கோவை, நீலகிரி மாவட்டங்களில் வரும் 25, 26-ம் தேதிகளில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்குப் பருவமழை கேரளாவில் அடுத்த சில தினங்களில் தொடங்கி, தமிழகப் பகுதிகளில் பரவ வாய்ப்புள்ளது. மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவுகிறது. இது வடக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும்.