தாமரை கைவிட்டுவிட்டதாக சந்தேகிக்கும் தேனி, குக்கர் பார்ட்டிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2 months ago 10

‘‘காக்கிகளிடம் சிக்கிய கஞ்சா வியாபாரி பின்வாசல் வழியாக லாவகமாக கம்பி நீட்டிய கதை தெரியுமா..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘கடைகோடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு கஞ்சா சர்வசாதாரணமாக கிடைக்கிறது. கல்லூரி ஒன்றில் கஞ்சா போதையில் மிதந்த மாணவர்களை கல்லூரி நிர்வாகம் அடையாளம் கண்டு சோதனையிட அவர்களில் 4 பேரிடம் கஞ்சா பொட்டலம் கிடைக்க அதிர்ந்து போய்விட்டதாம்.. காவல்துறையின் இவ்வளவு கெடுபிடிகளுக்கு இடையே இது எப்படி கிடைத்ததுனு அவர்கள் விசாரிக்க, கஞ்சா புகைக்காமல் இருந்த மாணவன் ஒருவர் அனைத்து விவரங்களையும் புட்டுபுட்டு வைச்சிக்கிறாரு.. அதில் கடற்கரை கிராம காவல்நிலைய எல்லை பகுதியில் கஞ்சா தாராளமாக புழங்குவதாகவும், அங்கிருந்துதான் ஒருவரிடம் வாங்கி வந்ததாகவும் கூறி இருக்கிறாங்க.. இதனை அப்படியே கல்லூரி நிர்வாகம் காவல்துறை தலைமைக்கு தகவலாக அனுப்பி வைக்க களமிறங்கிய தனிப்படை ஒன்று கஞ்சா சப்ளை செய்த ஒருவரது வீட்டை சுற்றி வளைச்சிருக்காங்க.. அவரை பிடித்து விசாரித்தபோது அவரும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்ததை ஒப்புக்கொண்டு விட்டாராம்.. ‘சரி ஜீப்பில் ஏறு’ என்று போலீசார் கேட்டவுடன், சட்டை அணிந்து வருகிறேன்னு சென்ற கஞ்சா வியாபாரி வீட்டின் பின்வாசல் வழியாக சர்வ சாதாரணமாக தப்பிவிட்டாராம்.. காக்கிகள் 6 பேர் சென்றும் அவர்களிடம் இருந்து லாவகமாக கம்பி நீட்டியவரை பார்த்து கையை பிசைந்து நின்றனராம் அப்புறம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சேலத்துக்காரர் தங்களை கட்சியில் இணைக்காமல் இருப்பதற்கு தாமரைக் கட்சி கிரீன் சிக்னல் கொடுத்திருக்குமோ என்ற சந்தேகம் தேனி, குக்கர் பார்ட்டிகளுக்கு வர ஆரம்பிச்சிருச்சாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘சேலத்துக்காரரின் சமீபகால மூவ்மெண்ட்டுகள் எல்லாம் மீண்டும் தாமரையுடன் கூட்டு போடும் ரீதியில்தான் இருக்காம்.. தாமரையின் சர்ச்சை தலைவரை ஓரம்கட்ட மேலிடம் உறுதி கொடுத்திருக்காம்.. இதனால்தான் கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று இலைகட்சி தலைவர் சொல்லிக்கிட்டு இருக்காராம்.. அதேநேரத்தில் தாமரையோடு ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று அவரது கட்சிக்காரர்களை வைத்தே ஸ்டேட்மென்ட்டும் குடுக்கிறாராம்.. இது ஒருபுறமிருக்க, சேலத்துக்காரருடன் கூட்டணி போட்டு, தாமரை கட்சி நம்மை கழற்றிவிடுமோ என்ற சந்தேகம் தேனிக்காரர் மற்றும் குக்கர்பார்ட்டியின் ஆதரவாளர்கள் மத்தியில் உலவிக்கிட்டு இருக்காம்.. தாமரை கட்சியை பொறுத்தவரை வாக்கு வங்கியை உயர்த்திக்காட்ட எந்த எல்லைக்கும் போகும்.. சேலத்துக்காரரு நம்மை இலைகட்சியில் இணைக்க மாட்டேன் என்பதில் உறுதியா இருக்காரு.. இதுக்கும் தாமரை கட்சி கிரீன் சிக்னல் குடுத்திருக்கும் என்று கருதுறோம்.. எனவே தாமரை கைவிட்டால் அடுத்து யாரு கூட ஜாயின்ட் பண்ணலாம் என்ற யோசனை எங்க முகாமில் கிளம்பியிருப்பது