தாமோதர மாதம் ஆரம்பம்.. இஸ்கான் கோவில்களில் பக்தர்கள் நேரடியாக பகவானுக்கு ஆரத்தி காட்டலாம்

3 months ago 22

இறைபக்திக்குரிய நான்கு மாதங்கள் என்றழைக்கப்படும் சாதுர் மாதங்களில் தாமோதர மாதம் சிறந்த மகிமைகள் பொருந்தியது ஆகும். சாதுர் மாதங்களில் இதனை கார்த்திகை என்றழைப்பர். தமிழ் மாதங்களில் கார்த்திகையை போல் இந்த தாமோதர மாதத்தில் பகவானின் ஸ்ரீகிருஷ்ணரின் ஆலயத்தையும், பூஜை அறையையும் நெய் தீபங்களால் அலங்கரிப்பது அவசியமானதாகும். இந்த வருடம் தாமோதர மாதம் இன்று (17.10.2024) துவங்கி நவம்பர் 15-ம் தேதி நிறைவடைகிறது.

தாமோதர திருவிழா

தாமோதரர் என்றால் ஸ்ரீகிருஷ்ணரை குறிக்கும். தாம என்றால் கயிறு. உதர என்றால் வயிறு. பகவான் ஸ்ரீகிருஷ்ணரை, அன்னை யசோதா தேவி கயிற்றால் உரலில் கட்டிய நிகழ்வை நினைவுபடுத்தும் பொருட்டும், கிருஷ்ணரின் தூய பக்தை ஸ்ரீமதி ராதாராணியை வழிபடும் பொருட்டும் தாமோதரத் திருவிழா கொண்டாடப்படுகிறது.

"இந்த மாதம் பகவான் கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானதாகும். இம்மாதத்தில் கிருஷ்ணருக்கு சிறிதளவு பக்திசேவை செய்தால்கூட கிருஷ்ணர் தன் திவ்ய ஸ்தலத்தையே அந்த பக்தனுக்கு வழங்குவார்'' என்று பத்ம புராணம் கூறுகிறது. அதே போல், ''புண்ணிய மாதங்கள் அனைத்திலும் அதி புண்ணிய மாதம் தாமோதர மாதம்'' என்று ஸ்கந்த புராணமும் விவரிக்கிறது.

 

தாமோதர விரதம் கடைபிடிக்கும் முறை

ஹரே கிருஷ்ண மஹாமந்திர ஜபம், பகவான் கிருஷ்ணருக்கு நெய் தீப ஆரத்தி காட்டுதல் மற்றும் உணவுக்கட்டுப்பாடு ஆகியவை தாமோதர மாத விரதத்தின் முக்கியமான மூன்று சிறப்பம்சங்கள் ஆகும்.

மஹாமந்திர ஜபம்

''ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே;

ஹரே ராம ஹரே ராம; ராம ராம ஹரே ஹரே''

எனும் பதினாறு வார்த்தைகள் அடங்கிய இந்த மஹாமந்திரத்தை குறைந்த பட்சம் 108 தடவையும், அதிகபட்சம் எவ்வளவு முறை உச்சரிக்க முடியுமோ அவ்வளவு முறை உச்சரிக்கலாம்.

விரதங்கள் பின்பற்றுவதில் மிக முக்கியமானது ஹரி நாமத்தை உச்சரிப்பதே ஆகும் என்று ஸ்ரீகிருஷ்ண சைதன்ய மஹாபிரபுவின் மிக நெருங்கிய சீடரான ஸ்ரீல ஜீவ கோஸ்வாமி வலியுறுத்தியுள்ளார். ஏனெனில் விரதத்தை கடைபிடிப்பதற்கான மனநிலை உட்பட அனைத்து நலன்களையும் இந்த ஹரே கிருஷ்ண மஹாமந்திரம் தரும் என்பது குறிப்பிடத்தக்கது.

தீப ஆரத்தி வழிபாடு

பகவான் கிருஷ்ணருக்கு பிரியமான தாமோதர மாதத்தில் தீப ஆரத்தி காட்டுவதால் பலவிதமான நற்பலன்களை பெறலாம் என்று வேத சாஸ்திரங்கள் கூறுகின்றன.

உணவு முறை

பொதுவாக அசைவ உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இது தவிர இம்மாதம் முழுவதும் உளுந்து மற்றும் உளுந்தால் செய்யப்பட்ட உணவு பதார்த்தங்கள் தவிர்க்கப்பட வேண்டும். ஏகாதசி நாட்களில் தானிய உணவு சேர்க்கக் கூடாது.

தாமோதர மாதம் முழுவதும் இஸ்கான் கோவில்களில் தாமோதர தீபத் திருவிழா நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் பங்கேற்கும் பக்தர்கள் தங்கள் கரங்களால் நேரடியாக பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு தீப ஆரத்தி காட்ட அனுமதிக்கப்படுகிறது. மதுரை, திருநெல்வேலி, பெரியகுளம் இஸ்கான் கோவில்களில் இன்று முதல் நவம்பர் 15-ம் தேதி வரை நடைபெறும் தாமோதர தீபத் திருவிழாவில், தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை பக்தர்கள் தங்கள் கரங்களால் பகவான் கிருஷ்ணருக்கு தீப ஆரத்தி காட்டி மன அமைதியும் மகிழ்ச்சியும் பெறலாம்.

விழாவை முன்னிட்டு கோவில் சன்னதி முழுவதும் நெய் தீபங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article