தாய்மைப்பேறு… நம்பிக்கைகள் Vs உண்மைகள்

3 months ago 21

நன்றி குங்குமம் டாக்டர்

தாய்மை என்பது ஒரு வரம். அவ்வரம் கிடைக்காதா என்று ஏங்கும் தம்பதியர் இங்கு அநேகம். திருமணம் எனும் பந்தத்தில் காதலோடு நுழையும் ஒவ்வொரு தம்பதிக்கும் குழந்தை பாக்கியம் எனும் சந்தான சம்பத்துதான் முக்கிய எதிர்ப்பார்ப்பு. ஆறு மாதங்கள் ஆனாலே உறவுகளும் நண்பர்களும் சுற்றமும், ’என்ன விஷேசமா?’ என்று கேட்கத் தொடங்கிவிடும். இப்படியான வாழ்வியல் சூழலில் குழந்தையின்மை என்பது ஒரு பெரும் பாரம். நம் சமூகத்தில் குழந்தையின்மை தொடர்பான பல்வேறு தவறான நம்பிக்கைகள் நம்மிடையே நிலவுகின்றன. அப்படியான தவறான நம்பிக்கைகளுக்கு மருத்துவரீதியான விளக்கங்களைப் பார்ப்போம்.

நம்பிக்கைகள்… உண்மைகள்!

`குழந்தையின்மைக்காக நீண்ட நாள்கள் மாத்திரைகள் எடுத்துக்கொள்வதாலும், கருத்தடை மாத்திரைகள் சாப்பிடுவதாலும் கருத்தரித்தல் தாமதமாகும்.’
இது தவறான நம்பிக்கை. பொதுவாக, குழந்தையின்மைக்காகச் சிகிச்சை எடுக்கும்போது பெண்களின் மாதவிடாய் சுழற்சியைச் சீராக்க மாத்திரைகள் கொடுக்கப்படும். மாதவிடாய் சுழற்சி சீராகி, மாத்திரைகளை நிறுத்தியவுடன் கருத்தரித்துவிடுவார்கள். கருத்தடைக்காக மாத்திரைகள் உட்கொள்ளும்போது கருத்தரிக்க முடியாது. ஆனால், மாத்திரை சாப்பிட்டு முடித்த பிறகு கருத்தரிப்பதில் பிரச்னை இருக்காது.

கருத்தடைக்காக மாத்திரை சாப்பிடுபவர்கள் மருத்துவரின் ஆலோசனையின்பேரில் அதிகபட்சம் ஓராண்டு மட்டுமே எடுத்துக்கொள்ளலாம். கருத்தடை மாத்திரைகளைத் தொடர்ந்து எடுப்பதால், பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்படும்.

`நாம் உண்ணும் உணவுகளும் குழந்தையின்மைக்குக் காரணமாகலாம்!’எந்த உணவும் குழந்தைப்பேற்றை நேரடியாக பாதிக்காது. ஆனால் ஆரோக்கியமில்லாத உணவுகள், துரித உணவுகளைச் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரித்து, ஹார்மோன்களின் சமநிலை பாதிக்கப்படும். இதனால் மாதவிடாய் சுழற்சியிலும், சினைப்பையிலிருந்து முதிர்ச்சியடைந்த கருமுட்டைகள் வெளியேறுவதிலும் பிரச்னைகள் ஏற்பட்டு கருத்தரிப்பதில் சிக்கல் ஏற்படும். ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம், ஆண்களுக்கு உயிரணுக்களின் எண்ணிக்கையையும் தரத்தையும் பாதிக்கும். இதுவும் குழந்தையின்மைக்குக் காரணமாக அமைந்துவிடும்.

