தலைமுடி சுருட்டையாக இருந்தால் அதிர்ஷ்டம் என்கிறார்களே, இது சரியா?

2 months ago 8

?தலைமுடி சுருட்டையாக இருந்தால் அதிர்ஷ்டம் என்கிறார்களே, இது சரியா?
– ஜெ.மணிகண்டன், வேலூர்.

பொதுவாக சுருட்டைமுடி உள்ளவர்களின் ஜாதகங்களில் சனி என்கிற கிரஹத்தின் பலம் கூடுதலாக இருக்கும். சனி கிரஹம் பலமாக இருந்தால், நல்ல உழைப்பாளிகள் ஆகவும் பொறுமைசாலிகள் ஆகவும் எதையும் தாங்கும் இதயத்தைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். சனி பலம் பெறும்போது ஆயுள் பலம் என்பதும் உண்டு. தலைமுடி சுருட்டையாக இருப்பதற்கும் நீங்கள் குறிப்பிடும் அதிர்ஷ்டத்திற்கும் சம்பந்தம் இல்லை.

?கோயில் இருக்கும் ஊர்களில் சுவாமி செல்லும் ரத வீதிகளில் யாராவது இறந்துவிட்டால் அவர்கள் உடல் அடக்கம் செய்தவுடன் கோயில் நடைகளைத் திறக்கும் முன்பு ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா?
– சு.ஆறுமுகம், கழுகுமலை.

அவசியம் இல்லை. ஆலய வளாகத்திலேயே யாராவது இறந்துவிட்டால்தான் பரிகார பூஜைகளைச் செய்து, நடை திறக்க வேண்டும். பொதுவாக, ரத வீதிகளில் நடக்கும் இது போன்ற நிகழ்வுகளால் நடையை சாற்ற வேண்டும் என்ற அவசியமும் இல்லை. ஒரு சில பகுதிகளில் இருக்கும் ஆலயங்களுக்கு அவை அமைக்கப்பட்டிருக்கும் ஆகம விதிமுறைப்படி இந்த விதியானது மாறுபடும். உற்சவ காலங்களில் ரத வீதியில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறும் பட்சத்தில், நிச்சயமாக பரிகார பூஜைகளைச் செய்த பின்பே சுவாமி வீதி உலா என்பது நடைபெறும்.

?ஜோதிடர் கணிக்கும் ஜாதகத்திற்கும், கம்ப்யூட்டர் கணிக்கும் ஜாதகத்திற்கும் வித்தியாசம் இருக்குமா?
– அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

இருக்காது. கம்ப்யூட்டர் என்பது ஒரு கருவி. நாம் ஏற்கெனவே அதில் என்ன தகவல்களை பதிவு செய்திருக்கிறோமோ அதைத்தான் அப்படியே தரப்போகிறது. சில வருடங்களுக்கு முன்பு மளிகை கடைகளில் பொருட்களின் விலையை வரிசையாக எழுதி கையால் கூட்டி மொத்தம் இவ்வளவு தொகை என்று சொல்வார்கள். சிறிது காலம் கழித்து அதையே கால்குலேட்டர் என்ற கருவியின் துணையுடன் கூட்டி தொகையைச் சொன்னார்கள். தற்போது பெரும்பாலும் பில்லிங் மெஷின் என்பது வந்துவிட்டது. சிந்தனைச் சிதறலால் மனிதன்கூட சமயத்தில் கணக்கிடுவதில் தவறு செய்து விடலாம், கருவி என்பது தவறு செய்யாது என்பதற்காகத்தான் இதுபோன்ற கருவிகளைப் பயன்படுத்து கிறார்கள்.

அதேபோலத்தான் கம்ப்யூட்டர் மூலம் ஜாதகம் கணிப்பது என்பது துல்லியமான கணக்காக இருக்கும் என்பதற்காகத்தானே அன்றி, ஜோதிடர் பஞ்சாங்கத்தை வைத்து தனியாக கணக்கிட்டு கையால் எழுதுவதற்கும் கம்ப்யூட்டர் அடிப்படையில் ஜாதகத்தை கணிப்பதற்கும் எந்தவிதமான வித்தியாசமும் இருக்காது. காலநேரம் என்பது மிச்சமாகிறது என்பதோடு, கணக்கீடு என்பதும் துல்லியமாக இருக்கிறது. அதே நேரத்தில் பலன் அறிவது என்பது ஜோதிடர் தனது அனுபவத்தைக் கொண்டுதான் சொல்ல வேண்டும். கம்ப்யூட்டர் பலன் சொல்லாது, சொல்லவும் இயலாது. மளிகைக் கடையில் இருக்கும் கால்குலேட்டர் போல, ஒரு கணக்கு போடும் கருவிதானே தவிர, பொருளின் தரத்தை ஆராயும் கருவி அல்ல. அதே போல, கம்ப்யூட்டரைக் கொண்டு ஜாதகத்தை கணிக்கலாமே தவிர, பலனை அறிந்துகொள்வதற்கு ஜோதிடரைத்தான் அணுக வேண்டும்.

?அமாவாசை அன்று எந்த காரியத்தைச் செய்யக்கூடாது?
– கே.எம்.ஸ்வீட் முருகன், கிருஷ்ணகிரி.

