தலையில்லாத உடலுடன் மோடியை குறியீடு செய்யும் காங்கிரஸ் வெளியிட்ட ‘காயப்’ பதிவை நீக்கியது ஏன்?: பாகிஸ்தான் மாஜி அமைச்சரின் ஆதரவு பதிவால் பாஜக கொந்தளிப்பு

2 weeks ago 4

புதுடெல்லி: தலையில்லாத உடலுடன் மோடியை குறியீடு செய்யும் காங்கிரஸ் கட்சி வெளியிட்ட ‘காயப்’ என்ற பதிவானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால், அந்த பதிவை காங்கிரஸ் நீக்கியது. மேலும் பாகிஸ்தான் மாஜி அமைச்சரின் வெளியிட்ட பதிவால் பாஜக கொந்தளிப்பில் உள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதல் விவகாரத்தில் பாதுகாப்பு குறைபாடு, உளவுத்துறை தோல்வி என்று குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி தனது அதிகாரபூர்வ தளத்தில் நேற்று முன்தினம் வெளியிட்ட பதிவில், பிரதமர் மோடியை குறியீடு செய்யும் வகையில் தலையில்லாத உடலுடன் கூடிய புகைப்படத்தை வெளியிட்டது.

அதன் தலைப்பில் ‘காயப்’ என்று குறிப்பிட்டுள்ளது. அதாவது இந்தி வார்த்தையான ‘காயப்’ என்றால் தமிழில் மாயமானது, காணவில்லை, மறைந்துவிட்டது என்று பொருள் கூறப்படுகிறது. மேலும் பொறுப்பு ஏற்க வேண்டிய நேரத்தில் அவர் (மோடி) காணவில்லை என்று காங்கிரஸ் தலைவர்கள் இதற்கு விளக்கம் அளித்து வந்தனர். மேலும் பஹல்காம் விவகாரம் குறித்து ஒன்றிய அரசின் தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவில்லை. அதனையும் காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

இவ்விசயத்தில் காங்கிரஸ் – பாஜக தலைவர்களுக்கு இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. காங்கிரசின் ‘காயப்’ பதிவானது, ‘தலை துண்டிக்கப்படுதல்’ என்ற தீவிரவாத கோஷத்துடன் பாஜக ஒப்பிட்டு விமர்சனம் செய்துள்ளது. மேலும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக காங்கிரஸ் இருப்பதாக கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்த மோதல்கள் சமூக வலைதளங்களிலும், வடமாநில ஊடகங்களிலும் பெரும் விவாதத்தை தூண்டியது. அதனால் சர்ச்சைக்குரிய ‘காயப்’ பதிவை நேற்று காங்கிரஸ் நீக்கியது. முன்னதாக பாஜக செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா அளித்த பேட்டியில்,‘காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுகிறது. இந்த இடுகை ‘லஷ்கர்-இ-பாகிஸ்தான் காங்கிரஸ்’ என்று அழைக்கப்படுவது ேபால் அவர்களின் மனநிலையை வெளிப்படுத்துகிறது’ என்றார். மேலும் பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா, ‘காங்கிரஸ் கட்சி இப்போது ‘பாகிஸ்தான் பிரஸ்த் பார்ட்டி’ ஆக மாறிவிட்டது’ என்று விமர்சித்தார்.

மேலும், பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் ஃபவாத் சவுத்ரி, காங்கிரஸ் வெளியிட்ட ‘காயப்’ பதிவை மறுபதிவு செய்து, ‘மோடி காணாமல் போய்விட்டார்’ என்று குறிப்பிட்டு, ‘குறும்பு காங்கிரஸ்’ என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தியது. பாகிஸ்தான் முன்னாள் அமைச்சரின் இந்த பதிவு, பாஜகவின் குற்றச்சாட்டுகளுக்கு மேலும் எரிபொருளை ஊற்றுவது போல் இருந்தது. இவ்விவகாரம் பூதாகரமாக மாறியதால் வேறுவழியின்றி காங்கிரஸ் இந்த ‘காயப்’ பதிவை நீக்கியது. இவ்விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் கூறுகையில், ‘மேற்கண்ட ‘காயப்’ பதிவு விவகாரமானது காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை. மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிர்வாகிகளின் கருத்துகள் மட்டுமே கட்சியின் நிலைப்பாடாக கருதப்பட வேண்டும்’ என்றனர்.

இருப்பினும், கர்நாடக காங்கிரஸ் அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் அளித்த பேட்டியில், ‘காங்கிரஸ் கட்சி சொல்ல விரும்பியது என்றால், மோடி எங்கே இருக்கிறார்? அவர் ஊடகங்களை சந்திக்கிறாரா? பஹல்காமில் நடந்தவை குறித்து விளக்கம் அளிக்கிறாரா?’ என்று கூறி, அந்த பதிவை வெளியிட்டுள்ளது’ என்று அவர் கூறினார். எப்படியாகிலும் காங்கிரஸ் வெளியிட்ட சர்ச்சைக்குரிய பதிவு நீக்கப்பட்டாலும், காங்கிரஸ் குறித்து ‘பாகிஸ்தான் ஆதரவு’ குற்றச்சாட்டுகளை பாஜக தலைவர்கள் தொடர்ந்து அரசியல் விவாதங்களில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

The post தலையில்லாத உடலுடன் மோடியை குறியீடு செய்யும் காங்கிரஸ் வெளியிட்ட ‘காயப்’ பதிவை நீக்கியது ஏன்?: பாகிஸ்தான் மாஜி அமைச்சரின் ஆதரவு பதிவால் பாஜக கொந்தளிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article