தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி சிக்கிய விவகாரம் புதுச்சேரி பாஜ எம்பி செல்வகணபதியிடம் 10 மணி நேரம் கிடுக்குப்பிடி விசாரணை

20 hours ago 2

சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் சிக்கிய விவகாரம் தொடர்பாக புதுச்சேரி மாநில தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான செல்வகணபதியிடம் சிபிசிஐடி போலீசார் 10 மணி நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்தனர். அப்போது பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி பணம் தொடர்பாக அவர் முக்கிய தகவல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் கொண்டு சென்ற ரூ.4 கோடி ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். பணத்துடன் பிடிபட்ட பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனின் ஓட்டல் மேலாளர் உட்பட 3 பேர், ரூ.4 கோடி பணம் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என வாக்கு மூலம் அளித்தனர்.

அதனை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் நயினார் நாகேந்திரனின் ஓட்டல் மேலாளர் சதீஷ், அவரது சகோதரர் நவீன் மற்றும் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் பெருமாள், நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன், முருகனிடம் பணியாற்றும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் மற்றும் பாஜக தொழிற்துறை மாநில தலைவர் கோவர்த்தனின் மகன்கள் பாலாஜி, கிஷோர் மற்றும் பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், பாஜக மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் உட்பட 15 பேரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். அதை தொடர்ந்து, சிபிசிஐடி போலீசார் பாஜ மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகத்திடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கேசவ விநாயம் அளித்த தகவலின் படி, ரூ.4 கோடி தொடர்பாக புதுச்சேரி மாநில தலைவரும் மாநிலங்களவை உறுப்பினரான செல்வகணபதி மற்றும் சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த தொழிலதிபர் பங்கஜ் லால்வானி மற்றும் என்எஸ்சி போஸ் சாலையை சேர்ந்த சூரஜ் ஆகியோரும் நேரில் ஆஜராக சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பினர். சம்மனை தொடர்ந்து செல்வகணபதி சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் தாம்பரம் ரயில் நிலையத்தில் பிடிபட்ட ரூ.4 கோடி பணம் தொடர்பாக விசாரணை நடத்தினர். 10 மணி நேரம் நடந்த விசாரணையில் செல்வகணபதி ரூ.4 கோடி பணம் தொடர்பாக முக்கிய தகவல்கள் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதை சிபிசிஐடி போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.

The post தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி சிக்கிய விவகாரம் புதுச்சேரி பாஜ எம்பி செல்வகணபதியிடம் 10 மணி நேரம் கிடுக்குப்பிடி விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article