தாம்பரம்: அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் மக்களைச் சென்றடையும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்திடவும், பொதுமக்களின் குறைகளை கண்டறிந்து, அவற்றின் மீது உடனடி தீர்வுகாணும் வகையில் மக்கள் குறை தீர்வு சிறப்பு முகாம்கள் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மண்டலங்கள் வாரியாக நடைபெறவுள்ளது. அதன்படி 1 மற்றும் 5வது மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் வரும் 21ம் தேதி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. அதன் விவரம்: தாம்பரம் மாநகராட்சி, 1வது மண்டலத்துக்கு உட்பட்ட ஸ்ரீ கணேஷ் திருமண மண்டபம், பொழிச்சலூர் சாலை, பம்மல் என்ற முகவரியில், 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 10, 11, 12, 29, 30, 31 ஆகிய 14 வார்டுகளை சேர்ந்தவர்களுக்கு, காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை முகாம் நடைபெறும்.
தாம்பரம் மாநகராட்சி, 5வது மண்டலத்துக்குட்பட்ட ஸ்ரீ வாசுதேவா திருமண மாளிகை, வேளச்சேரி சாலை கிழக்கு தாம்பரம் என்ற முகவரியில், 45, 46, 47, 48, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70 ஆகிய 13 வார்டுகளை சேர்ந்தவர்களுக்கு, மாலை 3.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை முகாம் நடைபெறும். இந்த முகாம்களில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் வழங்கப்படும் கட்டுமான வரைபட ஒப்புதல், சொத்துவரி, குடிநீர் வரி பெயர் மாற்றங்கள், வர்த்தக உரிமம், குடிநீர், கழிவுநீர் இணைப்பு, பிறப்பு, இறப்புச் சான்றிதழ், திடக்கழிவு மேலாண்மை, காலிமனை வரிவிதிப்பு, சாலையோர வியாபாரிகள் அடையாள அட்டை, தொடர்பான சேவைகள். எரிசக்தித் துறை, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் வழங்கப்படும் புதிய மின் இணைப்பு, மின் கட்டண மாற்றங்கள், மின் இணைப்பு பெயர் மாற்றம், கூடுதல் மின் சுமை கட்டணங்கள் தொடர்பாகவும்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் வழங்கப்படும் பட்டா மாறுதல், பட்டா உட்பிரிவு, இணைய வழி பட்டா, நில அளவீடு (அத்து காண்பித்தல்), வாரிசுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்கள். முதியோர், விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், மாற்றுத்திறனாளி, முதிர்க்கன்னி, மூன்றாம் பாலினத்தோருக்கான உதவித் தொகைகள் தொடர்பாகவும், இதுபோன்ற பல்வேறு வகைமைகளில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கலாம். முகாம்களில் கலந்து கொள்ளும் பொதுமக்கள், தங்களது கோரிக்கையினை கணினியில் பதிவு செய்ய வேண்டியிருப்பின், அதற்கான அனைத்து ஆவணங்களையும் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். இந்த முகாம்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் மக்கள் குறைதீர் சிறப்பு முகாம்: நாளை மறுநாள் நடக்கிறது appeared first on Dinakaran.