தளவானூர் குடைவரைக் கோயில் (Thalavanur cave temple)

3 weeks ago 4

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி – மண்டகப்பட்டு எனும் ஊர்களுக்கு இடையே அமைந்துள்ளது தளவானூர். விழுப்புரம் – செஞ்சி நெடுஞ்சாலையில் விழுப்புரத்திலிருந்து 28 கி.மீ. தொலைவில் கிராமப்புறச் சாலையில் 6 கி.மீ. பயணித்து தளவானூர் சிற்றூரை அடையலாம். இங்கு பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்ம பல்லவ மன்னனால் (கிபி 600 – 630) குடைவிக்கப்பட்ட குடைவரைக் கோயில் ஒன்று உள்ளது. இக்கோயில் தளவானூர் குடைவரைக் கோயில் என்றும் சத்ருமல்லேசுவரர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள கல்வெட்டில் ‘சத்ருமல்லேஸ் வரம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தளவானூருக்கு வடக்கே பஞ்ச பாண்டவர் மலையில் அமைந்துள்ள இக்கோயில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனால் கட்டப்பட்டது. தெற்கு முகமாக 32 அடி நீளத்தில் தரைமட்டத்திலிருந்து 3.5 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் முகப்பில் இரு துவாரபாலகர்கள் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இவை ஒரேமாதிரி அமைப்பில் காணப்படாமல் கோயிலின் வலதுபுறத்தில் உள்ள துவாரபாலகர் வலதுகையை இடுப்பில் வைத்தவாறும் இடதுகையை மேலே உயர்தியவாறும் உள்ளார்.

கோயிலின் இடதுபுறத்தில் உள்ள துவாரபாலகர் வலதுகையை கீழே தடி மீது தொங்கவிட்டவாறும் இடதுகையை இடுப்பில் வைத்தவாறும் உள்ளார். தூண்கள் மீது திருவாசி என்று சொல்லப்படும் ஒருவகை தோரணம் செதுக்கப்பட்டுள்ளது. அதன் இரு பக்கங்களில் உள்ள மீன்களின் வாயிலிருந்து தொடங்கி நடுவில் உள்ள ஒரு சிறு மேடையில் கலக்கிறது. அம்மேடை மீது சிறிய இசைவாணர் சிலை உள்ளது.மீன்களின் கழுத்து மீதும் இசைவாணர் இருக்கின்றனர். திருவாசியில் இரண்டு வளைவுகள் காணப்படுகின்றன. அது இரட்டைத் திருவாசி ஆகும்.

கோயிலின் உள்ளறைக் குகை வாயிலை நோக்காது இடதுபுறமாக இருக்கின்றது. குகை தெற்கு முகமாகவும், கிழக்கு நோக்கியும் அமைந்துள்ளது.உள்ளறையின் முன்பு இரு தூண்கள் உள்ளன. இடதுபுற தூணில் கல்வெட்டு உள்ளது. அது தமிழ் மற்றும் வடமொழிப் பாட்டாகும். இக்குடைவரைக் கோயிலின் மேல்புறத்தில் சமணர் படுகைகள் உள்ளன. இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் பராமரிப்பில் இக்குடைவரைக் கோயில் உள்ளது.

இக்குடைவரையில் இரண்டு கல்வெட்டுகள் உள்ளன. ஒன்று வடமொழிக் கல்வெட்டு மற்றொன்று தமிழ்க் கல்வெட்டு. இதில் “தொண்டையந்தார் வேந்தன் நரேந்திரப் போத்தரையன் வெண்பேட்டின் தென்பால் மிகமகிழ்ந்து – கண்டான் சரமிக்க வெஞ்சிலையான் சத்ருமல் லேசமென்(று) அரனுக் கிடமாக அன்று”என்ற வரிகள் தமிழ்க் கல்வெட்டில் உள்ளது. இதனைக் கட்டுமானக் கோயில் தாங்குதள அமைப்பிற்கு முன்னோடி எனலாம். தமிழ்நாட்டிலுள்ள குடைவரைகளில் மகரத்தோரணம் முகப்பு பெற்ற ஒரே கோயில் சத்ருமல்லேசுவர் குடைவரைக் கோயில் என்பது தனிச்சிறப்பாகும்.

The post தளவானூர் குடைவரைக் கோயில் (Thalavanur cave temple) appeared first on Dinakaran.

Read Entire Article