,20,000 செலவில் 100 கையினால் எடுத்து செல்லக்கூடிய புகைப்பரப்பும் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்கள் பொதுமக்கள் பணிக்காக 15 மண்டலங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

The post தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை விரைந்து வெளியேற்ற அதிக திறன் கொண்ட 900 மோட்டார் பம்புகள் தயார்: அடிப்படை வசதிகளுடன் 169 நிவாரண முகாம்கள்: கொசுப்புழுக்களை கட்டுப்படுத்தும் பணி தீவிரம்: மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article