தாம்பரம் மாநகராட்சியில் 102 சாலைப்பணிகள் நிறைவு

1 month ago 19

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி பகுதியில் இதுவரை 102 சாலை பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. தாம்பரம் மாநகராட்சியில் பல்வேறு திட்ட நிதிகளின் கீழ், பேருந்து சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகளில் தார் சாலைகள் மற்றும் சிமென்ட் கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணிகள் சிறப்பாக நடந்து வருகின்றன.

தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டம் மூலம் உட்புறச் சாலைகளை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சாலைப் பணிகள் அனைத்தும் பொறியாளர்களின் நேரடி மேற்பார்வையில், ஏற்கனவே அமைக்கப்பட்ட பழைய சாலைகள் முழுவதுமாக அகழ்ந்தெடுக்கப்பட்டு, புதிதாக அமைக்கப்படும் சாலைகள் தரமான சாலைகளாக அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், மாநகராட்சியின் ஆணையர் தலைமையில், உயர் அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களைக் கொண்ட குழுவினரால் சாலை அமைக்கும் பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தரமான சாலைகள் அமைக்கப்படுவதை உறுதி செய்து வருகின்றனர்.

தாம்பரம் மாநகராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ₹19.74 கோடியில் 195 தார் சாலைகள் மற்றும் 58 சிமென்ட் கான்கிரீட் சாலைகள் என மொத்தம் 253 உட்புறச்சாலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதை தொடர்ந்து, தாம்பரம் மாநகராட்சி, 1வது மண்டல பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்ட நிதியின் கீழ் ₹ 5.20 கோடி மதிப்பீட்டில் 7.406 கிலோ மீட்டர் நீளத்தில் 65 தார் சாலைகள் மற்றும் ₹42 லட்சம் மதிப்பீட்டில் 1.036 கிலோமீட்டர் நீளத்தில் 8 சிமென்ட் கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

2வது மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்ட நிதியின் கீழ் ₹72 லட்சம் மதிப்பீட்டில் 1.066 கிலோமீட்டர் நீளத்தில் 11 தார் சாலைகள் மற்றும் ₹29 லட்சம் மதிப்பீட்டில் 0.584 கிலோமீட்டர் நீளத்தில் 3 சிமென்ட் கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. 3வது மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்ட நிதியின் கீழ் ₹ 65 லட்சம் மதிப்பீட்டில் 1.464 கிலோமீட்டர் நீளத்தில் 10 தார் சாலைகள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

4வது மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்ட நிதியின் கீழ் ₹64.22 லட்சம் மதிப்பீட்டில் 0.869 கிலோமீட்டர் நீளத்தில் 5 தார்சாலைகள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் மாநகராட்சியில் நடந்து வரும் சாலைப் பணிகள் அனைத்தும் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என தாம்பரம் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தாம்பரம் மாநகராட்சியில் 102 சாலைப்பணிகள் நிறைவு appeared first on Dinakaran.

Read Entire Article