
பெங்களூரு,
பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டியில் வசித்து வந்தவர் வினய் சோமய்யா (வயது 35). குடகு மாவட்டத்தை சேர்ந்த இவர், பா.ஜனதா கட்சியின் பிரமுகர் ஆவார். ஹெண்ணூர் அருகே நாகவாராவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வினய் மேலாளராக பணியாற்றினார். பெரும்பாலும் வீட்டில் இருந்தே அவர் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் வினய் நாகவாராவில் உள்ள அலுவலகத்திற்கு வேலைக்கு வந்திருந்தார். பின்னர் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் அலுவலகத்திலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்ததும் ஹெண்ணூர் போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று வினய் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
பா.ஜனதா பிரமுகரான வினய் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் முதல்-மந்திரியின் சட்ட ஆலோசகரும், குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான பொன்னண்ணா குறித்து வாட்ஸ்-அப் குழுவில் தவறான தகவல்களை வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மடிகேரி போலீஸ் நிலையத்தில் வினய் மீது எம்.எல்.ஏ.வின் ஆதரவாளரான தன்னீரா மகீனா புகார் அளித்திருந்தார்.
அதன்பேரில், வினயை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு போலீசார் கைது செய்திருந்தனர். பின்னர் தன் மீதான வழக்கில் ஐகோர்ட்டில் வினய் தடையும் வாங்கி இருந்தார். இந்த வழக்கு விவகாரத்தில் வினய் தற்கொலை முடிவை எடுத்தது தெரியவந்தது. அதே நேரத்தில் தற்கொலைக்கு முன்பாக தான் எழுதிய கடிதத்தை சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டு இருந்தார். அதில், எம்.எல்.ஏ. மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொல்லை கொடுப்பதாக வினய் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியிருந்தார்.
இ்ந்த சம்பவம் தொடர்பாக வினயின் அண்ணன், எம்.எல்.ஏ. பொன்னண்ணா, அவரது ஆதரவாளரான தன்னீரா மகீனா, மடிகேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. மந்தர்கவுடா ஆகியோர் மீது ஹெண்ணூர் போலீசில் புகார் அளித்தார். அதில் வினய் தற்கொலைக்கு 2 எம்.எல்.ஏ.க்களும், தன்னீரா மகீனாவும் தான் காரணம் என குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் தன்னிரா மகீனா மீது மட்டும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பெங்களூரு, குடகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் வினய் தற்கொலைக்கு காரணமான காங்கிரஸ் எம்.எல்.ஏ., அவரது ஆதரவாளர்களை கைது செய்ய வேண்டும் என்று பா.ஜனதா தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.