தாம்பரம்: அகரம் தென் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு நிலங்கள், கோயில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அதே பகுதியை சேர்ந்த சந்தானம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். இதனை தொடர்ந்து அகரம் பகுதியில் சர்வே எண் 205/8ஏ, 206, 209 ஆகிய இடங்களில் உள்ள அரசு நில ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பரம்பரை பரம்பரையாக தரிசு நிலத்தில் வசித்து வந்த அப்பகுதி மக்கள் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அப்பீல் செய்திருந்தனர். இந்நிலையில் வழக்கு தொடர்ந்த நபர் ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இதனை தொடர்ந்து உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்ற உத்தரவிட்டதை தொடர்ந்து வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை நேற்று தொடங்கினர். இதில் அகரம் தென் ஊராட்சி தலைவர் ஜெகதீஸ்வரன் வீடு உட்பட 9 வீடுகள், 3 கடைகளை பொக்லைன் இயந்திரம் மூலம் இருக்கும் பணிகள் தொடங்கியது. தாம்பரம் தாசில்தார் ராஜேந்திரன் தலைமையில் வருவாய் துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வீடுகளை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தள்ளுமுள்ளில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அகரம்தென் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீஸ்வரன் புஞ்சை தரிசி நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சந்தானம் என்பவரால் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அகரம்தென் கிராமத்தில் பலகோடி மதிப்பிலான புஞ்சை தரிசி நிலத்தை அகரம்தென் ஊராட்சி மன்ற தலைவர் கும்பத்தினர் உள்ளிட்ட பல்வேறு நபர்கள் ஆக்கிரமித்து வீடு, வணிகவளாகம், கடைகள் என பல்வேறு விதமாக ஆக்கிரமித்து இருந்த நிலையில் அந்த ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
The post தாம்பரம் அருகே அரசு நிலத்தில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற தலைவரின் வீடு உள்பட 11 கட்டிடங்கள் அகற்றம் appeared first on Dinakaran.