தலையணையால் அமுக்கி 6 வயது சிறுமி கொலை: சித்தி கைது

4 weeks ago 6


திருவனந்தபுரம்: 6 வயது சிறுமியை தலையணையால் அமுக்கி மூச்சுத் திணற வைத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சிறுமியின் சித்தியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கோதமங்கலத்தை சேர்ந்தவர் அஜாஸ் கான் (38). இவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். முதல் மனைவிக்கு பிறந்த குழந்தை முஸ்கானா (6), அஜாஸ்கானுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் அனீஷா (26) என்ற பெண்ணை அஜாஸ் கான் 2வதாக திருமணம் செய்தார். இதில் அவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இதற்கிடையே அனீஷா மீண்டும் கர்ப்பிணி ஆனார்.

இதற்கிடையே அஜாஸ் கான் நேற்று காலை வழக்கம் போல பணிக்கு சென்றார். சிறிது நேரம் கழித்து அஜாஸ் கானுக்கு போன் செய்த அனீஷா, முஸ்கானா வீட்டில் மயங்கிய நிலையில் கிடப்பதாக கூறியுள்ளார். உடனே அவர் விரைந்து சென்று முஸ்கானாவை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அந்த சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இதுகுறித்து போலீசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதில் சிறுமி மூச்சுத் திணறி இறந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அஜாஸ் கானிடமும், அனீஷாவிடமும் விசாரணை நடத்தினர். இதில் முஸ்கானா தூங்கும்போது அனீஷா தலையணையால் அமுக்கி மூச்சுத் திணற வைத்து கொலை செய்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து சித்தி அனீஷாவை போலீசார் கைது செய்தனர். இந்தக் கொலையில் அஜாஸ் கானுக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும், கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தலையணையால் அமுக்கி 6 வயது சிறுமி கொலை: சித்தி கைது appeared first on Dinakaran.

Read Entire Article