தர்மேந்திர பிரதானை முற்றுகையிட்ட திமுக எம்.பி.க்கள்: மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு

4 hours ago 2

டெல்லி: திமுக எம்.பி.க்களின் தொடர் முழக்கத்தால் மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கியது. தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுக்கப்பட்டது தொடர்பாக திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பினார். புதிய கல்விக் கொள்கையை பின்பற்றாததால் ஒன்றிய அரசு பழிவாங்குகிறது. தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிதியை தராமல் வஞ்சிக்கிறது ஒன்றிய அரசு. ஒன்றிய அரசின் கொள்கையை ஏற்கவில்லை என்பதற்காக நிதி விடுவிக்காததை ஏற்க முடியாது. பழிவாங்கும் நடவடிக்கை.

சட்டத்துக்கு புறம்பாக தமிழ்நாட்டை வஞ்சிப்பதா? புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் கல்வி நிதியை மறுப்பதா? தமிழ்நாட்டுக்கான கல்விநிதி ரூ.2000 கோடியை ஒன்றிய அரசு உடனே வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்து பேசிய ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான்; புதிய கல்விக் கொள்கை மூலம் ஹிந்தி திணிக்கப்படுகிறது என்பது தவறானது. பாஜக ஆளாத மாநிலங்கள் கூட புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளன. பிஎம்ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்த ஒப்புக்கொண்ட தமிழ்நாடு பின்னர் பின்வாங்கிவிட்டதாக ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம் சாட்டினார்.

ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு திமுக, கூட்டணி கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சை கண்டித்து மக்களவையில் திமுக எம்.பி.க்கள் தொடர் முழக்கம் எழுப்பினர். நாடாளுமன்றத்தில் தர்மேந்திர பிரதானை முற்றுகையிட்டு திமுக எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. திமுகவுக்கு ஆதரவாக அவைத் தலைவர் இருக்கை முன்பு கூடி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பினர். திமுக எம்.பி.க்களின் தொடர் முழக்கத்தால் மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

The post தர்மேந்திர பிரதானை முற்றுகையிட்ட திமுக எம்.பி.க்கள்: மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article