தாயை அடித்துக்கொன்ற மகனுக்கு ஆயுள் சிறை தி.மலை மகளிர் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு குடிக்க பணம் தராததால் ஆத்திரம்

1 week ago 2

திருவண்ணாமலை, பிப்.15: செய்யாறு அருகே குடிக்க பணம் தர மறுத்ததால், விறகு கட்டையால் தாயை அடித்த கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை மகளிர் கோர்ட் தீர்ப்பு அளித்தது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த கீழ்நாயக்கன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் மனைவி சந்திரா(65). அங்கன்வாடி மையத்தில் அமைப்பாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு மூன்று மகன்கள். அனைவரும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்நிலையில், வந்தவாசி அடுத்த கீழ்நாயக்கன் பாளையம் கிராமத்தில் இரண்டாவது மகன் வெங்கடேசன்(42) என்பவருடன், சந்திரா வசித்து வந்தார். குடி பழக்கத்துக்கு அடிமையான வெங்கடேசன், குடிப்பதற்கு பணம் கேட்டு தனது தாய் மற்றும் மனைவி ஆகியோரிடம் அடிக்கடி தகராறு செய்வது வழக்கமாக இருந்துள்ளது. மேலும், குடிநோய் அதிகரித்து மனநலன் பாதித்துள்ளது. அதற்காக, சில மாதங்கள் சிகிச்சையும் பெற்றுள்ளார். ஆனாலும், குடி பழக்கத்தை விடவில்லை.

இந்நிலையில், கடந்த 2.8.2020 அன்று தனது தாயிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு வெங்கடேசன் தகராறு செய்துள்ளார். அப்போது, இன்னும் பென்ஷன் வரவில்லை என கூறிய சந்திரா பணம் தர மறுத்துள்ளார். அதனால், ஆத்திரமடைந்த மகன் வெங்கடேசன், வீட்டில் இருந்த விறகு கட்ைடயை எடுத்து தாயின் தலையில் தாக்கியுள்ளார். அதனால், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த சந்திரா, துடிதுடித்து இறந்தார். அதைத்தொடர்ந்து, அங்கிருந்து வெங்கடேசன் தப்பிவிட்டார். இது குறித்து, சந்திராவின் மூத்த மகன் ராஜகோபால் என்பவர், தூசி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை, திருவண்ணாமலை மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் சிறப்பு குற்ற பொது வழக்கறிஞர் வீணாதேவி ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுஜாதா நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தார். அதில், குடிக்க பணம் தர மறுத்ததால் தாயை அடித்து கொலை செய்த வெங்கடேசனுக்கு ஆயுள் தண்டனையும், ₹1000 அபராதமும் விதித்தார். மேலும், அபராதம் செலுத்த தவறினால், கடுதலாக 3 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட வெங்கடேசனை, போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post தாயை அடித்துக்கொன்ற மகனுக்கு ஆயுள் சிறை தி.மலை மகளிர் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு குடிக்க பணம் தராததால் ஆத்திரம் appeared first on Dinakaran.

Read Entire Article