தர்மபுரியில் கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பால் நீச்சல் குளத்தில் அலைமோதும் கூட்டம்

4 hours ago 2

தர்மபுரி: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 1988ம் ஆண்டு ராஜாஜி நீச்சல் குளம் தர்மபுரி செந்தில் நகரில் ஒரு ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ளது. நீச்சல் குளம் 25 மீட்டர் நீளம், 16 மீட்டர் அகலம், 6 அடி ஆழம் உள்ளது. ஒரு பயிற்சியாளர், 4 உயிர்காப்பாளர், பம்பு ஆபரேட்டர் மற்றும் எலக்ட்ரிஷியன், ஒரு துப்புரவு பணியாளர், ஒரு இரவு காவலாளி பணியாற்றி வருகின்றனர். தினமும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர், இந்த நீச்சல் குளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். பொதுவாக கோடை விடுமுறை காலங்களில் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது. பெண்கள், ஆண்கள் என தனித்தனியாக நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், பள்ளிகளுக்கிடையே நீச்சல் போட்டி அடிக்கடி நடத்தப்படுகிறது. சாதாரண மாதங்களைவிட கோடை காலங்களான ஏப்ரல், மே மாதத்தில் ஆர்வத்துடன் வந்து மாணவர்கள் நீச்சல் கற்றுக்கொள்கின்றனர்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 4ம் கட்ட நீச்சல் பயிற்சி, வரும் 13ம்தேதி முதல் 25ம்தேதி வரை நடக்கிறது. காலை 7 மணி முதல் 8 மணி வரை, காலை 8 மணி முதல் 9 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை மாணவர்கள் மற்றும் ஆண்களுக்கும், காலை 9 மணி முதல் 10 மணி வரை மாணவிகள் மற்றும் பெண்களுக்கும் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். நீச்சல் பயிற்சி கட்டணமாக ரூ.1770 இணைய வழி வாயிலாகவோ, பிஒஎஸ் இயந்திரம் வாயிலாகவோ செலுத்த வேண்டும். இதற்கான விண்ணப்பத்தினை நீச்சல் குள அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் ஏற்கனவே 3ம் கட்ட பயிற்சி பெற்ற நபர்களுக்கு சான்று வழங்கப்பட்டது. தற்போது வெயிலின் கொடுமை வாட்டி வதைத்து வருகிறது. நேற்று 100.7 டிகிரி பாரன்ஹீட், வெப்பம் பதிவாகியுள்ளது. அனல் காற்றை சமாளிக்க மக்கள் நீச்சல் குளத்தில் சென்று குளித்தும், நீச்சல் பயிற்சியும் எடுத்து வருகின்றனர்.

The post தர்மபுரியில் கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பால் நீச்சல் குளத்தில் அலைமோதும் கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article