சேலம், அக். 21: நாடு முழுவதும் தீபாவளி கொண்டாட்டங்களுக்கு மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். புத்தாடை மற்றும் பட்டாசுக்கு அடுத்தபடியாக, தீபாவளி கொண்டாட்டங்களில் மகிழ்ச்சி சேர்ப்பது பலகாரங்கள். பொதுமக்கள் இனிப்பு, காரம் என்று பலகாரங்களை வாங்கி ருசிப்பதும், அதை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுத்து மகிழ்வதும் வாடிக்கை. இதை கருத்தில் கொண்டு பிரபல ஸ்வீட் கடைகள், பிரத்யேக கடைகள், பலகாரச்சீட்டு நடத்துவோரின் வீடுகள் என்று அனைத்து இடங்களிலும் இனிப்பு, காரங்கள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடக்கும். இதே போல், திடீர் பலகார கடைகளும் முளைத்து விற்பனையில் கல்லா கட்டுவது வழக்கம்.நடப்பாண்டு தீபாவளி கொண்டாட்டத்திற்கு, இன்னும் 10நாட்களே உள்ள நிலையில்,பலகார தயாரிப்புகள் மும்முரமாக நடந்து வருகிறது.
சேலம் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளில், விற்பனையும் களை கட்டத் தொடங்கியுள்ளது. இந்த கடைகளில் உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், திடீர் ஆய்வு மேற்கொண்டு அறிவுரைகளை வழங்கி வருகின்றனர். குறிப்பாக செயற்கை நிறமூட்டிகளை தவிர்க்க வேண்டும். காலாவதி தேதியை குறிப்பிட வேண்டும். ஒன்றிய, மாநில அரசுகள் வெளியிட்டுள்ள உணவு பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும். தண்ணீர் பரிசோதனை, தரமான எண்ணெய் உபயோகம், சுகாதாரமான தயாரிப்பு என்று அனைத்தையும் கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இந்தவகையில் சேலம் சரகத்தில் அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது: சேலத்தில் தீபாவளியையொட்டி பலகார விற்பனை மற்றும் தயாரிப்பு கடைகளில் திடீர் ஆய்வு நடத்தப்படுகிறது. உணவு கையாளுதல் மற்றும் பரிமாறுதல் பணிகளை செய்யவர்கள் கையுறை, தலைக்கவசம் அணிய வேண்டும். பலகாரங்கள் தயாரிக்குமிடம். விற்கும் இடங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். தயாரிக்கப்பட்ட பலகாரங்களை கையால் தொடுவதை தவிர்க்க வேண்டும்.
சுத்தமான சுகாதாரமான தண்ணீரை பயன்படுத்த வேண்டும். இனிப்புகளில் ரசாயன கலவை 200 பிபிஎம் அளவில் மட்டுமே சேர்க்க வேண்டும் என்பது போன்ற விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பலகாரங்களில் செயற்கை வர்ணம் சேர்க்கக்கூடாது. இது. சட்டப்படி குற்றமாகும். அதிகப்படியாக சேர்த்தால் உடல் நலத்துக்கு கேடு ஏற்படும்.நெய் மற்றும் இடுபொருள் வாங்கியதற்கான பில் விவரங்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. பலகாரங்களில் அதிகளவு ரசாயன கலவையை சேர்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்று ஆய்வின் போது எச்சரிக்கையும் விடப்படுகிறது.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
The post தயாரிப்பு பணிகள் மும்முரம்; தீபாவளி பலகாரங்கள் தரமாக உள்ளதா? appeared first on Dinakaran.