உண்மைதான் என்கின்றனர் விவரம் அறிந்த அடிப்பொடிகள்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘நெற்களஞ்சியத்துக்கு வந்த இடத்தில் முக்கிய நிர்வாகிகள், மாஜி அமைச்சர்களை சேலத்துக்காரர் ரொம்பவே கடிந்து கொண்டாராமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘நெற்களஞ்சியம் மாவட்டத்திற்கு சமீபத்தில் சேலத்துக்காரர் வந்திருந்தபோது கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகள், அவரை நேரில் சந்தித்து பேசினார்களாம்.. அப்போது டெல்டாவை சேர்ந்த மாஜி அமைச்சர்கள் உடன் இருந்தாங்களாம்.. நிர்வாகிகளின் பேச்சை கேட்ட பிறகு, தேனிக்காரர் அணியில் உள்ள மாஜி அமைச்சர் வைத்தியானவரை கட்சியில் உள்ள நிர்வாகிகள் யார்யார் பார்க்க சென்றார்கள் என்பது குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் என அவர்களை கடிந்து கொண்டாராம்.. இங்கே நடப்பது எனக்கு தெரியாது என்று நினைக்க வேண்டாம்.. எனக்கு எல்லாமே தெரியும் என கூறி மாஜி அமைச்சர்களுக்கு மறைமுகமாக செக் வைத்தாராம்.. வைத்தியானவரை சந்திக்க சென்றவர்களை அனுப்பி வைத்தது யார் என்பது குறித்து எனக்கு தெரியும்னு நிர்வாகிகளை அதிர வைத்தாராம்.. உங்கள் அனைவரையும் ரகசிய டீம் கண்காணிக்கிறது என்ற குண்டையும் போட்டுவிட்டு சென்றுள்ளாராம்.. நெற்களஞ்சியம் மாவட்டத்தில் தற்போது இந்த டாப்பிக் தான் பரபரப்பாக பேசப்பட்டு வருது..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தமிழ்க்காரர் ஒருவர் சீனியரா நியமிக்கப்பட்டிருப்பதால் காக்கிகளுக்குள் கூட தமிழ், வடமாநிலம் என கோஷ்டி பூசல் வெடித்துவிட்டதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரி காவல்துறையில், தீவு பகுதிகளில் வேலை செய்த தமிழ்க்காரர் ஒருவர் சீனியர் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளாராம்.. பொறுப்பேற்றதும் வழக்கமான மாமூல் வேலை செய்யாமல் அதிரடி காட்டுகிறாராம்.. இதனால் ஏற்கனவே பொறுப்பில் இருந்த வட இந்திய தலைகளுக்கு ஜால்ரா போட்டு காலம் தள்ளிய அதிகாரிகளுக்கு செக் விழுந்துள்ளதாம்.. சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் எல்லையில் குட்கா விற்பனை, மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் ஆகியவை பட்டியலாக சீனியர் எஸ்பிக்கு போய்விட்டதாம்.. ஸ்டேஷன் விசாரணை அதிகாரிகளிடம் நீங்களாக உங்கள் எல்லைக்குள் நடக்கும் சட்டவிரோத செயல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், சிறப்பு அதிரடிப்படையை விட்டு எல்லாவற்றையும் நானே பிடித்து பிடுவேன். அப்புறம் உங்களுக்குத்தான் பிரச்னை எனக் கூறிவிட்டாராம்.. என்னடா இது, நம்மூர்காரர் வந்தால் ஏதும் பிரச்னை வராது என்று பார்த்தால், குடைச்சலாக இருக்கிறதேன்னு காக்கிகள் புலம்புகிறார்களாம்.. அதோடு எந்த ஸ்டேஷனுக்கு எவ்வளவு என லிஸ்ட் வேறு கையில் வைத்திருக்கிறாராம்.. இதனால் புதுச்சேரியில் தமிழ் காக்கிகள், வடமாநில காக்கிகள் என கோஷ்டி பூசல் வெடித்திருக்கிறதாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

The post தாமரை கைவிட்டுவிட்டதாக சந்தேகிக்கும் தேனி, குக்கர் பார்ட்டிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article