
மும்பை,
ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் 'கிங்' படத்தில் நடிகை ராணி முகர்ஜி இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே பல நட்சத்திர நடிகர்கள் நடிப்பதாக கூறப்படும் இப்படத்தில் தற்போது மற்றொரு முன்னணி நடிகை சேர உள்ளதாக கூறப்படுவது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.
'வார் மற்றும் பதான்' படங்களை இயக்கி புகழ் பெற்ற, சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாக உள்ள படம் 'கிங்'. இந்த படத்தில் ஷாருக்கான் அவரது மகள் சுஹானா கான் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்தில் தீபிகா படுகோனே சுஹானா கானின் தாயாக நடிக்கக்கூடும் என்று பல தகவல்கள் வெளிவந்தநிலையில், தற்போது நடிகை ராணி முகர்ஜி அவரது தாயாக நடிக்க உள்ளதாக முக்கிய செய்தி வெளியாகி வருகிறது.
"ராணி முகர்ஜியும் ஷாருக்கானும் ஏற்கனவே 'குச் குச் ஹோத்தா ஹை', 'கபி குஷி கபி கம்' மற்றும் 'கபி அல்விதா நா கெஹ்னா' போன்ற பல படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். தற்போது மீண்டும் இணைய இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.
சுஹானா கானின் தாயாக நடிப்பதாக கூறப்பட்ட தீபிகா படுகோன் இந்த படத்தில் வில்லியாக நடிப்பதாக தெரிகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வருகிற 20-ம் தேதி தொடங்க உள்ளன. இந்தப் படத்தை அடுத்த ஆண்டு அக்டோபர் அல்லது டிசம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.