
சென்னை,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற 17வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேஎல் ராகுல் அதிகபட்சமாக 77 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து, 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 25 வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியடைந்தது.
இந்நிலையில், போட்டிக்குப்பின் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்தது குறித்து சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கூறியதாவது,
கடந்த சில ஆட்டங்கள் எங்களுக்கு சாதகமாக முடியவில்லை. நாங்கள் எங்கள் ஆட்டத்தை மேம்படுத்த எங்களால் முடிந்தவற்றை மேற்கொள்கிறோம். ஆனால், முடிவு எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. ஆட்டத்தின் பவர்பிளே ஓவர்கள் எங்களுக்கு மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. பவுலிங் பவர்பிளேயில் கூடுதலாக 15 முதல் 20 ரன்களை விட்டுவிடுகிறோம். பேட்டிங் பவர்பிளேயில் அதிக விக்கெட்டுகளை இழந்துவிடுகிறோம்.
அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றிபெற அனைவரும் ஒன்றுசேர்ந்து செயல்பட வேண்டும். டெல்லி பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஷிவம் துபே பேட்டிங் செய்யும்போது அதிக ரன்கள் அடிக்க ஒரு ஓவர் எதிர்பார்த்தோம். ஆனால், அது நடக்கவில்லை' என்றார்.