சென்னை: “திமுக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை தொடர்ந்து பல்வேறு குளறுபடிகளில் சிக்கித் திணறுகிறது. முதல்வரின் குடும்பத்துக்கு கொத்தடிமை வேலை பார்ப்பவர்கள் மட்டுமே அமைச்சர்களாக செயல்படுவார்கள் என்று எழுதப்படாத விதி ஒன்றை முதல்வர் உருவாக்கி செயல்படுவது சர்வாதிகாரத்தின் உச்சம்” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டு கடுமையாக சாடியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கபட வேடம் புனைவதில் பி.எச்.டி பட்டம் பெற்ற திமுகவினர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது பாய்வது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் தற்போது நடைபெறும் ஸ்டாலினின் திமுக ஆட்சியில், மக்கள் நல்வாழ்வுத் துறை, மக்களின் உயிர் காக்கும் துறையா? அல்லது மக்களின் உயிரைப் பறிக்கும் துறையா? என்ற சந்தேகம் அப்பாவி மக்களின் மனதில் எழுந்துள்ளது. அரசு மருத்துவமனைகளுக்குச் செல்லும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு கடந்த 42 மாதகால திமுக ஆட்சியில் நடைபெறும் கொடுமைகள் கணக்கிலடங்கா.