பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்த தாலுகாவாக தரம் உயர்ந்த ஆனைமலையில் தனியாக தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவடடம் பொள்ளாச்சி தாலுகா வளாகம் அருகே தீயணைப்பு நிலையம் அமைந்துள்ளது. பொள்ளாச்சி தாலுகாவிற்குட்பட்ட நகர், சுற்று வட்டார பகுதி மற்றும் ஆனைமலை தாலுகாவிற்குட்பட்ட சுற்று வட்டார பகுதிகளுக்கு இந்த தீயணைப்பு நிலையத்தில் உள்ள வாகனம் மூலமே, தீத்தடுப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில் சில தொழிற்சாலைகளில் ஏதேனும் பெரிய அளவில் தீ விபத்து நடந்தால், தீயணைப்பு நிலையத்தில் இருந்து செல்லும் வாகனத்தில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் போதுமானதாக இல்லை. அந்த வாகனத்தில் உள்ள தண்ணீர் குறிப்பிட்ட நேரத்தில் தீர்ந்து விடுவதால், மீண்டும் தண்ணீர் நிரப்ப செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சில நேரத்தில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக அப்பகுதியிலிருந்து, தனியார் வாகனத்தில் தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. பொள்ளாச்சியை சுற்றிலும் நார் உற்பத்தி தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது, அடிக்கடி தீ விபத்து நடக்கிறது. எதிர்பாராத விதமாக குடிசைகளிலும், கிராமங்களில் ஆங்காங்கே கொட்டி வைக்கப்பட்டிருக்கும் கழிவு மஞ்சிகளிலும் தீப்பற்றி எரியும்போது அதனை அணைக்க போதுமான அளவுக்கு தண்ணீர் நிரப்பிய வாகனம் இருப்பதில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே, பொள்ளாச்சி நகரில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆனைமலையில், தனியாக தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து கோரிக்கை வருகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு,பொள்ளாச்சி தாலுகாவில் இருந்து நிர்வாக காரணத்திற்காக பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆனைமலையில் தனியாக தீயணைப்பு நிலையம் இல்லாதது ஒரு குறையாக உள்ளது. பொள்ளாச்சியை அடுத்த நெகமம் அருகே தீயணைப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தாலுகா அந்தஸ்தில் உள்ள ஆனைமலையில் தனியாக தீயணைப்பு நிலையம் இன்னும் அமைக்கப்படாமல் உள்ளது.எனவே, கோவை மாவட்டத்தில் வளர்ந்து வரும் தாலுகாவில் ஒன்றான ஆனைமலையில், விரைந்து தீத்தடுப்பு நடவடிக்கைக்காக, தனி தீயணைப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும், நகரில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் கூடுதலாக தண்ணீர் நிரப்பிய வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்துவதற்கான நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்ட ஆனைமலையில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படுமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.