`ஏற்கெனவே ஒரு குழந்தைக்குத் தந்தையானவருக்கு, இனப்பெருக்கத்திறன் எப்போதும் பாதிக்கப்படாது!’
ஆண்களுக்கு விந்து நீரிலும் விந்தணுக்களிலும் எப்போது வேண்டுமானாலும் பாதிப்புகள் ஏற்படலாம். அவர் உடற்பயிற்சி செய்யாதவர் என்றால் இடைப்பட்ட காலத்தில் உடல் எடை அதிகரித்திருக்கலாம். அத்துடன் சர்க்கரைநோய், ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் உருவாகியிருக்கலாம். திடீரென்று மது மற்றும் புகைப்பழக்கம் ஏற்பட்டிருக்கலாம். இவை அனைத்தும் உயிரணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தை பாதிக்கலாம்.

`மாதவிடாய்க் காலத்திலும் கருத்தரிக்க முடியும்!’

மாதவிடாய் நேரத்தில் கருத்தரிக்க 100 சதவிகிதம் சாத்தியமில்லை. மாதவிடாய் சுழற்சியில் மாதவிடாய்க் காலம், இனப்பெருக்க காலம், கருமுட்டை வெளியேற்றநிலை, முன்மாதவிடாய்நிலை என நான்கு நிலைகள் உள்ளன. அவற்றில், மாதவிடாய் தொடங்கி சராசரியாக 14-வது நாள், கருமுட்டை வெளியேற்றநிலை (இந்த நாள் கணக்கு நபருக்கு நபர் வேறுபடும்.) ஏற்படும். இந்த நேரத்தில்தான் கருத்தரிக்க முடியும்.

`மன அழுத்தத்துக்கும் கருத்தரிப்புக்கும் தொடர்பில்லை!’

மன அழுத்தம் காரணமாக ஹார்மோன்களில் சீரற்றநிலை ஏற்படலாம். இதனால் மாதவிடாய் சுழற்சி, கருமுட்டை வெளியேற்றநிலை அனைத்தும் பாதிக்கப்பட்டு கருத்தரிப்பதில் சிக்கல் ஏற்படும்.`வயதானாலும், ஆரோக்கியமாக இருந்தால் குழந்தைப்பேறு சாத்தியமே!’வயதுக்கும் குழந்தைப்பேற்றுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இளம் வயதில் இனப்பெருக்கத்திறன் அதிகமாகக் காணப்படும். 35 வயதைக் கடந்த பெண்கள், 38 வயதைக் கடந்த ஆண்கள் இருவரும் ஆரோக்கியமாக இருந்தாலும் இனப்பெருக்கத்திறன் இயற்கையாகவே குறையத் தொடங்கும். அதனால் இளம் வயதிலேயே குழந்தை பெற்றுக்கொள்வதுதான் சிறந்தது.

`உடல் பருமன் குழந்தைப்பேற்றைப் பாதிக்காது!’

குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதியர் இருவரும் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம். உடல் பருமனால் நிகழும் ஹார்மோன் மாற்றங்கள் பெண்களின் மாதவிடாய் சுழற்சியையும், ஆண்களுக்கான உயிரணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தையும் பாதிக்கும். குழந்தையின்மைப் பிரச்னையையும்
ஏற்படுத்தும்.

`புகைப்பழக்கம் குழந்தைப்பேற்றைப் பாதிக்காது!’

புகைப்பழக்கம் நிச்சயம் குழந்தைப்பேற்றை பாதிக்கும். ஆண்களுக்குப் புகைப்பழக்கம் இருந்தால், அது உயிரணுக்களை பாதிக்கும். பெண்கள் புகைபிடிக்கும் பட்சத்தில் சினைப்பையில் கருமுட்டைகள் வளர்வது பாதிக்கப்படும். இவை இரண்டுமே குழந்தையின்மைப் பிரச்னையை ஏற்படுத்தும்.

தொகுப்பு: சரஸ்

The post தாய்மைப்பேறு… நம்பிக்கைகள் Vs உண்மைகள் appeared first on Dinakaran.

Read Entire Article