புதுடெல்லி: வக்பு திருத்த சட்ட மசோதா குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ் அமர்வில் இரண்டாவது நாளாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசு தரப்பில் ஆஜராகிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,‘‘வக்பு சொத்து என்பது பதிவு செய்யப்பட்டு இருந்தால். அது பாதுகாப்பானதாக இருக்கும் என்றார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ‘‘மாவட்ட ஆட்சியர் அல்லது அவருக்கு மேலான அதிகாரி விசாரணை நடத்தினால், அவர்கள் அரசின் அறிவுரைப்படி தானே நடவடிக்கை எடுப்பார்.
அது அரசுக்கு சாதகமாக தான் அமையும்.அதேப்போன்று மாவட்ட ஆட்சியர் என்பவரே, ஒரு மாஜிஸ்ட்ரேட் ஆவார். எனவே இந்த விவகாரத்தில் அவரே இறுதி முடிவை எடுக்க முடியும். அவ்வாறு இருக்கும் நிலையில், நாடாளுமன்ற கூட்டுக்குழு கூறும்போது மாவட்ட ஆட்சியருக்கு மேலான ஒரு அதிகாரி என்று தெரிவித்துள்ளதே. அதற்கான அர்த்தம் என்ன? என்று கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த துஷார் மேத்தா, ‘‘நீதிமன்றம் விரும்பினால் மாவட்ட ஆட்சியருக்கு மேலான அதிகாரி என்பதை நீக்கம் செய்யலாம். அதற்கு எங்களது தரப்பில் இருந்து எந்தவித ஆட்சேபனையும் இல்லை’’ என்று தெரிவித்தார்.
இதையடுத்து வாதங்களை தொடர்ந்த துஷார் மேத்தா,‘‘வக்பு நிலம் தொடர்பான விவகாரத்தில் வருவாய் ஆவணங்கள் மூலம் சரிபார்த்து மட்டுமே அரசு நிலம் என தெரியவந்தால் அது எடுத்துக்கொள்ளப்படும். இதனால் பாதிக்கப்பட்ட தரப்பு வக்பு தீர்ப்பாயத்தை அணுகலாம். உரிமை தொடர்பான இறுதி முடிவை தீர்ப்பாயம் அல்லது உயர் நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்வதன் மூலம் அவர்கள் பெற்றுக்கொள்ளலாம். மேலும், வரும் காலங்களில் முறையான பதிவு மூலம் மட்டுமே வக்பு உருவாக்க முடியும். மேலும் இந்த வக்பு திருத்த சட்டம் தொடர்பான விவகாரத்தில் சட்டப்பூர்வ விதிகள் உள்ளது.
குறிப்பாக தீர்மானிக்கப்படாத சொத்தாக இல்லை என்றால், உரிமையியல் வழக்கு தொடர அதிகாரம் உள்ளது. வக்பு இஸ்லாமின் அத்தியாவசியப் பகுதி அல்ல. பல நாடுகளில் வக்பு என்ற கருத்தாக்கம் இல்லை. மாறாக அறக்கட்டளைகள் உள்ளன. மேலும் வக்பு என்பது ஒரு அத்தியாவசிய மத நடைமுறை கிடையாது.வக்பு வாரியம் அவ்வாறு மத ரீதியிலான சடங்குகளை கையாளுவதில்லை. வக்பு வாரியம் என்பது மதச்சார்பற்ற செயல்பாட்டு மேற்பார்வையை மட்டுமே மேற்கொள்கின்றது, அரசியலமைப்பும் அதனை அனுமதிக்கிறது.
வக்பு சொத்து விவகாரத்தில், இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் பாதிக்கப்படலாம் அல்லது பயனடையலாம், எனவே தான் வக்பு வாரியத்தில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களும் சேர்க்கப்பட்டதற்கான காரணம் ஆகும். முத்தவல்லிகளை நியமனம் செய்வது வக்பு வாரியமே ஆகும்.மூத்தவல்லிகள் இஸ்லாமியர்களாகவும் இருக்கலாம் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களாகவும் இருக்கலாம்.வக்பு சட்டம் பிரிவு 3(இ) என்பது பழங்குடி நிலத்தைப் பாதுகாப்பதற்கானது’’ என்று தெரிவித்தார். இதையடுத்து வழக்கின் விசாரணை மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கிறது.
The post தற்கொலைப்படை தாக்குதல் வக்பு சொத்து பற்றி மாவட்ட கலெக்டர் அரசுக்கு சாதகமாக தானே முடிவு எடுப்பார்: ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி appeared first on Dinakaran.