அமாவாசை என்பது முன்னோர் வழிபாட்டிற்கு உரிய நாள்தானே தவிர, மற்றபடி எந்த விதமான சுபநிகழ்ச்சிகளையும் செய்ய இயலாது. மகாபாரதத்தில் குருக்ஷேத்ர போரைத் துவக்குவதற்கு முன், களபலியை கொடுப்பதற்காகத்தான் சகாதேவன் அமாவாசை நாளைத் தேர்ந்தெடுத்துத் தந்தாரே தவிர, மற்றபடி சுபநிகழ்வுகளைச் செய்வதற்கு அல்ல. அமாவாசை திதியின் முதல் பாதியில் சதுஷ்பாதம் என்கிற கரணமும் இரண்டாம் பாதியில் நாகவம் என்கிற கரணமும் இடம்பிடிக்கும். அதே போல அமாவாசை திதி துவங்குவதற்கு முன் வரக்கூடிய ஒரு 12 மணி நேரத்தில் சகுனி என்கிற கரணமும் அமாவாசை திதி முடிந்தவுடன் அடுத்து வரக்கூடிய 12 மணி நேரத்தில் கிம்ஸ்துக்னம் என்கிற கரணமும் இடம்பிடிக்கும். இந்த நான்கு கரணங்கள் இருக்கும் 48 மணி நேரத்தில் எந்தவிதமான சுப நிகழ்வுகளையும் செய்யக்கூடாது. இதைத்தான் கரணம் தப்பினால் மரணம் என்ற பெயரில் முன்னோர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். ஆக அமாவாசை திதியில் முன்னோர் வழிபாடு, அம்பிகை வழிபாடு ஆகியவற்றைத் தவிர தனிப்பட்ட முறையில் நமக்கான சுபநிகழ்வுகள் எதையும் செய்யக் கூடாது.

?என்னென்ன பாவங்களுக்கு என்னென்ன தண்டனை என்று ஒரு வரையறை இருந்தால் நல்லதுதானே, அவ்வாறு இல்லாதது இறையச்சம் குறையக் காரணமாகிவிட்டது அல்லவா?
– ஆர்.வள்ளிபாலன், நெல்லை.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதை நம் முன்னோர்கள் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்களே. என்னென்ன பாவங்களுக்கு என்னென்ன தண்டனை என்பதையும் கருடபுராணத்தில் விரிவாகவும் விளக்கமாகவும் காணலாம். கலிபாபம் கைமேல் என்றும் சொல்வார்கள். இந்த கலியுகத்தைப் பொறுத்தவரை தவறு செய்பவர்களுக்கு தண்டனை என்பதும் கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது. இருந்தாலும் சுயநலம் மற்றும் பேராசையின் காரணமாக மனிதன் தவறு செய்து கொண்டிருக்கிறானே தவிர, இதைக் கொண்டு இறையச்சம் குறைந்துவிட்டது என்று சொல்ல இயலாது.

?மனிதனின் ஆயுளுக்கும் கைரேகைகளுக்கும் தொடர்பு உண்டா?
– த.சத்தியநாராயணன், அயன்புரம்.

உண்டு. கைரேகை சாஸ்திரம் அறிந்தவர்கள் முதலில் பார்த்துச் சொல்வதே அந்த ஆயுள் ரேகையைத் தானே.. நம்முடைய கையில் இருக்கும் ரேகைகளில் பிரதானமாக பளிச் சென்று கண்ணிற்குத் தெரியும் ரேகையே ஆயுள் ரேகைதான். மனிதனின் ஆயுளுக்கும் கைரேகைக்கும் நிச்சயமாகத் தொடர்பு என்பது உண்டு.

?சஷ்டி அப்த பூர்த்தி எல்லோரும் செய்துகொள்ள வேண்டுமா?
– வண்ணை கணேசன், சென்னை.

அறுபது வயது பூர்த்தி ஆகும்போது செய்ய வேண்டியதே இந்த சஷ்டி அப்த பூர்த்தி என்பது. காலத்தின் அளவை அறுபது அறுபதாக பிரித்திருப்பார்கள். 60 நொடி ஒரு நிமிடம், 60 நிமிடம் என்பது ஒரு மணி நேரம், 60 நாழிகை என்பது ஒருநாள் என்பது போல 60 வருடங்கள் என்பது மனிதனின் ஆயுளில் ஒரு சுற்று ஆகும். 60 வயது முடிந்து 61வது வயது தொடங்கும் நேரம் என்பது மனிதன் தனது வாழ்வில் ஒரு சுற்றினை முடித்து அடுத்த சுற்றிற்கு தயாராகும் காலம் ஆகும். அந்த நேரத்தில் சாந்தி என்பதை செய்துகொள்ள வேண்டும் என்று நம்முடைய சாஸ்திரம் அறிவுறுத்துகிறது. இதைத்தான் நாம் அறுபதாம் கல்யாணம் என்ற பெயரில் அழைக்கிறோம். இதனை எல்லோரும் நிச்சயமாக செய்துகொள்ள வேண்டும்.

The post தலைமுடி சுருட்டையாக இருந்தால் அதிர்ஷ்டம் என்கிறார்களே, இது சரியா? appeared first on Dinakaran.

Read Entire Article