தாம்பரம் சுற்றுப்புற பகுதிகளில் கஞ்சா, போதை மாத்திரை விற்ற பெண்கள் உள்பட 10 பேர் கைது: 24 கிலோ கஞ்சா பறிமுதல்

2 months ago 7

தாம்பரம்: தாம்பரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை செய்து வந்த பெண்கள் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். பீர்க்கன்காரணை ஏரிக்கரை பகுதியில் உள்ள சுடுகாட்டில் மர்ம நபர்கள் சிலர் கஞ்சா உபயோகித்து வருவதாக பீர்க்கன்காரணை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று அங்கு கஞ்சாவுடன் இருந்த மூன்று பேரை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் பீர்க்கன்காரணை, தேவநேசன் நகர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (21), சாமுவேல் (24), முடிச்சூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ் (25) என்பதும், மூன்று பேரும் கஞ்சா மற்றும் போதை மாத்திரையை சலுகை முறையில் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

இவர்கள் ரயில் மூலம் மும்பை சென்று அங்கிருந்து 1200 போதை மாத்திரைகள் கொண்டு வந்ததும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவர்கள் பதுக்கி வைத்திருந்த 1200 போதை மாத்திரைகள் மற்றும் சுமார் ஒன்றரை கிலோ கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மூன்று பேருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு ஏற்பட்டு கடந்த டிசம்பர் மாதம் மூன்று பேரும் ஆந்திராவுக்கு சென்று கஞ்சா வாங்கி வந்து கடந்த ஜனவரி மாதம் முதல் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும், கஞ்சா விற்பனையில் இரட்டிப்பு லாபம் கிடைப்பதால் வெளி மாநிலங்களுக்குச் சென்று உயர் ரக கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை வாங்கி வந்து சலுகை முறையில் விற்பனை செய்து வந்ததாகவும் போலீசிடம் தெரிவித்துள்ளனர். கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்து, அதில் கிடைக்கும் பணத்தில் இசிஆர் சாலையில் உள்ள ரிசார்ட் சென்று அங்கு உல்லாசமாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.

* பள்ளிக்கரணை, காமகோட்டி நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பள்ளிக்கரணை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் 3 வாலிபர்களை பிடித்து, அவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டனர். அதில், 8.5 கிலோ கஞ்சா இருந்தது. மூவரையும் கைது செய்து காவல்நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில், சென்னை பொன்னியம்மன் மேட்டு 10வது தெருவை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (20), அயனாவரம் மேலப்பா குறுக்கு தெருவை சேர்ந்த சைஹ புகாரி (23), ஒக்கியம் துரைபாக்கம், பாரதியார் நகர், டிரினிட்டி பார்க்கை சேர்ந்த பிரகாஷ் ராஜ் (27) என தெரியவந்தது. இவர்கள் டார்ஜிலிங்கில் இருந்து கஞ்சா வாங்கி வந்து பள்ளிக்கரணை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கூலி தொழிலாளருக்கு விற்றது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து மூன்று செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். பிறகு வழக்கு பதிவு செய்த போலீசார் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

* துரைப்பாக்கம், கண்ணகி நகர் பகுதியில் கூலி தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கண்ணகி நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று கண்காணித்தபோது மறைவான இடத்தில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த 3 பெண்கள் உள்பட 4 பேரை, காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். விசாரணையில், பெரும்பாக்கம் சுனாமி குடியிருப்பை பகுதியை நிவேதா (27), கார்த்திக் (27), வியாசர்பாடியை சேர்ந்த சலீம் ஷரீப் (23), சைதாப்பேட்டையை சேர்ந்த பிரமிளா (28) என்பதும், இவர்கள் ஒடிசா மாநிலத்தில் கஞ்சா வாங்கி வந்து, கண்ணகி நகர் பகுதியில் விற்பனை செய்ததும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து 14 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரையும் சிறையில் அடைத்தனர்.

The post தாம்பரம் சுற்றுப்புற பகுதிகளில் கஞ்சா, போதை மாத்திரை விற்ற பெண்கள் உள்பட 10 பேர் கைது: 24 கிலோ கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article