புதுடெல்லி: தலைமறைவு குற்றவாளியாக ஆயுத வியாபாரி அறிவிக்கப்பட்ட நிலையில், அவரது நண்பரான பிரியங்கா காந்தியின் கணவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில், ராணுவ பாதுகாப்புத் தளவாட ஒப்பந்தங்கள் மூலம் பெற்ற கோடிக்கணக்கான கமிஷன் பணத்தைக் கொண்டு, லண்டனில் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், எம்பியுயான பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவுக்கு சொகுசு பங்களாவை வாங்கிக் கொடுத்ததாக ஆயுத வியாபாரியுமான சஞ்சய் பண்டாரி மீது அமலாக்கத்துறை வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது.
இதுதொடர்பாக பணமோசடி மற்றும் வரி ஏய்ப்பு வழக்குகள் பதியப்பட்ட நிலையில், சஞ்சய் பண்டாரி கடந்த 2016ம் ஆண்டில் இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு தப்பி ஓடினார். அவரை இந்தியாவிற்குக் கொண்டுவர எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், இந்த வழக்கு நீண்டகாலமாக நிலுவையில் இருந்தது. இந்தச் சூழலில், அமலாக்கத்துறை தரப்பில் டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சஞ்சய் பண்டாரியை தலைமறைவு பொருளாதாரக் குற்றவாளியாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விசாரணையைத் தவிர்ப்பதற்காகவே அவர் நாட்டை விட்டு ஓடியதாக அமலாக்கத்துறை முன்வைத்த வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இந்த அறிவிப்பின் மூலம், சஞ்சய் பண்டாரிக்குச் சொந்தமான சொத்துக்களைப் பறிமுதல் செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் கிடைத்துள்ளது. மேலும், லண்டன் பங்களா தொடர்பான வழக்கில் ஏற்கனவே விசாரணை வளையத்தில் உள்ள ராபர்ட் வதேராவுக்கு, இந்த அறிவிப்பு மேலும் நெருக்கடியை அதிகரித்துள்ளது.
The post தலைமறைவு குற்றவாளியாக ஆயுத வியாபாரி அறிவிப்பு: பிரியங்கா காந்தியின் கணவருக்கு நெருக்கடி appeared first on Dinakaran.