
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், திண்டல் பகுதியிலுள்ள பிச்சானூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் மகன் மாரியப்பன் (வயது 35). இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் மனைவி மல்லிகா என்பவருக்குச் சொந்தமான வீட்டில் கடந்த 21.5.2020 அன்று இறந்து கிடந்தார். இது தொடர்பாக சந்தேக மரணம் என காரிமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில் இறந்து போன மாரியப்பன் மனைவி நதியா (21) மற்றும் அவரது கள்ளக் காதலனான திண்டல் காலனியைச் சேர்ந்த சந்திரன் மகன் முரளி (25) ஆகிய இருவரும் சேர்ந்து தலையணையில் முகத்தை அழுத்தியும், கையால் கழுத்தை நெரித்தும் மாரியப்பனை கொலை செய்தது தெரியவந்தது. இவ்வழக்கு தொடர்பான விசாரணை தர்மபுரி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்துவந்த நிலையில், இவ்வழக்கை விசாரித்த தர்மபுரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி மோனிஷா நேற்று (22.4.2025) தீர்ப்பு வழங்கினார். அதில் அவர், குற்றவாளிகள் இருவருக்கும் ஆயுள் சிறை தண்டனையும், தலா ரூ.7 ஆயிரம் மற்றும் ரூ.5 ஆயிரம் முறையே அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
இவ்வழக்கு தொடர்பாக சிறப்பாக நீதிமன்ற விசாரணையை கையாண்டதற்காக வழக்கின் தற்போதைய புலன் விசாரணை அதிகாரியான காரிமங்கலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பார்த்திபனை தர்மபுரி மாவட்ட எஸ்.பி. மகேஸ்வரன் பாராட்டியதோடு, இவ்வழக்கை நடத்த உதவியாக இருந்த காவல் துறையினரையும் நேரில் அழைத்து பாராட்டினார்.