தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களை சீரமைத்து மேம்படுத்தும் பணி: மு.க.ஸ்டாலின் ஆய்வு

3 hours ago 2

நெல்லை,

அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நெல்லை மாவட்டத்திற்கு வந்தார். முதலில் கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், 3,800 கோடி ரூபாய் முதலீட்டில் 4,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டாடா பவர் சோலார் நிறுவனம் அமைத்துள்ள 4.3 ஜி.டபிள்யூ சோலார் செல் மற்றும் Module உற்பத்தி ஆலையை திறந்து வைத்து, ரூ.2,574 கோடி முதலீட்டில், 2,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் விக்ரம் சோலார் நிறுவனம் 3 ஜி.டபிள்யூ சோலார் செல் மற்றும் 6 ஜி.டபிள்யூ Module உற்பத்தி ஆலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.

அதனைத் தொடர்ந்து, நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே திருநெல்வேலி சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ், 11 கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களை சீரமைத்து மேம்படுத்தும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இச்சீரமைப்புப் பணிகளில், துருப்பிடிக்காத கைப்பிடிகள், 3000 சதுர மீட்டருக்கு டைல்ஸ் பதிக்கும் பணிகள், சுவரோவியங்கள், 30 கல் இருக்கைகள், 28 வண்ண மின் விளக்குகள், நான்கு அழகிய நுழைவாயில்கள் போன்றவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 90 சதவிகித பணிகள் நிறைவுற்ற நிலையில், எஞ்சிய பணிகளையும் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விரைவில் கொண்டுவர வேண்டும் என்று முதல்-அமைச்சர் மாநகராட்சி ஆணையரிடம் அறிவுறுத்தினார்.

மேலும், 2024-2025ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்கள் வழியாகப் பாய்ந்திடும் வைகை, காவிரி, தாமிரபரணி மற்றும் நொய்யல் ஆகிய நதிகளை ஒட்டிய பகுதிகள் சீரமைக்கப்பட்டு, நதிநீரை தூய்மையாகப் பராமரிக்கவும், கரையோரம் பசுமையான மரங்களுடன் கூடிய பூங்காக்கள், திறந்தவெளி அரங்கம் உள்ளிட்ட முக்கிய அம்சங்களுடன் மதுரை, திருச்சி, திருநெல்வேலி, ஈரோடு மற்றும் கோயம்புத்தூரில் நதிகள் சீரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கிணங்க தாமிரபரணி நதியின் மேம்பாட்டுப் பணிக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை விரைந்து தொடங்கிட மாவட்ட ஆட்சியர் மற்றும் அலுவலர்களிடம் முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார்.

Read Entire Article