
நெல்லை,
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள மீனவ கிராமங்களில் இருந்து ஏராளமான மீனவர்கள் கடலில் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர். ஒவ்வொரு நாட்டுப்படகிற்கும் மீன்வளத்துறை அலுவலகத்தின் மூலம் பிரத்தியேகமான பதிவெண் வழங்கப்பட்டு இருக்கும். அந்த பதிவு எண்ணின் அடிப்படையில் கடல் தொழிலுக்கு செல்லும் மீனவர்கள் மதிப்பீடு செய்யப்பட்டு அவர்களுக்கு மானிய விலையில் மண்எண்ணெய் வழங்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் கூடங்குளம் அருகே கூட்டப்புளி மீனவ கிராமத்தை சேர்ந்த 8-க்கும் மேற்பட்டோர் தங்களின் படகுகளில் தமிழக வெற்றிக் கழக கொடியின் வா்ணத்தையும், கட்சியின் பெயரையும் எழுதி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த படகுகளின் உரிமையாளர்களுக்கு நடப்பு மாதத்திற்கு வழங்கப்பட வேண்டிய தலா 250 லிட்டர் மானிய மண்எண்ணெய் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள், மீன்வளத்துறை அலுவலகத்தில் முறையிட்டனர். இந்த சம்பவத்தால் கூடங்குளம் பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட கடற்கரை பகுதிகளில் உள்ள த.வெ.க. கட்சியை சேர்ந்த மீனவர்கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து ராதாபுரம் மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
அரசு விதிமுறைகளின்படி நாட்டுப்படகுகளில் நீலநிற வர்ணம் தான் பூசப்படவேண்டும். மேலும் வேறு எந்த கட்சியின் பெயர்களும் குறிப்பிட்டு இருக்கக்கூடாது போன்ற பல்வேறு விதிமுறைகள் உள்ளன. ஆனால் மேற்கண்ட படகுகளில் தவெக கொடி வா்ணமும், சில படகுகளில் அக்கட்சியினர் பெயர்களும் எழுதப்பட்டு இருந்தது. இது விதிமீறலாகும்.
ஆனால் தற்போது அந்த படகுகளின் உரிமையாளர்களுக்கான மானியங்கள் எதுவும் நிறுத்தி வைக்கப்படவில்லை. வெறும் வாய்மொழி எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி படகுகளின் வா்ணத்தை மாற்றாமல் இருக்கும் பட்சத்தில் அரசின் மானிய சலுகைகளைப் பெற முடியாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.