தர்மபுரி ரயில் நிலையத்தில் ₹23 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சிப்பணிகள்

3 months ago 25

தர்மபுரி, செப்.30: தர்மபுரி ரயில் நிலையத்தில் ₹23கோடி மதிப்பீட்டில், பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடக்கிறது. தர்மபுரி நகரின் ஒட்டிய மையப்பகுதியில், தர்மபுரி ரயில்நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் 1906ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது. மீட்டர் கேஜியில் ஒருவழிபாதையில் ரயில்பாதை அமைக்கப்பட்டது. இந்த தர்மபுரி ரயில்நிலையம் வழியாக சேலம் – பெங்களூர், பெங்களூர்- சேலம் மார்க்கமாக ரயில்கள் இயங்கப்பட்டு வருகின்றன. தினசரி பயணிகள் மற்றும் சரக்கு ரயில் 25க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினசரி 2ஆயிரம் பயணிகள் ஏறி, இறங்குகின்றனர். 1974ம் ஆண்டு தர்மபுரி ரயில்நிலையம் வழியாக சரக்கு ரயில் இயக்கப்பட்டது. தர்மபுரி ரயில்நிலையத்தில் அப்போது சரக்குகளை கையாளுவதற்கு தனியாக ரயில்பாதை அமைக்கப்பட்டது. தற்போது இரண்டு ரயில் பாதைகள் ரயில்நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு ரயில் பாதையில் சரக்கு ரயில்களை நிறுத்தி லாரிகளில் பொருட்கள் ஏற்றிச்செல்லப்படுகிறது.

48 ஆண்டிற்கு முன்பு மீட்டர் கேஜி ரயில்பாதையில் சரக்குகள் கொண்டுவருவதற்கு மலைப்பாதையின் வழியாக சிரமாக இருந்தது. நீராவி இன்ஜின் மூலம் ஒருபெட்டியில் (1 வேகன்) தர்மபுரி ரயில்நிலையத்திற்கு சரக்கு கொண்டுவரப்பட்டது. மாரண்டஅள்ளியைச் சேர்ந்த ஒரு வியாபாரி வடமாநிலத்தில் இருந்து பருப்பு, துடப்பம், ஆரியம் ஆகியவை தருவித்து இறக்கி, மாவட்டம் முழுவதும் சப்ளை செய்தனர். இரண்டு நாளைக்கு ஒரு ரயில் பெட்டியில் சரக்கு வரும். பின்னர் 12 பெட்டியாகவும், பின்னர் 15 பெட்டி, 16 பெட்டியாக உயர்த்தப்பட்டது. 1996ம் ஆண்டு அகல ரயில் பாதையாக தர்மபுரி வழி ரயில்பாதை மாற்றப்பட்டது. அதன்பின் டீசல் இன்ஜின் பொருத்திய சரக்கு ரயில் 42பெட்டிகளுடன் வரத்தொடங்கின.

அது இப்போது வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால், தர்மபுரியில் இருந்து சேலம், பெங்களூர் மார்க்கமாக மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. மேலும் சேலம் முதல் ஓசூர் வரை இரட்டை ரயில்வே பாதை அமைக்கவும் ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. இந்நிலையில், தர்மபுரி ரயில் நிலையத்தில் பயணிகளின் தேவைக்காக பல்வேறு வசதிகளை மேம்படுத்த ₹23கோடி நிதியை, ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி தர்மபுரி ரயில் நிலையம் மேம்படுத்தும் பணிகள், தற்போது நடந்து வருகின்றன. ஆனால் பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: தர்மபுரி ரயில் நிலையத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்வதற்கான பணிகள் தற்போது நடந்து வருகிறது. தர்மபுரி ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதி நவீன முறையில் மாற்றி அமைக்கப்படுகிறது. ரயில்கள் வந்து செல்லும் தகவல்களை பயணிகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள, டிஜிட்டல் போர்டு வசதி ஏற்படுத்தப்படுகிறது. இதேபோல், 50 கார்கள் மற்றும் 400 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில், கான்கிரீட் தளத்துடன் கூடிய பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படுகிறது. முதல் வகுப்பு பயணிகள் காத்திருப்பு கூடம், மகளிர் மற்றும் பொதுப்பயணிகள் காத்திருப்பு கூடம் உள்பட 3 காத்திருப்பு கூடங்கள் பயணிகளுக்கு தேவையான நவீன வசதிகளுடன் அமைக்கப்படுகிறது.

ரயில் நிலையத்தின் உள்பகுதியில் உள்ள பிளாட்பாரங்களில் சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர் இயந்திரங்கள், நவீனக் கழிப்பிட வசதிகள், தானியங்கி நகரும் படிக்கட்டுகள், டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன. இத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள் காரணமாக, தர்மபுரி ரயில் நிலையம் புதுப் பொலிவு பெறும். பயணிகளுக்கு பல்வேறு மேம்படுத்தப்பட்ட வசதிகள் கிடைக்கும். தர்மபுரி ரயில் நிலையத்தில் இருந்து கர்நாடகா, கேரளா மற்றும் வட மாநிலங்கள், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வருகின்றனர். இந்த ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை, பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தர்மபுரி ரயில் நிலையத்தில், பயணிகளுக்கு தேவையான பல்வேறு வசதிகளை மேம்படுத்த ₹23கோடி நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இவ்வாறு கூறினர்.

The post தர்மபுரி ரயில் நிலையத்தில் ₹23 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சிப்பணிகள் appeared first on Dinakaran.

Read Entire Article